குமரகம் - நினைக்கும்போதெல்லாம் இனிக்க வைக்கும் படகுவீடுகளும், உப்பங்கழி ஓடைகளும்!

இந்தியப்பயணிகள் மற்றும் சர்வதேச சுற்றுலாப்பயணிகள் அனைவரும் விரும்பி தேடிவரும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றான ‘குமரகம்’ - இயற்கைக்காட்சிகள் நிரம்பி வழியும் ஒரு தீவுக்கூட்டமாகும். கேரளாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியாக கருதப்படும் வேம்பநாட் ஏரியில் பொதிக்கப்பட்டிருக்கும் இந்த ‘குமரகம்’ எனும் தீவுக்கூட்டம் உலகில் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலா ரசிகர்களை படிகம் போன்று ஜொலிக்கும் தன் இயற்கை வனப்பால் ஈர்த்து வருகிறது.

கோட்டயம் மாவட்டத்திலிருந்து 12 கி.மீ தூரத்திலுள்ள இந்த குமரகம் சுற்றுலாத்தலமானது உப்பங்கழி கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கத்தில் இயங்கும் பாரம்பரிய படகுச்சுற்றுலா அம்சங்களுக்காக சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.

பச்சை மரகதம் போல பளிச்சிடும் ஏரிக்கரைகளையும், நிசப்தம் நிரம்பி வழியும் உப்பங்கழி ஓடைகளையும் பெருமையுடன் கொண்டிருக்கும் இந்த குமரகம் தீவுத்திட்டுகளுக்கு பல தரப்பையும் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் ஓய்வையும் புத்துணர்ச்சியையும் நாடி வருகின்றனர்.

கண்ணைக்கவரும் தாவரங்களும் பிரமிக்க வைக்கும் காட்டுயிர் அம்சங்களூம்

குமரகம் பகுதி முழுவதுமே காற்றில் அசைந்தாடும் தென்னை மரங்களும், தென்னந்தோப்புகளும் நெல்வயல்களும் நிறைந்து காணப்படுவது இதன் வசீகரத்தின் ரகசியம் என்றே சொல்லலாம்.

காயல் அல்லது உப்பங்கழி எனப்படும் நீரோட்ட அமைப்புகளை ஒட்டி அமைந்திருப்பதால் பசுமையான மரங்களுடன் ஆரோக்கியத்துக்கு உகந்த மென்மையான தூய்மையான சூழல் இப்பகுதி முழுவதும் நிரம்பி ததும்புகிறது. மழைக்காலம் முடிந்த பிறகு இப்பகுதி முழுதுமே பசுமையின் ஜொலிப்பில் ஒளிர்வது கண்கொள்ளாக் காட்சியாகும்.

பறவை ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் குமரகம் ஒரு பிரசித்தமான பறவைகள் சரணாலயமாக அறியப்படுகிறது. புகலிடப்பறவைகள் குறிப்பிட்ட பருவகாலங்களில் இப்பகுதியை நாடி பெருமளவில் வருகை தருகின்றன.

சைபீரிய கொக்குகளை இங்கு அதிக அளவில் காணலாம். இவை மட்டுமல்லாமல் இந்த ஏரிப்பகுதியில் கடல் மீன்களும் அதிகம் காணப்படுகின்றன. இவற்றில் ‘கறிமீன்’ எனப்படும் ஒரு வகை மீன் பிரசித்தமாக அறியப்படுகிறது.

தனித்தன்மையான கலாச்சாரம் மற்றும் பொருளாதார அடையாளம்

சுற்றுலா சார்ந்த தொழில்கள், மீன் உற்பத்தி மற்றும் விவசாயம் ஆகியவை இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கான தூண்களாக விளங்குகின்றன. எனவே வளத்துடன் கூடிய பாரம்பரிய கலாச்சாரம் இங்குள்ள ஒவ்வொரு அம்சங்களிலும் மிளிர்கிறது.

மீனாச்சில் ஆற்றின் குறுக்கும் நெடுக்குமாக செல்லும் சிக்கலான கால்வாய் நீரோட்ட அமைப்புகள் இப்பகுதியின் நீர்வழிப் போக்குவரத்து மற்றும் நீர்ப்பாசன வசதி போன்ற தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமன்றி, இவ்வகை நீரோட்ட அமைப்புகளின் எழில் தோற்றங்களானது குமரகம் பகுதியை ஒரு வித்தியாசமான, நெஞ்சை அள்ளும் கனவுப் பிரதேசமாக மாற்றி உள்ளன.

மேலும், ஒரே ஒரு நூலின் மூலம் இந்த குமரகம் ஸ்தலமானது இந்தியாவில் மட்டுமல்லாது அயல் நாடுகளிலுள்ள ஏராளமான சுற்றுலா ரசிகர்கள் மத்தியிலும் இன்னும் பிரபல்யமடைந்துவிட்டது.

அந்த நூல் ‘அருந்ததி ராய்’ எழுதிய ‘காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ எனும் நாவல் ஆகும். இலக்கிய உலகில் மிக முக்கியமானதாக கருதப்படும் ‘புக்கர்’ விருதினை அருந்ததி ராய்க்கு பெற்றுத்தந்ததுடன், உலக அளவில் அதிக எண்ணிக்கையில் விற்ற, விற்கப்படும் நூல்களின் வரிசையில் இதுவும் ஒன்று என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.

இந்த நாவலின் கதைக்களம் ‘அய்மேனம் ‘ எனும் கிராமத்தை சுற்றி பின்னப்பட்டிருக்கிறது. இந்த புனைவில் இடம்பெற்றுள்ள உண்மையான ‘அய்மேனம்’ கிராமம் இந்த குமரகம் ஸ்தலத்துக்கு வெகு அருகில் அமைந்துள்ளது. எனவே, அருந்ததி ராயின் நாவல் புகழ்பெற்றபின் இந்த கிராமமும் ஒரு புதிய சுற்றுலாத்தலமாக வடிவெடுத்துவிட்டது.

படகுவீடுகள் : ஒப்பிடமுடியாத சுற்றுலா அனுபவம்!

மற்ற எந்த சுற்றுலாத்தலத்திலும் காணமுடியாத ஒரு அற்புத அதிசயமாக இங்கு காணப்படும் படகுவீடுகள் பிரசித்தி பெற்றுள்ளன. படகு வீடுகளில் பயணம் செய்தவாறு உப்பங்கழி நீரோடைகளின் அமைதியையும் கரைகளில் வழியும் இயற்கை எழிலையும் ரசிப்பதற்காக லட்சக்கணக்கான பயணிகள் வருகை தருகின்றனர்.

தங்கள் சக்திக்கேற்றவாறு பயணிகள் ஒரு முழுநாள் தங்குவதற்காகவோ அல்லது இரவிலும் தங்குவதற்காகவோ விதவிதமான படகுகளில் ஒன்றை தங்கள் சக்திக்கேற்றவாறு வாடகைக்கு அமர்த்திக்கொள்ளலாம்.

முழுக்க முழுக்க மரச்சட்டங்களால் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த படகுவீடுகள் குளிர்பதனவசதி உள்ளிட்ட எல்லா நவின வசதிகளையும் கொண்டுள்ளன. ஒரு படுக்கை அறை முதல் மூன்று படுக்கை அறைகள் வரை மற்றும் நவீன குளியல் அறைகள், சமயலறை, பால்கணி, ஓய்வறை, பொழுது போக்கு சாதனங்கள் என்று எல்லா வகைகளிலும் சொகுசான வீட்டைப்போன்றே இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல் பெருநிறுவனங்களின் ஆலோசனைக்கூட்டங்கள், விடுமுறைப் பொழுதுபோக்கு, தேனிலவுச்சுற்றுலா போன்ற பலவகையான தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய விதவிதமான படகுகள் இங்கு வாடகைக்கு கிடைக்கின்றன. உலகில் வேறெங்குமே பார்க்க முடியாத இந்த படகுவீடுகளை நேரில் பார்த்து அனுபவித்தால் மட்டுமே இவற்றின் அற்புத அம்சங்களை புரிந்துகொள்ளமுடியும்.

குமரகம் சுற்றுலாஸ்தலமானது ஓணம் கொண்டாட்டங்களின்போது இங்கு நடத்தப்படும் படகுப்போட்டிகளுக்காகவும் பிரசித்தி பெற்றுள்ளது. (இந்த முக்கியமான கேரள பண்டிகை ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் கொண்டாடப்படுகிறது).

ஒடி வள்ளம், கொச்சு ஒடி வள்ளம், சுருளான் வள்ளம், இருட்டுக்குத்தி வள்ளம் மற்றும் சுண்டன் வள்ளம் போன்ற பல விதமான வடிவங்கள் மற்றும் அளவுகளில் காட்சியளிக்கும் படகுகள் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றன. போட்டியில் வென்ற படகுகளுக்கு ‘ஷீ நாராயணா எவர் ரோலிங் டிராஃபி’ எனும் வெற்றிக்கோப்பை வழங்கப்படுகிறது.

பலவித ருசிகளின் சொர்க்கம்

குமரகம் பிரதேசத்தில் கிடைக்கும் தனித்தன்மையான உணவு வகைகளில் கேரள உணவுப் பாரம்பரியத்தின் ருசியானது நாவில் நீர் சுரக்க வைக்கும் விதத்தில் பொதிந்துள்ளது. குறிப்பாக இங்கு கிடைக்கும் கடல் உணவு வகைகள் பயணிகள் மத்தியில் மிகப்பிரசித்தி பெற்றுள்ளன.

கறிமீன் பொறிச்சது, செம்மீன் வறுவல், எறால் உலர்த்தியது, மீன் மாய்லி மற்றும் நண்டு வறுவல் போன்றவை இங்கு கிடைக்கும் சுவையான கடல் உணவு வகைகளாகும்.

அற்புதமான வெளிச்சுற்றுலா அம்சங்களும் இயற்கைக்காட்சிகளும்

உப்பங்கழி நீரோடைகள் மற்றும் படகுவீடுகள் போன்ற அம்சங்களுக்கு குமரகம் சுற்றுலாத்தலமானது பிரபல்யமாக அறியப்படுகின்ற போதிலும் இங்கு இதர முக்கியமான வெளிச்சுற்றுலா அம்சங்களும் ஏராளம் நிரம்பியுள்ளன. வரலாற்று மற்றும் பாரம்பரிய பின்னணி கொண்ட பல சுற்றுலா அம்சங்களை பயணிகள் இப்பகுதியில் பார்த்து ரசிக்கலாம்.

சுற்றுலா வளம் நிரம்பிய குமரகம் பகுதி முழுவதும் ‘விசேட சுற்றுலா மண்டல’மாக கேரள மாநில சுற்றுலாத்துறையால் அறிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. வேம்பநாட் ஏரி, அருவிக்குழி நீர்வீழ்ச்சி, குமரகம் உப்பங்கழி மற்றும் குமரகம் கடற்கரை போன்றவை இங்குள்ள முக்கியமான ‘நீர் சார்ந்த இயற்கை எழில் ஸ்தல’ங்களாகும்.

இதர முக்கிய சுற்றுலா அம்சங்களாக ‘பே ஐலண்ட் டிரிஃப்ட்வுட் மியூசியம்’, ஜமா மஸ்ஜித் மற்றும் பத்திரமண்ணல் போன்றவற்றை குறிப்பிடலாம். பெருகி வரும் சுற்றுலாக்கலாச்சாரம் இந்தப்பகுதியின் பாரம்பரிய ஆன்மிக செயல்பாடுகளை எவ்வகையிலும் பாதிக்கவில்லை என்பதால், இங்குள்ள கோயில்களும் தேவாலயங்களும் அவற்றின் சமூக முக்கியத்துவத்தை எவ்வகையிலும் இழக்காமல் பொலிவுடன் காட்சியளிக்கின்றன.

திருநாக்கரா மஹாதேவா கோயில், ஏட்டுமானூர் மஹாதேவா கோயில், செரியபள்ளி செயிண்ட் மேரி தேவாலயம், அதிரம்புழா செயிண்ட் மேரி தேவாலயம் மற்றும் வைக்கம் மஹாதேவா கோயில் போன்றவற்றை இங்குள்ள முக்கிய கோயில்கள் மற்றும் தேவாலயங்களாக குறிப்பிடலாம்.

போக்குவரத்தும் நன்று; பருவநிலையும் நன்று!

நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் குமரகம் சுற்றுலாத்தலத்தை அடைய சாலை, ரயில் மற்றும் விமான மார்க்கமாக போக்குவரத்து வசதிகள் நல்ல முறையில் உள்ளன. தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மூலம் ஒருங்கிணைந்த சுற்றுலாச்சேவைகள் பல்வேறு கட்டணங்களில், பல்வேறு வசதிகள் மற்றும் கால அளவுகளில் அளிக்கப்படுகின்றன.

மழைக்காலத்தில் குமரகம் கணிசமான மழைப்பொழிவை பெறுகிறது. புவியியல் ரீதியாக வெப்ப மண்டலப்பிரதேசத்தில் இடம் பெற்றுள்ள இது சுற்றுலாவுக்கு உகந்த தட்பவெப்பநிலையை கொண்டுள்ளது.

ரம்மியமான தீவுத்திட்டுகள், வித்தியாசமான உணவு ருசிகள், ஏராளமான சுற்றுலா அம்சங்கள், கனவுக்காட்சி போன்ற படகுவீடுகள் மற்றும் சொக்க வைக்கும் இயற்கை எழிற்காட்சிகள் போன்றவை நிரம்பியுள்ள குமரகம் சுற்றுலாத்தலமானது பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த பயணிகளை கவர்ந்து இழுத்து அவர்களை புதிய உற்சாகத்துடனும் சக்தியுடனும் ஊர் திரும்ப வைக்கிறது.

Please Wait while comments are loading...