Search
 • Follow NativePlanet
Share

மதுரை – சங்கம் வளர்த்த தமிழ்ப்பாரம்பரிய நகரம்!

57

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு - வேண்டாம் அறிமுகம் என்பதை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்க்குடியினர் அறிவர். எனினும், தமிழ் நாட்டு சுற்றுலாத்தலங்களை அறிமுகப்படுத்தும் இந்த பக்கங்களில் மதுரை மாநகரின் பெருமைகளும், முக்கிய சுற்றுலா அம்சங்களும் சுருக்கமாக தரப்படுகின்றன.

வைகை ஆற்றின் கரையில் ‘மதுரை’ எனும் இந்த புராதன தமிழ் நாகரிக நகரம் எழும்பியுள்ளது. இதன் வடக்கில் சிறுமலை மலைத்தொடர்களும்,  தெற்கில் நாகமலை மலைத்தொடர்களும் அமைந்திருக்கின்றன.

மதுரம் எனும் சொல்லிலிருந்து மதுரை என்ற பெயர் வந்ததாக ஒரு ஐதீக கருத்து நிலவுகிறது. அதாவது மதுரம் எனும் புனித தேன் துளிகளை இந்த நகரத்தின் மீது சிவபெருமான் தெளித்ததாக ஐதீகம்.

நான்மானக்கூடல், கிழக்கத்திய ஏதென்ஸ், திருவிழா நகரம், தாமரை நகரம் மற்றும் தூங்கா நகரம் எனப்படும் பல்வேறு சிறப்புப்பெயர்களை இந்த மதுரை மாநகரம் பெற்றுள்ளது.

ஒவ்வொரு பெயரும் மதுரையின் ஒவ்வொரு இயல்பை சுட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எந்நேரமும் அதாவது 24 மணி நேரமும் சந்தடி நிறந்த நகரம் என்பதால் இதற்கு தூங்கா நகரம் என்ற பெயர் வந்துள்ளது.

இந்த கலாச்சாரத்தை இன்றும் மதுரையில் கண்கூடாக காணலாம். இரவின் எந்த நேரத்திலும் உணவுக்கூடங்கள் திறந்திருப்பதும், போக்குவரத்து வசதிகள் கிடைப்பதும் வேறெந்த நகரத்திலும் காணக்கிடைக்காத காட்சிகளாகும். தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாநகரம் என்ற பெருமையை தற்போது மதுரை பெற்றுள்ளது.

வரலாற்றுப்பின்னணி

‘‘பதிஎழு அறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர் மாநகர் கண்டு ஆங்குஅறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய…”

என்று சிலப்பதிகாரத்தின் வைர வரிகள் இந்த மதுரை மாநகரத்தின் மாண்பை  வர்ணித்து நீள்கின்றன. தமிழ் மொழியின் ஒப்பற்ற காவியமான சிலப்பதிகாரத்தின் கதைக்களமாக மதுரை மாநகரம் விரிவாக கையாளப்பட்டிருப்பதால் அது ஒரு வரலாற்று ஆவணம் போன்றே மதுரை மண் மற்றும் தமிழ் பாரம்பரியத்தின் அற வேர்களை அடையாளம் காண்பிக்கிறது.

பொருள் புரிந்தால் பிரமிக்க வைக்கும் எண்ணடங்கா மானுட உன்னதங்கள் இந்த சிலப்பதிகாரத்தில் பொதிந்திருப்பது தமிழின் ஒரு பெருமைக்குரிய பரிமாணம் எனில் அது நிச்சயம் மிகையில்லை.

அப்படிப்பட்ட காவியம் மதுரையைப்பற்றி அத்தனை உயர்வாக பல இடங்களில் வர்ணித்துள்ளது. இது தவிர மதுரைக்காஞ்சி எனும் காப்பிய நூலும் புராதன மதுரை மாநகரின் பெருமைகளை விரிவான செய்யுள்கள் வாயிலாக எடுத்துரைக்கிறது.

‘‘வகைபெற எழுந்து வானம் மூழ்கிச் சில்காற்று இசைக்கும் பல்புழை நல்இல்,யாறு கிடந்தன்ன அகல்நெடுந் தெருவில்…

என்று மதுரைக்காஞ்சி அக்காலத்திய மதுரை நகரின் பிரம்மாண்டத்தை வர்ணிப்பதை வாசிக்கும்போது நமக்கு பண்டைய மதுரையை கண்முன் கற்பனை செய்வதில் சிரமம் இருக்காது.

கி.மு முதலாம் நுற்றாண்டு முதல் கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை சங்ககால பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் அவர்களது மஹோன்னத தலைநகரமாக, தமிழ் நாகரிகத்தின் அடையாளமாக மதுரை மாநகர் கீர்த்தியுடன் திகழ்ந்திருக்கிறது.  

கி.பி 302ம் ஆண்டிலேயே மெகஸ்தனிஸ் மதுரைக்கு விஜயம் செய்து தான் கண்டவற்றை தனது பயணக்குறிப்புகளில் மதுரை என்ற பெயரையே பயன்படுத்தி பதிந்துள்ளார்.

இபின் பதுதா எனும் மற்றொரு கடற்பயணி மதுரையை கோட்டை சூழ்ந்த நகரமாக குறிப்பிட்டுள்ளார். அர்த்தசாஸ்திரத்தை இயற்றிய கௌடில்யர் மதுரை என்றே தனது நூலில் குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும், இலங்கையின் மஹா வம்சம் எனும் காவியத்தில் மதுரை இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் பூலாங்குறிச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள கி.பி 500 ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்குறிப்பில் மதுரை என்ற சொல்லாட்சியை  ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இப்படி கல்வேட்டாய், காவியமாய், குறிப்புகளாய் பதிந்து கிடக்கின்றன மதுரை நகர நாகரிக பாரம்பரியத்தின் சாட்சிகளும் சான்றுகளும்.  கி.மு முதலாம் நூற்றாண்டு துவங்கி கி.பி 3ம் நூற்றாண்டு வரை சங்கப் பாண்டிய மன்னர்களின் பொற்காலம் மதுரையில் நிலவி வந்திருக்கிறது. அவர்களுக்கு பின் களப்பிரர்கள் எனும் வம்சத்தார் மதுரை பகுதியை 6ம் நூற்றாண்டு வரை ஆண்டுள்ளனர்.

களப்பிரர்கள் ஆட்சி முடிவுற்றபின் இடைக்கால பாண்டியர்கள், முற்கால சோழர்கள், பிற்கால சோழர்கள், கடைக்கால பாண்டியர்கள், மதுரை சுல்தான் வம்சம் , விஜயநகர வம்சம், நாயக்கர் வம்சம், மராட்டிய வம்சம், ஆற்காட் நவாப் ஆட்சி என்று மாறி மாறி வந்த மதுரையின் ஆட்சியதிகாரம் இறுதியில் ஆங்கிலேயர் வசம் 1801ம் ஆண்டில்  வந்தடைந்தது. அதையடுத்து இந்திய சுதந்திரப்போராட்டங்களிலும் மதுரை மண் தனது கணிசமான பங்களிப்பை தந்துள்ளது.

முக்கிய சுதந்திர போராட்ட தலைவர்களான NMR சுப்பராமன், வைத்யநாத ஐயர், பாலகிருஷ்ணன் செட்டியார், பீர் முஹம்மத், பத்மாசனி அம்மாள், சிதம்பர பாரதி, மீர் இப்ராஹிம் சாஹிப் மற்றும் ஜார்ஜ் ஜோசஃப் ஆகியோர் மதுரையில் தோன்றியுள்ளனர்.

மதுரை பகுதியில் கடைமட்ட விவசாய தொழிலாளர்களின் வறுமைத்தோற்றத்தை கண்ணுற்ற பிறகே காந்திஜி தனது உடைகளை துறந்து இடுப்பு வேட்டியை மட்டுமே அணிய ஆரம்பித்தார் என்பது ஒரு துணுக்குற வைக்கும் வரலாற்று உண்மையாகும்.

விசேஷ அம்சங்கள்

மதுரை மாநகரில் பல்வேறு மதங்களை சார்ந்தோரும் ஒற்றுமையுடன் வசிக்கின்றனர். பல்வேறு இனத்தாரின் பாரம்பரிய அம்சங்கள் இந்நகரில் கலந்து வேரூன்றி கிடக்கின்றன.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், கோரிப்பாளையம் தர்க்கா மற்றும் செயின் மேரி கதீட்ரல் தேவாலயம் போன்றவை இங்குள்ள முக்கியமான ஆன்மீக அம்சங்களாகும்.

காந்தி மியூசியம், கூடல் அழகர் கோயில், காஜிமார் பெரிய மசூதி, திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, அழகர் கோயில், வைகை அணை மற்றும் அதிசயம் தீம் பார்க் போன்றவை மதுரை பகுதியில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.

சித்திரைத்திருவிழா மதுரை மாநகரின் முக்கிய திருவிழாவாக புகழ் பெற்றுள்ளது. இது ஏப்ரல் மே மாதங்களில் கொண்டாடப்படுகிறது. மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெறும் இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.

மகுடாபிஷேகம், தேர் உற்சவம், மீனாட்சிகல்யாணம் போன்ற விரிவான சடங்கு நிகழ்ச்சிகள் இத்திருவிழாவின்போது  நிகழ்த்தப்படுகின்றன. மஹாவிஷ்ணுவின் அவதாரமான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் உற்சவத்தோடு இந்த சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

ஜனவரி பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படும் தெப்போற்சவ திருவிழா மற்றும் செப்டம்பர் மாதத்தின்போது கொண்டாடப்படும் ஆவணிமூலம் திருவிழா போன்றவையும் மதுரை மாநகரின் முக்கியமான திருவிழாக்களாகும்.

இவை தவிர ஜல்லிக்கட்டு எனும் பாரம்பரியமான காளைபிடி விளையாட்டும் இப்பகுதியில் வெகுபிரசித்தமான அடையாளமாக திகழ்கிறது. பொங்கல் பண்டிகைக்காலத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன.

மேலும், மதுரைக்கு விஜயம் செய்யும் பயணிகள் பட்டுப்புடவைகள், மரக்கைவினைப்பொருட்கள் மற்றும் காதி பருத்தி உடைகள் மற்றும் சிலைகள் போன்றவற்றை வாங்கிச்செல்லலாம்.

பயண வசதிகள்

மதுரை மாநரம் நாட்டின் பல்வேறு பகுதிகளுடனும் நல்ல முறையில் போக்குவரத்து வசதிகளால் இணைக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்திலிருந்து டெல்லி, சென்னை, மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு நேரடி விமான சேவைகள் உள்ளன.

இதுதவிர, மாநிலத்தலைநகர் சென்னையில் சர்வதேச விமான நிலையமும் அமைந்துள்ளது. ரயில் மார்க்கமாகவும் சென்னை, மும்பை, கொல்கத்தா,மைசூர், மற்றும் நகரங்களுடனும் சிறப்பான ரயில் சேவைகளால் மதுரை மாநகரம் இணைக்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் சென்னை, கோயம்புத்தூர், திருவனந்தபுரம், திருச்சி மற்றும் பெங்களூரிலிருந்து தனியார் சொகுசு போக்குவரத்து சேவைகளும் அதிக அளவில் மதுரைக்கு இயக்கப்படுகின்றன.

பருவநிலை

மதுரைப்பகுதியில் பருவநிலை பெரும்பாலும் வறட்சியுடனும், உஷ்ணத்துடன் காணப்படுகிறது. இருப்பினும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் சுற்றுலாவுக்கு உகந்த சூழலைக்கொண்டுள்ளன.

இம்மாதங்களில் இதமான குளுமையான சூழல் நிலவுகிறது. பயணிகள் கோயில்களையும் இதர நகரப்பகுதிகளுக்கும் சுற்றிப்பார்க்க இக்காலம் மிகவும் ஏற்றது.

மதுரை சிறப்பு

மதுரை வானிலை

சிறந்த காலநிலை மதுரை

 • Jan
 • Feb
 • Mar
 • Apr
 • May
 • Jun
 • July
 • Aug
 • Sep
 • Oct
 • Nov
 • Dec

எப்படி அடைவது மதுரை

 • சாலை வழியாக
  தேசிய நெடுஞ்சாலைகளான NH7, NH 45B, NH 49 மற்றும் NH 20 ஆகியவை மதுரை மாநகரை பல்வேறு திசைகளில் உள்ள நகரங்களுடன் இணைக்கின்றன. அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் தமிழ்நாட்டில் உள்ள எல்லா முக்கிய நகரங்களுக்கும் மதுரையிலிருந்து பேருந்துகளை இயக்குகிறது. சென்னை, கோயம்புத்தூர், திருவனந்தபுரம், திருச்சி மற்றும் பெங்களூரிலிருந்து தனியார் சொகுசு போக்குவரத்து சேவைகளும் இயக்கப்படுகின்றன.
  திசைகளைத் தேட
 • ரயில் மூலம்
  மதுரை ரயில் சந்திப்பு தென்னிந்தியாவில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் முக்கியமான நகரங்களான டெல்லி, சென்னை, கொல்கத்தா, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் போன்றவற்றுக்கு ரயில் சேவைகளைக் கொண்டுள்ளது.
  திசைகளைத் தேட
 • விமானம் மூலம்
  மதுரை விமான நிலையம் நகரமையத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கிருந்து டெல்லி, சென்னை, மற்றும் பெங்களூருக்கு நேரடி விமான சேவைகள் உள்ளன. மாநிலத்தலைநகர் சென்னையில் சர்வதேச விமான நிலையம் செயல்படுவது யாவரும் அறிந்ததே.
  திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
27 Jun,Mon
Return On
28 Jun,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
27 Jun,Mon
Check Out
28 Jun,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
27 Jun,Mon
Return On
28 Jun,Tue