டெல்லி – அன்றும் இன்றும் இந்தியாவின் சக்தி மையம்

மானுட வரலாற்றில் மஹோன்னதமான கலாச்சார செழுமையை கொண்டுள்ள - பல்வேறு ராஜவம்ச நாகரிகங்களின் தொட்டிலாக  விளங்கிய - பரந்த இந்திய தேசத்தில் சுற்றுலாப்பயணம் மேற்கொள்வதே ஒரு உன்னதமான அனுபவம் எனில், அதன் தலைநகரமாக விளங்கும் டெல்லி மாநகரத்துக்கு விஜயம் செய்வதும் ஒரு மறக்க முடியாத வாழ்நாள் அனுபவமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பல அதிசயங்களை தன்னுள் பொதித்திருக்கும் அற்புத பொக்கிஷப்பெட்டி போன்று ‘புராதன’த்தையும் ‘நவீன’த்தையும் ஒருங்கே கொண்டுள்ள இந்த ‘டெல்லி’ மாநகரமானது அரசியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச பெருநகரங்களில் ஒன்றாக கம்பீரமாக வீற்றிருக்கிறது.

ஹிந்தியில் ‘டில்லி’ என்று உச்சரிக்கப்படும் ‘டெல்லி’ நகரமும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் என்.சி.டி (NCT – NATIONAL CAPITAL TERRITORY) எனப்படும் ‘தேசிய தலைநகர பிரதேசம்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒரு விசேட திருத்தம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 1991ம் ஆண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் தலைநகரமான புதுதில்லி நகரம் இந்த NCT பகுதியின்  அங்கமாக உள்ளது. இந்தியாவில் மும்பை மாநகரத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிக  மக்கள் தொகை கொண்ட மாநகரமாக டெல்லி விளங்குகிறது.

புது தில்லி மற்றும் பழைய டெல்லி என்ற இரண்டு நகர்ப்பகுதிகளை அடக்கியுள்ள டெல்லி நகரமானது அந்த பெயர்களுக்கேற்ப மஹோன்னதமான வரலாற்று அடையாளங்களையும், அசர வைக்கும் அதி நவீன அம்சங்களையும் தனது தனித்தன்மையான சிறப்பம்சமாக கொண்டு காட்சியளிக்கிறது.

மேலும் இது இந்திய வல்லரசின் அரசியல் செயல்பாடுகளுக்கான மையக்கேந்திரமாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு இந்திய சுற்றுலா ஆர்வலரும் தம் வாழ்நாளில் ஒருமுறை விஜயம் செய்தே ஆகவேண்டிய முக்கிய நகரங்களில் இந்த டெல்லி மாநகரமும் ஒன்று என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமேயில்லை.

புவியியல் அமைப்பும் பருவநிலையும்

இந்தியாவின் வடபகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 0 – 125 அடி உயரம் கொண்டதாக டெல்லி மாநகரம் வீற்றுள்ளது. கிழக்கில் உத்தரப்பிரதேச மாநிலத்தையும், தெற்கு, மேற்கு, வடக்கு பகுதிகளில் ஹரியாணா மாநிலத்தையும் இது எல்லைகளாக கொண்டுள்ளது. டெல்லி மலைத்தொடர்கள் மற்றும் யமுனை நதி படுகைப்பகுதி ஆகிய இரண்டும் டெல்லி நகரத்தின் புவியியல் அமைப்பில் முக்கிய இயற்கை அம்சங்களாக பிரதான இடம் வகிக்கின்றன.  யமுனை நதியானது டெல்லி நகரத்தின் வழியே ஓடும் பிரசித்தமான நதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

டெல்லி மாநகரின் பருவநிலை

ஈரப்பதம் நிறைந்த உபவெப்ப மண்டல பருவநிலையை டெல்லி மாநகரம் கொண்டுள்ளது. கோடைக்காலம் மிக நீண்டதாகவும் கடுமையான வெப்பம் மற்றும் ஈரப்பதத்துடனும் காணப்படுகிறது.

அதே சமயம் குளிர்காலம் உறைய வைக்கும் அபரிமிதமான குளிருடன் விளங்குகிறது.குளிர்கால மாதங்களில் டெல்லி முழுவதுமே பனிபடர்ந்து காட்சியளிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாத கடைசி வாரம் வரை இங்கு கோடைக்காலம் நீடிக்கிறது. அதைத்தொடர்ந்து ஜுன் முதல் அக்டோபர் வரை மழைக்காலம் நிலவுகிறது. மழைக்காலத்தை தொடர்ந்து டெல்லியின் மற்றொரு குண விசேஷமாக அறியப்படும் மிகக் கடுமையான குளிர்காலம் நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் வரை நீடிக்கிறது.

இந்திய தலைநகரத்தின் கலாச்சார செழுமை

பல முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் நடந்தேறிய  நீண்ட பின்னணியை கொண்டுள்ள டெல்லி மாநகரம் ஒரு ஆழமான வரலாற்று பரிணாமத்தின் மையப்புள்ளியாக விசேஷமான பன்முகத்தன்மை கொண்ட கலாச்சார அடையாளத்தை கொண்டதாக ஜொலிக்கிறது. 

வார்த்தைகளில் அடக்க முடியாத அளவுக்கு விரிவானதொரு கதம்ப கலாச்சாரத்தை  இந்த மாநகரம் தனித்தன்மையுடன் பிரதிபலிக்கிறது.  தீபாவளி, மஹாவீர் ஜயந்தி, ஹோலி, லோரி, கிருஷ்ண ஜன்மாஷ்டமி, குரு நானக் ஜயந்தி போன்ற திருவிழாக்கள் இந்த மாநகரத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இவை தவிர குதுப் திருவிழா, வசந்த் பஞ்சமி மற்றும் சர்வதேச புத்தக சந்தை, சர்வதேச மாம்பழ சந்தை போன்றவையும் குறிப்பிடத்தக்கவை.

முகாலயர்களின் உணவுக்கலாச்சாரம் உதித்த மண் என்பதால் இந்த நகரத்தில் கிடைக்கும் பெரும்பாலான உணவுத்தயாரிப்புகளில் முகலாயபாணி தயாரிப்பு முறையே காணப்படுகிறது.

இருப்பினும் வழக்கமான இந்திய பாரம்பரிய உணவுகளும் இங்கு தனித்தன்மையான சுவைகளில் மிகுதியாக கிடைக்கின்றன. கடாய் சிக்கன், பட்டர் சிக்கன், சாட் உணவுகள், ஜிலேபி, கச்சோரி மற்றும் லஸ்ஸி போன்றவை டெல்லி நகர மக்களின் முக்கிய உணவுப்பண்டங்களாக விளங்குகின்றன.

டெல்லி மாநகரத்தில் பார்க்க வேண்டிய இடங்கள்

கடந்து போன ஒரு மஹோன்னத வரலாற்றுக்காலத்தின் அழிக்க முடியாத பாதத் தடங்களாக டெல்லி மாநகரில் எண்ணற்ற கட்டிடங்களும், மாளிகைகளும், சின்னங்களும் நிரம்பி வழிகின்றன.

குதுப் மினார், செங்கோட்டை போன்ற அற்புத நிர்மாணங்களுடன் இந்தியா கேட், லோட்டஸ் டெம்பிள் எனப்படும் தாமரைக்கோயில், அக்ஷர்தாம் கோயில் போன்றவையும் இங்கு மிகப்பிரசித்தமான சுற்றுலா அம்சங்களாக பயணிகளை ஈர்க்கின்றன.

அது மட்டுமல்லாமல் உலகில் கிடைக்கும் எந்த ஒரு பொருளையும் வாங்கி விடலாம் என்று சொல்லும்படியான ‘ஷாப்பிங் செண்டர்’ என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.

வெறும் கலைப்பொருட்கள் ஆடைகள்  இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு சிறிய இயந்திரங்களிலிருந்து பெரிய இயந்திரங்கள் வரை பலவகையான தொழில் நுட்பம் சார்ந்த சாதனங்களும் இங்கு கிடைக்கின்றன.

இந்திய அரசியலின் தலைமைக்களமாக இருப்பது டெல்லி மாநகரத்தின் மற்றொரு முக்கிய சிறப்பம்சம் என்பதும் யாவரும் அறிந்ததே. இந்திய அரசியல் அமைப்பின் தூணாக விளங்கும் பாராளுமன்றம் எனப்படும் பார்லிமெண்ட் அல்லது மக்களவை கூடம், ராஷ்டிரபதி பவன் எனப்படும் ஜனாதிபதி மாளிகை போன்றவை அமைந்திருக்கும்  அரசியல் மையக்கேந்திரம் என்ற பெருமையையும் டெல்லி பெற்றுள்ளது.

மஹாத்மா காந்தி தகனம் செய்யப்பட்ட ராஜ்காட் எனும் ஸ்தலமும் டெல்லியில் விஜயம் செய்ய வேண்டிய முக்கியமான நினைவுத்தலமாக அமைந்துள்ளது.

இவைதான் இங்குள்ளன - என்று அறுதியிட்டு சொல்ல முடியாத அளவுக்கு ஏராளமான சுற்றுலாஸ்தலங்களும், வரலாற்றுச்சின்னங்களும் டெல்லி மாநகரம் முழுமையும் நிரம்பி காட்சியளிக்கின்றன.

சொல்லப்போனால் வரலாற்று கால இந்தியாவில் பல ராஜவம்சங்களின் தலைநகரமாக விளங்கிய இந்த மஹோன்னத பெருநகரம், இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களை போல அடையாளங்கள் அழிந்த ஒன்றாக காட்சியளிக்காமல் இன்றும் உயிர் வாழும் வரலாற்று நகரமாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.

இந்திய வரலாறு மற்றும் பாரம்பரியம் போன்றவற்றில் ஆர்வம் உள்ள ரசிகர்கள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய ஒரு முக்கிய நகரம் டெல்லி என்பதில் சந்தேகமே இல்லை.

செங்கோட்டை, குதுப் மினார் தவிர கலையம்சம் நிரம்பிய கல்லறை நினைவுச்சின்னங்கள், படிக்கிணறு, கம்பீர மாளிகைகள் போன்றவை இங்கு பயணிகளுக்காக காத்திருக்கின்றன.

உண்மையில் டெல்லி மாநகரம் பற்றிய விரிவான அல்லது சுருக்கமான அறிமுகத்தை தருவது இயலாத காரியம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இங்கு வரலாற்று யுகத்தின் சான்றுகளும் சின்னங்களும் காலத்தே நீடித்து நின்று கதைகள் பல சொல்கின்றன.

எனவே நேரில் பார்த்தால் மட்டுமே இதன் பழமையையும் இதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் எண்ணற்ற வரலாற்று சங்கதிகளையும் புரிந்துகொள்ள முடியும். டெல்லியை ஒருமுறை முழுதும் சுற்றிப்பார்த்துவிட்டு திரும்பும்போது உங்கள் மனதில் இந்தியாவைப்பற்றிய புதிய புரிதலுடனும்,  பெருமையுடனும் திரும்புவீர்கள் என்பது மட்டும் நிச்சயம்.

மேலும், இந்திய தேசத்தின் பிரமிக்க வைக்கும் வரலாற்று பொற்காலம் பற்றிய மலைப்பை ஒவ்வொரு சுற்றுலாப்பயணியின் மனதிலும் இந்த ‘டெல்லி மாநகரம்’ உண்டாக்க தவறுவதில்லை என்பதும் உண்மை.

Please Wait while comments are loading...