ராஷ்டிரபதி பவன், டெல்லி

இந்தியாவின் கௌரவச்சின்னமாகவும் இறையாண்மையின் இருப்பிடமாகவும் இந்த ராஷ்டிரபதி பவன் எனப்படும் குடியரசுத்தலைவர் மாளிகை விளங்குகிறது. தனித்தன்மையான கட்டிடக்கலை அம்சங்களோடு காட்சியளிக்கும் இந்த மாளிகை இந்திய குடியரசுத்தலைவரின் அதிகாரபூர்வ இல்லமாக திகழ்கிறது.

காலனிய ஆட்சியின்போது இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டபோது இந்த பிரம்மாண்ட மாளிகை உருவாக்கப்பட்டது. ஆங்கிலேய வைசிராய் வசிப்பதற்கான மாளிகையாக இந்திய முகலாய கட்டிடக்கலை மற்றும் ஐரோப்பிய பாணி அம்சங்களை கலந்து இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இரட்டை நிறங்கொண்ட மணற்பாறைக்கற்களால் எழுப்பப்பட்டிருக்கும் இந்த மாளிகையின் உச்சியில் சாஞ்சி ஸ்தூபத்தை போன்ற அலங்கார குமிழ் கோபுரம் நுணுக்கமான கலையம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெகு தூரத்திலிருந்தும் ராஷ்டிரபதி பவனின் இந்த குமிழ் கோபுர அமைப்பை காணமுடிகிறது.

ராஷ்டிரபதி பவனின் தர்பார் மண்டபம் பல வண்ணங்களில் பளிங்குக்கற்கள் பதிக்கப்பட்டு ஆடம்பரமாக காட்சியளிக்கிறது. அசோகர் மண்டபம் எனும் கூடம் வித்தியாசமான முறையில் பாரசீக பாணியில் அமைந்த கூரைகளையும் மரத்தாலான தரை அமைப்பையும் கொண்டுள்ளது.

இந்த மாளிகையின் ஒட்டுமொத்த அமைப்பில் காணப்படும் ஜன்னல்கள், கூரைகள், மாடங்கள் போன்றவை கலைநுணுக்கத்தோடு உருவாக்கப்பட்டிருக்கின்றன.

குடியரசுத்தலைவரின் குடியிருப்பில் ஒரு பெரிய வரவேற்புக்கூடம், உணவுக்கூடம், விருந்து மண்டபம், டென்னிஸ் மைதானம், போலோ மைதானம், கிரிக்கெட் மைதானம் மற்றும் ஒரு அருங்காட்சியகம் ஆகியவை அடங்கியுள்ளன.

நான்கு தளங்களை கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த மாளிகையில் 340 அறைகள் உள்ளன. மேலும், இந்த மாளிகையின் கட்டமைப்பில் இரும்பு பயன்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாளிகையின் முன்பகுதியில் அமைந்திருக்கும் தூண்களில் கோயில் மணிகள் போன்ற அமைப்புகளும் காணப்படுகின்றன. ஹிந்து, பௌத்த மற்றும் ஜைன மரபுகளை குறிப்பது போல் இந்த மணிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ராஷ்டிரபதி பவன் வளாகத்தில் முகாலய மற்றும் ஐரோப்பிய அம்சங்கள் கலந்த ஒரு தோட்டப்பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. 13 ஏக்கர் பரப்பளவில் பரந்து அமைந்திருக்கும் இந்த தோட்டத்தில் சில அற்புதமான அயல் தேசத்து மலர்ச்செடிகள் பூத்து குலுங்குகின்றன.

அற்புதமான கட்டிடக்கலை அழகுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த மாளிகை இந்தியப்பயணிகள் அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய அம்சங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது.

Please Wait while comments are loading...