செங்கோட்டை, டெல்லி

டெல்லி என்றாலே செங்கோட்டை (லால் குய்லா) என்று சொல்லும் அளவுக்கு இன்று டெல்லியின் அடையாளமாக திகழும் இந்த வரலாற்றுச்சின்னம் 17ம் நூற்றாண்டின் மத்தியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

ஷாஜஹானாபாத் என்று உருவாக்கப்பட்ட ஒரு முகலாய தலைநகரத்தின் மையக்கேந்திரமாக, ‘குய்லா இ மொயல்லா’ என்ற பெயருடன் இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது.

இந்த பெயருக்கு மேன்மை மிக்க கோட்டை என்பது பொருளாகும். உஸ்தாத் அஹமத் எனும் கட்டிடக்கலைஞரால் வடிவமைக்கப்பட்ட இக்கோட்டை 1639ம் ஆண்டு கட்டத்துவங்கப்பட்டு 1648ம் ஆண்டில் முடிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் 19ம் நூற்றாண்டு வரை இக்கோட்டையில் புதிய கட்டுமானங்களும் அவ்வப்போது சேர்க்கப்பட்டிருக்கின்றன.

சிவப்புக்கற்களால் கட்டப்பட்டு அப்பழுக்கற்ற தோற்றத்தை கொண்டுள்ள இந்த பிரம்மாண்ட கோட்டை உலகின் முக்கியமான ராஜகோட்டைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது.

2.41 கி.மீ நீளத்துக்கு இந்த கோட்டை நீண்டுள்ளது. லாகூர் கேட் மற்றும் இந்தியா கேட் என்ற இரண்டு பிரதான வாயில்கள் இந்த கோட்டைக்கான வாசல்களாக அமைந்துள்ளன.

லாகூர் கேட் எனும் நுழைவாயில் கோட்டை வளாகத்தில் அரண்மனை குடும்பத்தினர் பயன்படுத்திய சட்டா சௌக் எனப்படும் பிரத்யேக அங்காடித்தெருவில் சென்று முடிகிறது.

யுனெஸ்கோ அமைப்பின் மூலம் சர்வதேச பாரம்பரிய ஸ்தலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பெருமைக்குரிய அந்தஸ்தையும் செங்கோட்டை பெற்றுள்ளது. இந்த கோட்டைக்குள்ளே பல அற்புதமான கட்டிடங்கள் அமைந்துள்ளன.

இவற்றில் திவான் இ ஆம் என்பது வெகு சிறப்பான மாளிகையாக கருதப்படுகிறது. இந்த மாளிகைக்கூடம் மன்னர் பொதுமக்களை சந்தித்து குறைகளை விசாரிக்கும் ராஜாங்க மண்டபமாக இருந்துள்ளது.

திவான் இ காஸ் எனும் அரண்மனை மாளிகை மன்னர் முக்கியமான ஆலோசனைகள் மற்றும் அவைக்கூட்டங்களை நடத்தும் கூடமாக இருந்துள்ளது. இது தவிர மோதி மஸ்ஜித் எனும் மசூதி ஒன்றும் பின்னாளில் இந்த கோட்டைக்குள் கட்டப்பட்டுள்ளது. ஔரங்கசீப் மன்னரால் தனது சொந்த உபயோகத்துக்காக இந்த மசூதி கட்டப்பட்டிருக்கிறது.

மூடப்பட்ட பஜார் அல்லது கடைத்தெரு என்ற பொருளைத்தரும் ‘சட்டா சௌக்’  என்ற பெயரில் அழைக்கப்பட்ட பகுதியானது முகலாயர் ஆட்சியின்போது அரண்மனை குடும்பத்தினர் தனிப்பட்ட முறையில் பட்டு, ஆபரணங்கள் மற்றும் இதர பொருட்களை வாங்கும் இடமாக இருந்துள்ளது.

திவான் இ ஆம் என்றழைக்கப்பட்ட மாளிகைக்கூடமானது ஷாஜஹான் மன்னர் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கும் மண்டபமாக அல்லது மக்கள் குறை தீர்ப்பு மன்றமாக விளங்கியிருக்கிறது. ஒரு குடை போன்ற விதான அமைப்புக்கு கீழ் இருந்த மாடத்தில் (பலகணி) அமர்ந்தபடி குடிமக்களின் விண்ணப்பங்களை மன்னர் நேரில் கேட்டுள்ளார்.

காஸ் மஹால் எனப்படும் திவான் இ காஸ் மாளிகையானது மன்னரின் அந்தரங்க ஆலோசனை அறை மற்றும் சந்திப்பு கூடமாக செங்கோட்டையின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு பிரதானிகள் மற்றும் அரசு விருந்தினர்களுடன் ஷாஜஹான் மன்னர் ஆலோசனைகள் மற்றும் சந்திப்புகளை நிகழ்த்தியதாக சொல்லப்படுகிறது.

மோதி மஸ்ஜித் எனும் மசூதியானது செங்கோட்டையின் உள்ளே  ஹமாம் என்றழைக்கப்பட்ட ராஜகுளியல் அறைகளுக்கு மேற்கே அமைந்துள்ளது.

மும்தாஜ் மஹால் என்பது செங்கோட்டையின் அந்தப்புர பகுதியில் அரண்மனை பெண்களுக்காக அமைக்கப்பட்டிருந்த மாளிகையாகும். இது தற்போது ஒரு அருங்காட்சியகமாக செயல்படுகிறது.

இந்த அரண்மனை கோட்டையின் உள்ளே வரிசையாக அமைந்திருக்கும் அரண்மனைகளில் கடைசியானதாக தென்கோடியில் உள்ளது. செங்கோட்டையில் ஷாஜஹான் மன்னரால் கட்டப்பட்ட ஆறு அரண்மனை மாளிகைகளில் இந்த மும்தாஜ் மஹலும் ஒன்று.

நக்கர் கானா எனப்படும் அமைப்பு ரங்க் மஹால் எனும் மாளிகைக்கான வாசலாகவும் உள்ளது. மூன்று அடுக்குகளுடன் காணப்படும் இந்த நக்கர் கானா மாளிகையில் ஒரு நாளின் ஐந்து நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் இசைக்கருவிகள் இசைக்கப்பட்டிருக்கின்றன.  அரண்மனைக்கு வருகை தருபவர்கள் யானை மீதிருந்து கீழே இறங்கும் இடம் என்பதால் இது ‘ஹாத்திபோல்’ என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

ரங்க் மஹால் என்றழைக்கப்பட்ட மாளிகையானது செங்கோட்டையின் ‘வண்ணமய மாளிகை’ என்று பெயர் பெற்றுள்ளது. இதற்கு பேஹம் மஹால் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்த அரண்மனையில்தான் ஷாஜஹான் மன்னரின் மனைவியர் மற்றும் துணைவியர் வசித்துள்ளனர்.

தற்போது செங்கோட்டைவளாகத்தின் உள்ளே முகாலயர் கால அம்சங்கள் மற்றும் வரலாற்றை விளக்கும் திரைக்காட்சிகள் தினமும் மாலை நேரத்தில் பயணிகள் மற்றும் பார்வையாளர்களுக்காக திரையிடப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் ஒரு தொல்லியல் அருங்காட்சியகம் மற்றும் இந்திய போர் ஞாபகார்த்த அருங்காட்சியகம் ஆகியவையும் இந்த வளாகத்தில் தற்சமயம் இயங்குகின்றன.

மன்னராட்சி முடிந்து ஒன்றுபட்ட பரந்த இந்தியாவின் தலைநகராக விளங்கும் டெல்லி நகரில் வரலாற்று காலத்தின் சாட்சியமாகவும், புராதன கலைச்சின்னமாகவும் வீற்றிருக்கும் இந்த செங்கோட்டையில்தான் இந்தியப்பிரதமர் ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தன்று இந்திய தேசியக்கொடியை ஏற்றுகிறார்.

திங்கள்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த வரலாற்று பாரம்பரிய சின்னம் பார்வையாளர்களுக்காக திறக்கப்படுகிறது. கோட்டைக்குள் சுற்றுலா வழிகாட்டிகள், சிறிய உணவகம், கழிவறைகள், சக்கரநாற்காலிகள் மற்றும் வாகன நிறுத்த வசதிகள் போன்றவை பயணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Please Wait while comments are loading...