ஹரித்வார் - கடவுள்களின் நுழைவாயில்

அழகிய மலைகள் நிறைந்த மாநிலமான உத்தரகாண்டில் அமைந்திருக்கும் ஹரித்வார் 'கடவுள்களின் நுழைவாயில்' என்றழைக்கப்படும் புகழ்பெற்ற யாத்ரீக ஸ்தலமாகும்.  'சப்த புரி' என்றழைக்கப்படும் இந்தியாவின் ஏழு புனிதமான நகரங்களின் ஹரித்வாரும் ஒன்றும். மேலும் ரிஷிகேஷ், கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய உத்தராகாண்டின் பிற புண்ணியஸ்தலங்களுக்கும் ஹரித்வார் நுழைவாயிலாக விளங்குகிறது.

பழங்கால புராணங்களின் மாயாபுரி, கபிலா, மோக்‌ஷத்வார், கங்காத்வார் போன்ற பல பெயர்களில் ஹரித்வார் குறிப்பிடப்பட்டுள்ளது. புகழ்பெற்ற மன்னரான விக்ரமாதித்தியரின் காலத்திலிருந்து ஹரித்வாரின் வரலாறு துவங்குகிறது.

தன்னகத்தே உள்ள மத ஸ்தலங்கள் மற்றும் சுற்றுலாதளங்களின் காரணமாக ஹரித்வார் உலகப்புகழ் பெற்று விளங்குகிறது. ஹரித்வாரின் பெரும்பாலானா புண்ணியஸ்தலங்கள் கங்கைக் கரையில் அமைந்திருக்கின்றன.

பிரம்ம குண்டம் என்றழைக்கப்படும் ஹர்-கி-பெளரி ஹரித்வாரின் மிக முக்கியமான ஸ்தலமாக விளங்குகிறது. மலைகளில் வழிந்தோடும் கங்கை நதி இந்த பகுதியில் இருந்து சமநிலை பகுதிகளுக்கு பாய்கிறது.

கங்கை சங்கமம் ஆகும் இடத்தில் காணப்படும் கால்தடங்கள் இந்துக் கடவுள் விஷ்ணுவினுடையது என்று கருதப்படுகிறது. முடி காண்டிக்கை செலுத்தவும், இறந்தவர்களின் அஸ்தியைக் கரைக்கவும் இங்கு பக்தர்கள் குழுமுகிறார்கள். 

ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா திருவிழாவைக் காண உலகெங்கும் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிகிறார்கள்.

மாயாதேவி கோவில், மான்சா தேவி, சண்டி தேவி கோவில் ஆகியவை இங்குள்ள மற்ற புகழ்பெற்ற தளங்களாகும். இந்தியாவின் 52 சக்தி பீடங்களில் இந்த மூன்று கோவில்களும் அடங்கும். இந்து தெய்வமான சதி(சக்தி)யின் வழிபாட்டுத் தளங்களாக இந்த சக்திபீடங்கள் கருதப்படுகின்றன.  

புராணங்களின் படி தன் தந்தை தன் கணவரான சிவனை அவமானப்படுத்தியதால் மனமுடைந்து உயிர் துறக்கிறார் சதி. பின் இறந்த தன் மனைவியின் உடலை துக்கத்துடன் சிவன் தூக்கிக்கொண்டு கைலாச மலைக்கு சென்றுகொண்டிருந்த போது சதியின் உடல் பல பகுதிகளின் விழுந்ததாக சொல்லப்படுகிறது. அதில் மேல் பகுதி உடல் விழுந்த இடத்தில் மாயாதேவி கோவில் எழுப்பட்டதாக நம்பப்படுகிறது.

வைஷ்ணோ தேவி கோவில், பாரத் மாதா கோவில் மற்றும் பிரண் கைலார் கோயில் ஆகியவை இங்கிருக்கும் மற்ற கோவில்களாகும். ஜம்முவில் இருக்கும் புகழ்பெற்ற வைஷ்ணோ தேவி கோயில் போலவே புதிதாக கட்டப்பட்டதுதான் ஹரித்வாரின் வைஷ்ணோ தேவி கோவில் என்பது பலர் அறியாதது. கோவில்லு செல்லும் வழியில் ஜம்மு வைஷ்ணோ தேவி கோவிலைப் போலவே ஏராளமான குகைகள் அமைந்துள்ளன

இந்திய அன்னைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள பாரத மாதா கோவில் ஹரித்வாரின் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களின் ஒன்றாகும். புகழ்பெற்ற மதகுருவான ஸ்வாமி சத்யமித்ரானந்த கிரி என்பவரால் பல இந்துக் கடவுள்களுக்கும், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ள, எட்டு மாடிகள் கொண்ட இந்த கோவில் உருவாக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி, வீர் சாவர்க்கர், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் சிலைகள் இந்த கோவிலில் உண்டு. மேலும் சப்தரிஷி ஆசிரமம், ஷ்ரவனாத்ஜி கோவில், சில்லா வனவிலங்கு சரணாலயம், தக்‌ஷ மஹாதேவ் கோவில், கெள் காட் ஆகிய இடங்களும் பல சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.                                                

இந்து புராணங்களின் படி அத்ரி, காஷ்யம், ஜமத்கனி, பரத்வாஜர், வஷிஷ்டர், விஸ்வாமித்திரர் மற்றும் கவுதம் ஆகிய சப்த ரிஷிகள் தியானம் செய்த இடத்தில் சப்தரிஷி ஆசிரமம் அமைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.                                                      

ஹரித்வார் செல்லும் பயணிகள் ராமநவமி, புத்த பூர்ணிமா, கன்வார் மேளா, தீபாவளி ஆகிய பண்டிகைகளில் கலந்துகொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் கன்வார் மேளாவில் கலந்து கொள்ள ஹரித்வாரில் 30 லட்சம் மக்களுக்கு மேல் குவிகிறார்கள்.

மத ஸ்தலமாக மட்டுமில்லாமல் தொழிற்வளர்ச்சியிலும் ஹரித்வார் புகழ்பெற்று விளங்குகிறது. பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் இந்தியா லிமிடெட். (BHEL) இங்கு அமைந்திருக்கிறது. இந்தியாவின் முதல் தொழிற்கல்வி கூடமான ரூர்கி பல்கலைக்கழகம் இங்கு உருவாக்கப்பட்டது.

ஹரித்வாரை விமான, ரயில் மற்றும் சாலைவழிகளில் அடையலாம். ஜாலி கிராண்ட் விமானநிலையை ஹரித்வாரில் இருந்து 34 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அங்கிருந்து டெல்லிக்கு விமான சேவைகள் உண்டு.

ஹரித்வார் ரயில்நிலையத்தில் இருந்து இந்தியாவின் பிரதான நகரங்களுக்கு ரயில்வசதி உண்டு. மேலும் டெல்லி மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து பேருந்து வசதிகளும் ஹரித்வாருக்கு இருக்கிறது. புதுடில்லியில் இருந்து அடிக்கடி கிளம்பும் சொகுசு பேருந்துகள் வசதியையும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஹரித்வாரில் கோடை காலங்கள் மிதமான வெயிலுடனும், குளிர்காலம் மிக அதிகமான குளிராகவும், மழைக்காலங்களில் ஈரப்பதம் அதிகமாகவும் இருக்கிறது.

மழைக்காலங்களில் மழை அதிகமிருப்பதால் ஹரித்வாருக்கு அப்பருவத்தில் பயணிப்பது ஏற்புடையதல்ல. செப்டம்பரில் இருந்து ஜூன் வரையிலான காலத்தில் ஹரித்வாருக்கு பயணிப்பதே சிறந்ததாகக் கருதப்படுகிறது.

Please Wait while comments are loading...