புலந்த்ஷாஹர் – மிக ஆழமான வரலாற்றுச்சுவடுகள் பதிந்த நகரம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கும் ஒரு முக்கிய நகரம் இந்த புலந்த்ஷாஹர் ஆகும்.  மகாபாரத இதிகாச காலத்திலேயே இந்த நகரம் இருந்தததாக நம்பப்படுகிறது. இங்கு பல அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு பல புராதன நாணயங்கள் மற்றும் அரும்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இவை தற்போது லக்னோ மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.

வரலாறு

புலந்த்ஷாஹர் மாவட்டத்தின் வரலாறு கி.மு 1200 ம் ஆண்டிலிருந்தே துவங்குகிறது. பாண்டவர்களின் தலைநகரமாக திகழ்ந்த ஹஸ்தினாபுரத்திற்கு அருகில் இருந்த நகரமாக இது திகழ்ந்திருக்கிறது. ஹஸ்தினாபுரத்தின் வீழ்ச்சிக்கு பிறகு இந்த புலந்த்ஷாஹர் நகரத்திற்கு வடகிழக்கே இருந்த அஹார் எனும் நகரம் புகழ் பெற்று விளங்கியிருக்கிறது.

பிற்காலத்தில் பார்மா எனும் அரசர் இப்பகுதியில் ஒரு கோட்டையை கட்டியுள்ளார். காலப்போக்கில் டோமர் எனும் மன்னர் பரான் எனும் கோட்டையை நிர்மாணித்து இந்நகரத்தை தனது தலைநகராக கொண்டு ஆண்டுள்ளார்.

12ம் நூற்றாண்டில் பரான் ராஜ்ஜியம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன் பின்னர், 1192ம் ஆண்டில் முகலாய படையெடுப்பாளர் முகமது கோரி இந்தியாவின் வட பகுதிகளை கைப்பற்றியபோது இந்த பரான் கோட்டையையும் உரிமையாக்கிக்கொண்டார்.

அந்த பரான் நகரம் காலப்போக்கில் பல வம்சங்களின் கைகளுக்கு மாறி தற்காலத்தில் புலந்த்ஷாஹர் என்று அழைக்கப்படும் நகரமாக வீற்றிருக்கிறது. புலந்த்ஷாஹர் எனும் பாரசீக சொல்லுக்கு ‘உயரமான நகரம்’ என்பது பொருளாகும்.

புலந்த்ஷாஹர் மற்றும் அதை சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்

முன்பே கூறியதுபோல புலந்த்ஷாஹர் நகரத்தின் தொன்மை புராண காலம் வரை பின்னோக்கி நீள்கிறது. இந்த மாவட்டத்தில் படோரா வீர்பூர் மற்றும் காலிபூர் போன்ற புராதனமான வரலாற்று சிதிலங்கள் காணப்படுகின்றன.

இங்குள்ள சுவராசியமான சுற்றுலா அம்சங்களில் சோலா, ஆஹார் மற்றும் வாலிபுரா ஆகிய இடங்கள் குறிப்பிடத்தக்கவை. இவற்றில் சோலா எனும் கிராமம் பிப்கோல் சோலா போலியோ வாக்சின் ஃபேக்டரி எனும் தொழிற்சாலைக்கு பெயர் பெற்றுள்ளது.

கர்ணவாஸ் எனும் மற்றொரு முக்கியமான நகரம் மஹாபாரத வீரனான கர்ணனின் பெயரால் அழைக்கப்படுகிறது. ஒரு ஆற்றங்கரையில் அமைந்துள்ள அழகிய கிராமமான வாலிபுராவில் வன் சேத்னா கேந்த்ரா சென்டர் எனும் பிரசித்தமான மையம் அமைந்திருக்கிறது.  

சிக்கந்தர் லோதி எனும் மன்னரால் அமைக்கப்பட்ட சிக்கந்தராபாத் எனும் நகரத்துக்கும் பயணிகள் விஜயம் செய்து மகிழலாம். இங்கு பல வரலாற்று சின்னங்கள் காணப்படுகின்றன.

எல்லா முக்கிய சுற்றுலா நகரங்களையும் போன்றே புலந்த்ஷாஹர் நகரமும் பல கோயில்கள் மர்ரும் ஆன்மீக வழிபாட்டுத்தலங்களை கொண்டிருக்கிறது. இவற்றில் பெலோன் எனும் இடத்திலுள்ள பெலோன் கோயில் குறிப்பிடத்தக்கது.

எப்படி செல்வது?

ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகளின் மூலம் மிக சுலபமாக இந்நகரத்தை அடையலாம்.

விஜயம் செய்ய ஏற்ற காலம்

நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலம் புலந்த்ஷாஹருக்கு சுற்றுலா மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது.

Please Wait while comments are loading...