மீரட் - அமைதியான பழமையும், ஆர்ப்பரிக்கும் புதுமையும்!

உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள மீரட் நகரம் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் 63-வது நகரமாகவும் மற்றும் இந்தியாவிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் 14-வது இடத்திலும் உள்ளது. வட இந்தியாவில் முதன்மையான இராணுவ கன்டோன்மன்ட் பகுதியாகவும் மற்றும் சில தொழிற்சாலைகள் உள்ள இடமாகவும் மீரட் திகழ்கிறது. மீரட் நகரம் நாட்டிலேயே அதிக அளவு விளையாட்டு சாதனங்கள் மற்றும் இசைக்கருவிகள் உற்பத்தி செய்யும் நகரமாகவும் மற்றும் உலகத்திலேயே அதிக அளவு சைக்கிள் ரிக்ஷாக்களை உற்பத்தி செய்யும் நகரமாகவும் விளங்குகிறது.

அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மோர்கன் ஸ்டான்லி நிதி சேவைகள் அமைப்பு, சமீபத்தில் மிகவும் துடிப்பாக வளர்ச்சி பெற்று வரும் இந்திய நகரங்களைக் கண்டறிவதற்காக ‘AlphaWise City Vibrancy Index: A Guide to India’s Urbanization' என்ற பெயரில், நடத்திய ஆய்வில் டெல்லி மற்றும் மும்பை நகரங்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டு மிகவும் 'துடிப்பான' நகரமாக மீரட் பெயர் பெற்றுள்ளது.

இந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே, இந்தியாவின் பொருளாதார புத்தகத்தில் ஒரு தனியான இடத்தை மீரட் பெற்றுள்ளதற்கு--இங்கு நடந்து வரும் ரியல் எஸ்டேட் தொழில்களான சாலைகள், மேம்பாலங்கள், ஷாப்பிங் வளாகங்கள், பெரிய பெரிய ஷாப்பிங் மால்கள் மற்றும் அடுக்குமாக குடியிருப்புகள் ஆகியவற்றை காரணமாக சொல்லலாம்.

மீரட் நகரத்தை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள்

இந்தியாவின் பிற நகரங்களைப் போலவே சில கோவில்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களைக் கொண்டுள்ள நகரமாக பார்க்கப்படும் மீரட் நகரத்தில், சான்டி தேவி கோவில் மற்றும் மான்ஸா தேவி கோவில் ஆகிய கோவில்கள் பெருந்திரளான பக்தர்களை, குறிப்பாக நவராத்திரி தினத்தில் கவர்ந்திழுக்கும் இடங்களாக உள்ளன.

முஸ்லீம் மக்களை இங்கிருக்கும் ஜாமா மசூதி கவர்ந்திழுக்கும் வேளையில், சமண மக்களை ஈர்க்கும் இடமாக ஸ்ரீ சாந்திநாத் திகம்பர் ஜெயின் கோவில் உள்ளது.

செயின்ட் ஜான் தேவாலாயம் மற்றும் சர்தானா தேவாலயம் ஆகியவை கிறித்தவ மக்களின் வேண்டுதல்களைப் பூர்த்தி செய்யும் இடங்களாக இருக்கும் போது, பாலே மியான் கி தர்ஹா மற்றும் ஷபீர் ஷாஹாப் கி தர்ஹா ஆகியவை எல்லா விதமான பக்தர்களும் வந்து அருள் பெற்றுச் சென்று, அவர்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றும் இடமாக உள்ளது.

இந்த நகர மக்களுக்கு, நகரத்தின் நரக வாழ்க்கையிலிருந்து ஒதுங்கியிருக்க மிகவும் தேவைப்படும் தனிமையை வழங்கும் இடங்களாக சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் பைன் குழந்தைகள் பூங்கா ஆகிய பசுமையான மற்றும் அமைதியான இடங்கள் உள்ளன.

மேலும், அப்பு கார் என்ற குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு பூங்காவும் மீரட் நகரத்தில் உள்ளது. இது மட்டுமல்லாமல், இங்கிருக்கும் ஷாஹித் ஸ்மாரக் என்ற இடத்தில் இந்திய விடுதலைப் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கான நினைவிடமும் உள்ளது.

Please Wait while comments are loading...