கர்ணால் – கர்ணன் உதித்த பூமி!

ஹரியானா மாநிலத்திலுள்ள கர்ணால் நகரம் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக இயங்குகிறது. கர்ணால் நகரமும் மற்றும் மாவட்டம் இங்குள்ள பல்வேறு சுற்றுலாச்சின்னங்கள் மற்றும் இதர சுவாரசிய அம்சங்களுக்கு பிரசித்தி பெற்றுள்ளது. மஹாபாரத காலத்தில் கர்ணன் ஆட்சி செய்த தேசமாக இது கருதப்படுகிறது. NH 1 தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த நகரம் டெல்லியிலிருந்து மூன்று மணி நேர பயண தூரத்தில் உள்ளது.

NDRI  எனப்படும் தேசிய பால்பொருள் ஆராய்ச்சி மையம், DWR எனப்படும் கோதுமை ஆராய்ச்சி இயக்குனரகம் , CSSRI எனப்படும் மத்திய மண்உவர்த்தன்மை ஆராய்ச்சி மையம், NBAGR எனப்படும்  தேசிய விலங்கியல் மரபணு ஆய்வுக்கூடம், IARI எனப்படும் இந்திய விவசாய ஆராய்ச்சி மையம் போன்ற சர்வதேச தரம் வாய்ந்த ஆராய்ச்சி மையங்கள் இந்த கர்ணால் நகரத்தில் அமைந்துள்ளன.

பசுமையான புல்வெளிப்பிரதேசங்கள், உயர்தர பாசுமதி அரிசி போன்றவற்றுக்கும் இந்த நகர்ப்பகுதி புகழ்பெற்றுள்ளது. இது தவிர விவசாயத்தொழிலுக்கு தேவையான உபகரணங்கள், உதிரிபாகங்கள் தயாரிப்பிலும் இந்த நகரம் முன்னணியில் உள்ளது.

கர்ணால் நகரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்

வட இந்தியாவிலுள்ள முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இந்த கர்ணால் நகரம் இயங்குகிறது. தலை சிறந்த ஆராய்ச்சி மையங்கள் மட்டுமல்லாமல் வரலாற்றுச்சின்னங்களும் இந்நகரத்தில் அமைந்துள்ளன.

கோஸ் மினார், கலந்தர் ஷா கல்லறை, கரண் தால் மற்றும் பாபர் மஸ்ஜித் போன்ற இடங்களுக்கு நீங்கள் விஜயம் செய்யலாம்.

இந்நகரத்தின் பிரதான சிறப்பம்சம் கர்ணா  தால் எனப்படும் ஏரியாகும். கர்ணனின் பெயராலேயே அழைக்கப்படும் இந்த ஏரி ஸ்தலத்தில்தான் கர்ணன் கொடைகளை வாரி வழங்கியதாக சொல்லப்படுகிறது.

ஹரியானா சுற்றுலா வளர்ச்சித்துறையால் நிர்வகிக்கப்படும் இந்த ஏரிப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கர்ணால் நகரத்திலிருந்து 7 கி.மீ தூரத்திலுள்ள புக்கா புல் எனும் இடத்துக்கும் நீங்கள் விஜயம் செய்து ரசிக்கலாம். இந்த இடத்தில் ஒரு கோயில் உள்ளது. பல்வேறு மங்கள் நிகழ்ச்சிகளுக்கான ஸ்தலமாக இந்த கோயில் விளங்குவதால் இது உள்ளூர் மக்கள் மத்தியில் பிரசித்தமாக உள்ளது.

கர்ணால் நகரத்தின் மற்றொரு சிறப்பம்சமாக முழுக்க முழுக்க வெண்பளிங்குக்கற்களால் உருவாக்கப்பட்டிருக்கும் கலந்தர் ஷா கல்லறை மாளிகை அமைந்துள்ளது. இதே வளாகத்தில் ஆலம்கீர் என்பவரால் கட்டப்பட்டதாக கருதப்படும் ஒரு மசூதியும் உள்ளது.

இது தவிர மீரான் சாஹிப் கல்லறை எனும் மற்றொரு வரலாற்றுச்சின்னமும் உண்டு. இதன் உள்ளேயும் ஒரு மசூதி அமைந்திருக்கிறது. துர்க்கா பவானி கோயில் மற்றும் குருத்வாரா மஞ்ஜி சாஹிப் ஆகிய இதர கோயில்களும் இங்கு பார்க்க வேண்டிய அம்சங்களில் அடங்குகின்றன.

ஆங்கிலேயர்களும் தங்களது ஆட்சியின்போது சில முக்கியமான காலச்சின்னங்களை கர்ணால் நகரத்தில் விட்டுச்சென்றுள்ளனர். இவற்றில் கர்ணால் கன்டோன்மெண்ட் சர்ச் டவர் மற்றும் கிறிஸ்டியன் சிமெட்டரி போன்றவை அடங்கும்.

அமைதியான சூழலில் சற்றே ஏகாந்தமாக கழிக்க விரும்பினால்  இருக்கவே இருக்கிறது ஒயசிஸ் காம்ப்ளக்ஸ்.  நீங்கள் கோல்ஃப் விளையாட்டுப்பிரியராக இருப்பின் இங்குள்ள கோல்ஃப் மைதானத்துக்கு ஒரு முறை விஜயம் செய்வதும் அவசியம்.

கர்ணால் நகரத்துக்கு அருகிலுள்ள கோக்ரிபூர் மற்றும் தரோவாரி போன்ற இடங்களும் அவசியம் விஜயம் செய்யவேண்டிய அம்சங்களாகும்.

பருவநிலை

கர்ணால் நகரம் உப வெப்ப மண்டல பருவ நிலையை கொண்டிருக்கிறது. எல்லா இந்திய நகரங்களையும் போல கோடைக்காலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் எனும் மூன்று முக்கியமான பருவங்களை இது கொண்டிருக்கிறது.

எப்படி செல்வது கர்ணால் நகருக்கு?

டெல்லி மாநகருக்கும் சண்டிகர் நகருக்கும் இடையே அமைந்துள்ளதால் இந்தியாவின் எல்லா நகரங்களிலிருந்தும் மிக எளிதாக இந்த கர்ணால் நகருக்கு பயணம் மேற்கொள்ள முடியும். டெல்லி சர்வதேச விமான நிலையம் அருகிலேயே அமைந்துள்ளது.

Please Wait while comments are loading...