மொராதாபாத் – பரபரப்பில்லாத முகலாய புராதன நகரம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் மொராதாபாத்தின் வரலாறு 1600-ம் ஆண்டிலிருந்து துவங்குகிறது. ஷாஜஹான் மன்னரின் மகனான மொராத் என்பவரால் இந்த நகரம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. பித்தளைப்பொருட்கள் தயாரிப்பில் இந்நகரம் இந்தியாவிலேயே முன்னணியில் உள்ளது. எனவே பித்தளை நகரம் என்ற சிறப்புப்பெயரும் இதற்கு உண்டு.

வரலாறு

வரலாற்றுக்குறிப்புகளின்படி, 1632ம் ஆண்டில் ஷாஜஹான் மன்னர் ருஸ்தம் கான் எனும் தளபதியை இப்பகுதியை கைப்பற்றி ஒரு கோட்டையையும் நிர்மாணிக்குமாறு கட்டளையிட்டு அனுப்பியுள்ளார்.

முதலில் ருஸ்தம் நகர் என்று அழைக்கப்பட்ட இந்நகரம் பின்னர் ஷாஜஹான் மன்னரின் மகனான மொராத் என்பவரின் பெயரால் மொராதாபாத் என்று அறியப்படலாயிற்று.

இன்று வரை அதே பெயரிலேயே  இந்த நகரம் அழைக்கப்பட்டு வருகிறது. 1637ம் ஆண்டில் ஒரு ஜமா மசூதியையும் ஷாஜஹான் மன்னர் இங்கு கட்டுவித்துள்ளார். ராம்கங்கா ஆற்றின் கரையில் இந்த மொராதாபாத் நகரம் அமைந்துள்ளது.

முன்பே சொன்னபடி இந்த நகரம் பித்தளைப்பொருட்களில் உற்பத்திக்கு உலகம் முழுக்க பிரசித்தமாக அறியப்படுகிறது. கைவினைப்பொருட்களுக்காக புகழ் பெற்றுள்ள இந்த நகரத்திலிருந்து அமெரிக்கா,  பிரிட்டன், கனடா, ஜெர்மனி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்நகரத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள்  வால்மார்ட் மற்றும் டெஸ்கோ போன்ற பிரபல பல்பொருள் அங்காடிகளில்  விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மொராதாபாத் நகர் மற்றும் அதை சுற்றி அமைந்துள்ள விசேஷ அம்சங்கள்

பித்தளைப்பொருள் உற்பத்தி மட்டுமன்றி மொராதாபாத் நகரில் சுற்றுலாப்பயணிகளை கவரும் ஏராளமான அம்சங்கள் நிறைந்துள்ளன. எல்லா இந்திய நகரங்களையும் போலவே இங்கும் கோயில்களும் ஆன்மீக வழிபாட்டுத்தலங்களும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளன.

சீதா கோயில், படே ஹனுமான் ஜி கோயில், சந்தவ்ஸி – குஞ்ச் பிஹாரி கோயில், சாய் கோயில், பாடலேஷ்வர் கோயில் மற்றும் ஷானி கோயில் போன்றவை இங்குள்ள முக்கியமான கோயில்களாகும்.

முகலாயர் கால பாரம்பரியத்தை பின்னணியில் கொண்டுள்ளதால் அக்காலத்தை சேர்ந்த பல கட்டிடச்சின்னங்களும் இங்கு ஏராளம் உள்ளன. நஜிபுதௌலா கோட்டை, மண்டாவர் கா மஹால் மற்றும் ஜமா மசூதி ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

மொராதாபாத் வரும் பயணிகள் சந்தௌசி எனும் இடத்துக்கும் விஜயம் செய்வது அவசியம். சந்த் எனும் சொல் சந்திரனைக்குறிக்கிறது. சந்திரனைப்போன்ற ஒளி பொருந்திய ஸ்தலம் எனும் பொருளில் இப்பெயர் வந்துள்ளது.

புதினா தாவரம் அதிகம் பயிர் செய்யப்படுவதால் இந்த நகர்ப்பகுதியின் முக்கிய தயாரிப்புப்பொருளாக புதினா எண்ணெய் விளங்குகிறது.  ராம்பாக் தாம், குஞ்ச் பிஹாரி கோயில், வேணுகோபால்ஜி கோயில் மற்றும் பிரஹாம் தேவ்ஜி கோயில் போன்றவையும் இந்நகரத்தின் பார்க்க வேண்டிய அம்சங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

குடும்பத்தினருடன் உல்லாசமாக பொழுது போக்க வசதியாக இங்கு பிரேம் ஒண்டர்லேண்ட் மற்றும் பிரேம் வாட்டர் கிங்க்டம் போன்றவை அமைந்துள்ளன. ராம்பூர் எனும் இடத்தில் உள்ள ரஜா லைப்ரரி இலக்கிய ஆர்வலர்கள் தவறவிடக்கூடாத இந்தோ இஸ்லாமிய கல்வி மற்றும் கலை ஆராய்ச்சி மையமாக அமைந்திருக்கிறது.

பயண வசதிகள்

விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் ரயில் மார்க்கமாக மொராதாபாத் நகரத்தை எளிதில் சென்றடையலாம்.

விஜயம் செய்ய ஏற்ற காலம்

நவம்பர் முதல் ஏப்ரல் வரை உள்ள காலமே மொராதாபாத் நகரத்திற்கு சுற்றுலா விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் பருவநிலை இனிமையாகவும் மிதமாகவும் காட்சியளிக்கிறது. இருப்பினும் ஒரு முக்கிய தொழில் நகரமாக இருப்பதால் வருடமுழுதுமே இந்நகரம் பயணிகளை ஈர்க்கிறது.

Please Wait while comments are loading...