மதுரா - கிருஷ்ண பரமாத்மா உதித்த இடம்!

மதுரா, ஆரம்பத்திலிருந்து இன்று வரை “தெய்வீக அன்பு பொங்கும் இடம்” என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் 'ப்ரஜ் பூமி' என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. கிருஷ்ண பகவான், இங்கு தன் குழந்தைப்பருவத்தைக் கழித்து, பல வருடங்கள் வளர்ந்து வந்ததனாலேயே, மதுராவிற்கு இப்பெயர் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்துக்களின் மனதில் நன்கு பதிந்துள்ள, கிருஷ்ண பகவான் கோபியருடன் புரிந்த ராசலீலாக்கள், இங்கு உள்ள கோயில்கள், பஜனைகள் மற்றும் ஓவியங்கள் ஆகியவற்றில் சாகாவரம் பெற்று விளங்குகின்றன. உண்மையில், பெரும்பாலான இந்து கலை வடிவங்கள் இவ்விடத்தில் தான் தம் அடிவேரைக் கொண்டுள்ளன.

மதுராவின் உள் மற்றும் புறப்பகுதிகள், 16 ஆம் நூற்றாண்டில் திரும்ப கண்டுபிடிக்கப்படும் வரை இந்த இடம் ஒரு கற்பனையான ஸ்தலம் என்றே நம்பப்பட்டு வந்துள்ளது.  

தற்கால நிலவரம்

இன்று, இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாக விளங்கும் மதுரா, கிருஷ்ண பகவான் மற்றும் அவரது பிரியசகியான ராதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள எண்ணிலடங்கா கோயில்களைக் கொண்டுள்ளது.

எனினும், இவ்வூர் 8 ஆம் நூற்றாண்டில் இந்து மதத்தைத் தழுவுவதற்கு முன் புத்த மத மையமாக, சுமார் 3000 புத்த பிக்ஷுக்களுக்கு அடைக்கலம் அளித்த பல்வேறு புத்த விகாரங்களைக் கொண்டிருந்திருக்கிறது.

ஆனால், இவற்றுள் பெரும்பாலான மையங்கள், ஆப்கானின் போர் முதல்வனான முகமது கஜினியினால் அழிக்கப்பட்டன. அதற்கு பல காலத்துக்குப் பின், 16 ஆம் நூற்றாண்டில் ஔரங்கசீப் தான், கேசவ தியோ கோயில் உள்ளிட்ட பல கோயில்களை அழித்து அந்த இடத்தில் மசூதிகளைக் கட்டியுள்ளார்.

மதுரா வருடம் முழுவதிலும் நூற்றுக்கணக்கான பக்தர்களை அலையென ஈர்த்து வருகிறது. முக்கியமாக, ஹோலிப் பண்டிகை மற்றும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் வரும் கிருஷ்ணனின் பிறந்த நாளான ஜன்மாஷ்டமி போன்ற விசேஷங்களின் போது இங்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கும்.

மதுரா மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள மதுரா இந்திய பண்பாடு மற்றும் நாகரீகத்தின் தொட்டிலாகப்  பார்க்கப்படுகிறது. இந்திய நாடு ஒரு ஆன்மீக திருத்தலமாகக் கருதப்படுவதனால் நிம்மதி மற்றும் ஞானத்தை நாடி வரும் பயணிகள் இந்நகரில் உள்ள கோயில்கள் மற்றும் ஆசிரமங்களில் மன அமைதியைத் தேடி தஞ்சமடைகின்றனர். மதுரா, இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் ஜைனர்களால் புனிதமாகக் கருதப்படுகிறது.

மிகப் புனிதமானதாகப் போற்றப்படும், கிருஷ்ண பகவானின் பிறப்பிடமான ஸ்ரீ கிருஷ்ண ஜன்ம பூமி கோயில், இங்கு தான் அமைந்துள்ளது. சொல்லப் போனால், மதுராவில் உள்ள ஈர்ப்புகளுள் பெரும்பாலானவை கிருஷ்ண பகவானுடன் ஏதாவதொரு வகையில் தொடர்புடையனவாகவே காணப்படுகின்றன.

கிருஷ்ண பகவான் தன் தாய் மாமாவாகிய கம்சன் எனும் அரக்கனை அழிப்பதற்கு முன், சிறிது நேரம் ஓய்வெடுத்ததாகக் கூறப்படும் விஷ்ரம் மலைத்தொடர், மற்றொரு முக்கிய ஸ்தலம் ஆகும்.

ஹோலி மற்றும் ஜன்மாஷ்டமி ஆகிய இந்துப் பண்டிகைகளின் போது மிகப் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்படும் துவாரகாதீஷ் கோயில், இங்குள்ள மற்றொரு முக்கிய கோயிலாகும்.

இவ்வூரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள கீதா மந்திர், பல்வேறு கோயில் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களை நம் கண்களுக்கு விருந்தாக்குகின்றது. முஸ்லிம் சமூகத்தினர், 1661 ஏடியில் உருவாக்கப்பட்ட ஜாமா மஸ்ஜித் மூலம் இங்கு தங்களுக்கான பிரதிநிதித்துவத்தைக் காண்கின்றனர்.

டாம்பியர் பூங்காவில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகம், குப்தா மற்றும் குஷன் காலத்திய (400 பிசி -யிலிருந்து 1200 ஏடி வரையிலான காலம்) அரிய கண்டுபிடிப்புகள் முதலான வரலாற்று மற்றும் தொல்லியல் பொருட்களின் மிகச் சிறந்த களஞ்சியமாகத் திகழ்கின்றது.

இது தவிர, கன்ஸ் குயிலா, பொடாரா கந்த் மற்றும் மதுராவின் மலைத்தொடர்கள் போன்றவை இங்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மற்றும் சில ஈர்ப்புகளாகும். மதுராவுக்கு வருகை தருவோர் அருகில் உள்ள யாத்ரீக நகரான பிருந்தாவனுக்கும் சென்று வரலாம்.

மதுராவை அடைவது எப்படி

மதுரா நகர், சாலை, இரயில் மற்றும் வான் வழி போக்குவரத்து சேவைகளின் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தில்லியில் உள்ள விமான நிலையமே மதுராவுக்கு அருகாமையில் உள்ள விமான நிலையம் ஆகும்.

மதுரா செல்ல ஏற்ற காலகட்டம்

ஆண்டு முழுவதும் இங்கு கொண்டாடப்படும் திருவிழாக்களினால், மதுரா, வருடத்தின் எந்த பகுதியிலும் இங்கு வருகை புரியும் எந்தவோர் பயணியையும் மகிழ்வுறச் செய்யும் ஆற்றல் வாய்ந்ததாக விளங்குகிறது.

Please Wait while comments are loading...