இந்தியா கேட், டெல்லி

டெல்லியில் உள்ள ஏராளமான சுற்றுலா அம்சங்களுக்கு மத்தியில், பயணிகளால் மிகவிரும்பி விஜயம் செய்யப்படும் ஒரு சில சுற்றுலாத்தலங்களில் இந்த இந்தியா கேட் ஸ்தலமும் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது.

டெல்லி மாநகரின் மையப்பகுதியில் ஒரு முக்கியமான தேசியச்சின்னமாக இது கம்பீரமாக வீற்றிருக்கிறது. 42மீ உயரமுள்ள இந்த கலைச்சின்னம் பாரீஸ் நகரிலுள்ள ஆர்ச்-டி-ட்ரையோம்பே எனும் அலங்கார வளைவுக்கட்டுமானத்தின் தோற்றத்தை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலேய ராணுவத்தின் சார்பாக போரிட்டு முதலாம் உலகப்போரில் இறந்த 70000 வீரர்களின் நினைவாகவும், 1919ம் ஆண்டில் நிகழ்ந்த முன்றாவது ஆங்கிலேயே-ஆப்கானியப்போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாகவும் எழுப்பப்பட்டிருக்கும் இந்த நினைவுச்சின்னம் ஆரம்பகாலத்தில் ‘இந்திய போர் நினைவுச்சின்னம்’ என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.

‘ட்யூக் ஆஃப் கன்னாட்’ என்றழைக்கப்பட்ட ஆங்கிலேயே ராஜ குடும்ப இளவரசரால் 1921ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1931ம் ஆண்டு ‘இர்வின் பிரபு’ வைசிராய் ஆக ஆட்சி செய்த காலத்தில் இந்த இந்தியா கேட் வளைவு அமைப்பின் கட்டுமானம் முடிக்கப்பட்டிருக்கிறது.

எட்வின் லுட்யென்ஸ் எனும் கட்டிடவியல் நிபுணர் இந்த அலங்கார வளைவு அமைப்பை வடிவமைத்துள்ளார். சிவப்பு மற்றும் வெளிர் நிற மணற்பாறைக்கற்கள் மற்றும் கிரானைட் கற்களை பயன்படுத்தி இதன் முழு கட்டுமானமும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த நினைவுச்சின்னத்திற்கு அடியில் ‘அமர் ஜவான் ஜோதி’ எனப்படும் அணையா விளக்கு எரிந்துகொண்டிருப்பதை பயணிகள் பார்க்கலாம். 1971ம் ஆண்டு நடைபெற்ற இந்திய பாகிஸ்தானிய போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக இந்த விளக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியா கேட் அமைப்புக்கு முன்புறம் காலியாக உள்ள குடைபோன்ற அமைப்பில் இடம் பெற்றிருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் சிலை பின்னாளில் கரோனேஷன் பார்க் ஸ்தலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

1931ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த ‘இந்தியா கேட்’ எனும் நினைவுச்சின்னம் இன்று வரை டெல்லி மாநகரத்தின் ஒரு முக்கியமான கவர்ச்சி அம்சமாகவும், நகர அடையாளமாகவும் திகழ்ந்துவருகிறது.

Please Wait while comments are loading...