Search
 • Follow NativePlanet
Share

சென்னை  - திராவிட பூமியின் கனவு நகரம்!

58

கனவுகளை சுமந்தபடி வேர்களிடமும் உறவுகளிடமும் சொல்லிவிட்டோ, சொல்லாமலோ புறப்பட்டு ரயிலிலும், பஸ்ஸிலும், லாரியிலும் பயணித்து வந்திறங்கிய எண்ணற்ற வேட்கை மனங்களின் கனவுகளை தாமதமாகவேனும் நிறைவேற்றி வைத்த அதிசய நகரம் இது. சென்னை என்பது பலருக்கு நகரம் அல்ல - அது கனவுகளின் கருத்துருவம், வெற்றிக்கான ஆடுகளம், வாழ்க்கைக்கான பிடிமானம், சுதந்திரத்தை அளித்திட்ட ஒரு புகலிடம் -  இப்படித்தான் கடந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டு மக்களின் வாழ்வோடு, உணர்வோடு கலந்து வீற்றிருக்கிறது இந்த மெட்ராஸ் அல்லது சென்னை நகரம்.  

புதிய நூற்றாண்டு மற்றும் புத்தாயிரத்தின் துவக்கத்திலிருந்து (2000) இன்னும் பிரம்மாண்டமாக தன் எல்லைகளை நாள்தோறும் விரித்தபடி பல துறைகளிலும் தடம் பதித்து நிற்கும் நவீன நகரமாக இது ஒளிர்கிறது.

இந்தியாவின் முக்கிய மாநகரங்களில் ஒன்றான சென்னை நகரம் ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் கலாச்சார கேந்திரமாக சுதந்திர காலம் தொட்டு விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் தலைநகரமாக இருந்தாலும் கேரள, தெலுங்கு மற்றும் கன்னட பாரம்பரியங்களும் இங்கு கலந்திருப்பதை ஒரு அற்புதமான தேசிய வரலாற்று பரிமாணம் எனலாம்.

ஒருகாலத்தில் டெல்லிவாசிகள் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு பேசும் யாவரையும் ‘மதராஸி’ என்றே விளிக்கும் ஒரு காலமும் இருந்திருக்கிறது.

திருவனந்தபுரமும், பெங்களூரும், ஹைதராபாத்தும் தான் அண்டை மாநிலங்களின் தலைநகரங்கள் என்றாலும் அம்மாநிலங்களை சேர்ந்த ஒருசாராருக்கு மனதளவில் சென்னைதான் தலைநகரமாக விளங்கிவருகிறது என்பதும் மறுக்க முடியாத ஒரு உண்மை.

கொரமாண்டல் எனப்படும் சோழமண்டலக் கடற்கரையில் வங்காளவிரிகுடாவை ஒட்டி சென்னை நகரம் அமைந்துள்ளது. 400 வருட வரலாற்றை கொண்டுள்ள இந்நகரம் தற்போது உலகில் பெரிய மெட்ரோபாலிடன் நகரங்களில் 36வது இடத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றுப்பின்னணி

இந்நகரத்தின் ஆதி வரலாற்றை நோக்கினால் இது தமிழ்நாட்டின் தொண்டை மண்டல ராஜ்ஜியத்தில் இடம் பெற்றிருந்திருக்கிறது. காலனிய ஆட்சிக்காலத்தின்போது ஒரு மாநகரமாக மாறுவதற்கு முற்காலத்திலேயே இப்பகுதியில் திருவான்மியூர், திருவொற்றியூர், திருமயிலை, திருவல்லிக்கேணி போன்ற ஊர்கள் ஆன்மீக திருத்தலங்களாக கீர்த்தியுடன் விளங்கியிருக்கின்றன. நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களால் இந்த ஸ்தலங்கள் பாடப்பட்டுள்ளன.

பண்டைய ஆட்சி என்று காலத்தின் ஊடே பின்னோக்கி பார்த்தால் சென்னைப்பிரதேசமானது தொண்டை நாட்டின் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது. ஆதியில் தொண்டை நாட்டு மன்னர்கள் சோழ ராஜ வம்சத்தின் பிரதிநிதிகளாக இப்பகுதியை ஆண்டு வந்துள்ளனர்.

இரண்டாம் நூற்றாண்டில் தொண்டைமான் இளந்திரையன் எனும் கீர்த்தி பெற்ற மன்னர் இப்பகுதியை ஆண்டுள்ளார். அவருக்கு பிறகு இளம் கிள்ளி எனும் சோழ மன்னரின் ஆட்சிக்குள் இருந்து பின்னர் சாதவாஹனர்களின் ஆளுகைக்குள் தொண்டை மண்டலம் சென்றிருக்கிறது.

அவர்களின் பிரதிநிதிகளாக முதலில் ஆளத்துவங்கிய பல்லவ வம்சம் பின்னர் தமிழ்ப்பகுதியின் முக்கியமான ராஜ வம்சமாக பரிணமித்தது. பல்லவ வம்சத்தினர் 3ம் நூற்றாண்டு தொடங்கி 9ம் நூற்றாண்டு வரை இப்பகுதியை ஆண்டுள்ளனர். 9ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆதித்ய சோழர் பல்லவர்களை வென்று சோழர் ஆட்சியை இப்பகுதியில் ஏற்படுத்தினார்.

பின்னர் 13ம் நூற்றாண்டில் ஜடாவர்ம சுந்தரபாண்டியன் எனும் பாண்டிய மன்னர் சோழ வம்சத்தை வென்றபோது பாண்டியர் ஆட்சியின் கீழும் இப்பகுதி இருந்துள்ளது.

அரை நூற்றாண்டளவிலான மிகக்குறுகிய காலத்திற்கே நீடித்த பாண்டிய ஆட்சிக்குப்பின் டெல்லி கில்ஜி சுல்தான்களின் பிரதிநிதிகளாக பாமினி அரசர்கள் சிறிது காலம் இப்பகுதியை ஆண்டுள்ளனர். அவர்களுக்கு பின்னர் 14ம் நூற்றாண்டில் விஜயநகர வம்சத்தினர் கடைசியாக தொண்டை மண்டலத்தை தங்கள் ராஜ்ஜியத்தில் இணைத்துக்கொண்டனர்.

மேற்சொன்ன வரலாறு யாவுமே சென்னை நகரத்தின் அமைந்திருக்கும் பிரதேசம் குறித்த ஆதி வரலாறே தவிர அந்நாளில் இப்போதிருக்கும் சென்னை எனும் நகரமைப்பு இருந்திருக்கவில்லை.

இப்பிரதேசத்தின் முக்கிய நகராக காஞ்சி திகழ்ந்திருக்கிறது. மாமல்லபுரம் இருந்திருக்கிறது. இருப்பினும் இன்றிருக்கும் விசாலமான சென்னை அன்றில்லை. இந்த சென்னை எனும் மாநகரத்திற்கான அடிக்கல் ஆங்கிலேயர்கள் இப்பகுதிக்கு கிழக்கிந்திய கம்பெனி எனும் பெயருடன் வியாபாரம் செய்ய வந்திறங்கியபோது நாட்டப்பட்டது.

இந்த நிகழ்வு 1639 ஆண்டில் அதாவது 17ம் நூற்றாண்டில் நிகழ்ந்திருக்கிறது. இருப்பினும் இதற்கு முன்பே ஐரோப்பியர்களின் ‘சென்னை வருகை’ நிகழ்ந்துவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதாவது, 1522ம் ஆண்டிலேயே போர்த்துகீசியர்கள் இங்கு வந்திறங்கிவிட்டனர். முதலாம் நூற்றாண்டிலேயே இங்கு வருகை தந்து பரங்கிமலையில் மரித்ததாக சொல்லப்படும் கிறித்துவின் சீடராகிய புனித தோமா எனப்படும் தாமஸ் குருவின் பெயரால் அவர்கள் ஒரு தேவாலயத்தையும் எழுப்பியுள்ளனர்.

சென்னைக்கு வடக்கே புலிகாட் கடற்கரைப்பகுதியில் போர்த்துகீசியர் தங்கள் குடியிருப்புகளையும் உருவாக்கினர். இது பின்னர் டச்சுக்காரர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

ஆங்கிலேயர்கள் துவக்கத்தில் விஜய நகர நாயக்க வம்ச அரசர்களிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடற்கரையை ஒட்டிய மதராசப்பட்டிணம் எனும் மீனவக்குப்பத்தினை தங்களது துறைமுக வசதிகளுக்காகவும் குடியிருப்பிற்காகவும் பெற்றுக்கொண்டு இன்றும் வீற்றிருக்கும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை எழுப்பிக்கொண்டுள்ளனர்.

நிர்மாணிக்கப்பட்ட காலத்திலிருந்து இந்தியாவை விட்டு புறப்படும் வரை இந்த கோட்டை ஒரு ஆங்கிலேய குடியிருப்பாகவும் ராணுவக்கேந்திரமாகவும் ஆட்சிக்கேந்திரமாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கோட்டையின் பின்புறத்தில் புராதனமாக காட்சியளிக்கும் கட்டிடங்கள் குதிரை லாயங்கள், அகழி போன்றவை காலனிய ஆதிக்கத்தின் சான்றுகளாக இன்றும் வீற்றிருக்கின்றன.

காலனிய ஆட்சியின்போது இன்றைய சென்னையின் முக்கிய அங்கங்களான வேப்பேரி, திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், எக்மோர், சேத்துப்பட்டு போன்ற கிராமங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இணைந்து ஒரு மாகரமாக உருமாறத்துவங்கின.

மதராசப்பட்டணத்துக்கு அருகிலேயே சென்னப்பட்டணா என்ற கிராமமும் இருந்தது. அதன் அடிப்படையில்தான் இந்த நகருக்கு சென்னை எனும் புதிய பெயர் அரசாங்கத்தால் 1996ம் ஆண்டில் வழங்கப்பட்டிருக்கிறது.

மெட்ராஸ் என்றே அதுநாள் வரை இந்நகரம் தமிழ் மக்களின் கனவோடும் உணர்வோடும் கலந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் பலருக்கு சென்னை நகரம் என்பது ‘மெட்ராஸ்’தான்.  

தென்னிந்தியாவின் கலாச்சாரக்கேந்திரம்

கலை மற்றும் கைவினைப்பாரம்பரியம், இசை மற்றும் நடனம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய எல்லா கலையம்சங்களும் சென்னை மாநகரத்தில் தழைத்தோங்கி வளர்ந்துள்ளன.

குறிப்பாக கர்நாடக இசை மரபு சென்னையின் ஒரு முக்கிய கலாச்சார அடையாளமாகவும் அங்கமாகவும் பரிணமித்துள்ளது. சங்கீத சீசன் எனப்படும் டிசம்பர் மாதத்தில் இங்குள்ள இசைஅரங்குகள் மற்றும் சபாக்களில் சென்னை மற்றும் தென்னிந்தியாவின் எல்லா பிரபல மற்றும் வளரும் கலைஞர்களின் நேரடி இசை நிகழ்ச்சிகளை கண்டும் கேட்டும் ரசிக்கலாம்.

புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு ரசிகர்கள் இக்காலத்தில் கர்நாடக இசைப்பாரம்பரியத்தை ரசித்து ருசிக்க சென்னையை முற்றுகையிடுகின்றனர்.

கிறிஸ்துமஸ் காலம் என்பதோடு நகரின் சீதோஷ்ண நிலையும் இதமாக இனிமையாக இருக்கும் என்பதால் டிசம்பர் மாதத்திய சென்னை மாநகரம் மிகவும் விரும்பத்தக்கதாக இருக்கும். இனிமையான கிறிஸ்துமஸ் கரோல் இசை கீதங்களும் டிசம்பர் மாதத்தில் சென்னை நகரமெங்கும் இசைக்கப்படுவதை காணமுடியும்.

பரதக்கலை அல்லது பரத நாட்டியம் எனப்படும் நடன வடிவமும் சென்னை நகரின் அடையாளமாக வளர்ச்சி பெற்றுள்ளது. இந்தியாவின் பழமையான நடன வடிவங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய அளவில் இன்று பரதநாட்டியம் அறியப்படுகிறது என்றால் அதற்குக்காரணம் சென்னை மாநகரத்தில் உதித்த உன்னதமான கலைஞர்கள் மற்றும் அவர்களது முயற்சிகள்தான் என்பதில் ஐயத்திற்கே இடமில்லை.

சென்னையில் பரதக்கலைக்கான பாரம்பரிய மையமாக ருக்மணி அருண்டேல் அவர்களால் துவங்கப்பட்ட கலாஷேத்ரா பரதக்கல்விக்கூடம் வீற்றுள்ளது.

கலாஷேத்ரா பாரம்பரியத்தின் விழுதுகளாக இயங்கும் திரு தனஞ்செயன் மற்றும் திருமதி சாந்தா தம்பதிகள் மற்றும் ஸ்ரீமதி பத்மா சுப்ரமண்யம், ஸ்ரீமதி அனிதா ரத்னம் போன்ற கலைஞர்கள் தங்களது உன்னதமான முயற்சிகள்  மூலம் பரதக்கலையை உலகறிய வைத்துள்ளனர்.

நாடகக்கலையிலும் சென்னை மாநகரம் அக்காலத்திலிருந்தே ஆழமான பின்னணியை கொண்டுள்ளது. பிற்காலத்தில் சினிமா எனும் வடிவமானது நாடகத்துறையின் நீட்சியாகவே உருமாற்றம் அடைந்தது எனலாம்.

நவீன தமிழ்நாடகக்கலையில் சில உன்னதமான முயற்சிகள் திரு ந. முத்துசாமி அவர்களால் துவங்கப்பட்ட ‘கூத்துப்பட்டறை’ எனும் நாடகப்பள்ளி மூலம் நிகழ்த்தப்பட்டுள்ளது. யுனெஸ்கோ அமைப்பு இந்த கூத்துப்பட்டறை நாடகப்பள்ளியை முக்கியமான ஒன்றாக அங்கீகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கோலிவுட் என்றழைக்கப்படும் சென்னை சினிமாத்துறை இந்திய அளவில் மும்பைக்கு அடுத்தபடியாக பெரிய அளவிலான செயல்பாடுகளையும் தயாரிப்புகளையும் வர்த்தக முதலீடுகளையும் கொண்ட கேந்திரமாக திகழ்கிறது.

தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்திப்படங்களின் தயாரிப்பிலும் சென்னை தயாரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு பாரம்பரியம் மிக்க ஏவிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் விஜயா வாஹினி ஸ்டுடியோஸ் போன்றவை ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்காலமாக சினிமாத்துறையில் முக்கிய அடையாளங்களாக விளங்குகின்றன.

பொதுவாகவே சுதந்திரத்துக்கு பிந்தைய தமிழ் நாகரிகம் மற்றும் கலாச்சார சூழலில் சினிமா ஒரு முக்கிய அம்சமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவே அந்த சினிமா சம்பந்தப்பட்ட செயல்பாடுகளின் களமாகவும், சினிமா பிரபலங்கள் வசிக்கும் சொகுசு நகரமாகவும் சென்னை அறியப்படுவது இந்த நகரின் மற்றொரு பரிமாணமாகும். தமிழக அரசியல் சூழலோடு சினிமா நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதும்  குறிப்பிடத்தக்கது.

தொலைக்காட்சி ஊடகம் கற்பனைக்கெட்டாத அளவில் வளர்ச்சியடைந்துள்ள சூழலில் பல தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் சென்னையிலிருந்து இயக்கப்படுகின்றன. இவற்றுக்கான நிகழ்ச்சி தயாரிப்புகள் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த செயல்பாடுகளும் சென்னையில் ஒரு முக்கிய துறையாக பரிணமித்துள்ளது.

இவைதவிர, பதிப்பு ஊடகத்துறையிலும் சென்னை ஒரு கேந்திரமாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. சுதந்திரப்போராட்ட வீரரான சுப்ரமணிய ஐயர் துவங்கி வைத்த தி ஹிந்து ஆங்கிலப்பத்திரிகை தேசிய அளவில் ஒரு முக்கியமான பதிப்பு ஊடக அமைப்பாகவும் சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகவும் இயங்குகிறது.

இதுதவிர இன்னும் ஏராளமான ஆங்கில மற்றும் தமிழ் பதிப்பு ஊடக வெளியீடுகள் தினசரி செய்தி பத்திரிகைகளாகவும் இதர பருவ இதழ்களாகவும் சென்னையிலிருந்து தமிழகம் மற்றும் தேசிய அளவில் வெளியிடப்படுகின்றன.

நூற்பதிப்பிற்கான நவீன வசதிகளை கொண்ட அச்சகங்கள் சென்னையில் ஏராளம் உள்ளன. இவற்றை சென்னையின் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகளில் காணலாம். கருத்தும், எண்ணமும் எழுத்து வடிவில் இருப்பின் இங்கு ஒரே நாளில் உங்கள் புத்தகத்தை அச்சு வடிவத்தில் கொண்டு வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.  

சென்னை நகரம் பல முக்கிய அரசியல் தலைவர்களையும் சிந்தனையாளர்களையும் மாநில அளவிலும் தேசிய அளவிலும் அளித்துள்ளது. ராஜகோபாலாச்சாரியார், சி.சுப்ரமணியன், டி.டி.கிருஷ்ணமாச்சாரியார், மோகன் குமாரமங்கலம் ஆகியோர் இவர்களில் குறிப்பிடப்படவேண்டியவர்கள். பல அரசியல் இயக்கங்களும் சமூக முன்னெடுப்புகளும் சென்னை நகரத்தில் இன்று வரை உருவெடுத்து வந்திருக்கின்றன.

சென்னை சிறப்பு

சென்னை வானிலை

சிறந்த காலநிலை சென்னை

 • Jan
 • Feb
 • Mar
 • Apr
 • May
 • Jun
 • July
 • Aug
 • Sep
 • Oct
 • Nov
 • Dec

எப்படி அடைவது சென்னை

 • சாலை வழியாக
  தமிழ் நாட்டின் தலைநகரமான சென்னை சொந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகள், கேரளம், ஆந்திரம், கர்நாடக மாநிலப்பகுதிகள் மற்றும் இந்தியாவின் இதர மாநிலங்களோடு நல்லமுறையில் சாலைவசதிகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. தேசிய தங்க நாற்கரத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை இணைப்புத்திட்டத்தில் சென்னை மாநகரம் முக்கிய அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. தேசிய நெடுஞ்சாலைகளான NH45, NH 5, NH 6, ஆகியவை சென்னை மாநகரத்தை வடக்கிலும் தெற்கிலும் உள்ள உள்ள நகரங்களுடன் இணைக்கின்றன. அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் தமிழ்நாட்டில் உள்ள எல்லா முக்கிய நகரங்களுக்கும் சென்னையின் பிரம்மாண்டமான கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்திலிருந்து பேருந்துகளை இயக்குகிறது. சென்னை, கோயம்புத்தூர், திருவனந்தபுரம், திருச்சி, மதுரை மற்றும் பெங்களூர் போன்ற நகரங்களுக்கு தனியார் சொகுசு போக்குவரத்து சேவைகளும் இயக்கப்படுகின்றன.
  திசைகளைத் தேட
 • ரயில் மூலம்
  தென்பிராந்திய ரயில்வேயின் முக்கிய நிலையமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் திகழ்கிறது. இது தவிர எக்மோர் ரயில் நிலையம் எனும் பழமையான ரயில் நிலையம் ஒன்று சென்னையில் உள்ளது. சமீப காலமாக புறநகர்ப்பகுதியில் உள்ள தாம்பரம் ரயில் நிலையமும் மற்றொரு ரயில் நிலையமாக இயங்கி வருகிறது. சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகிலேயே தென்னக ரயில்வேயின் பிராந்திய அலுவலகமும் அமைந்துள்ளது.
  திசைகளைத் தேட
 • விமானம் மூலம்
  சென்னை விமான நிலைய வளாகம் தென்னிந்தியாவிலேயே மிக முக்கியமான விமானப்போக்குவரத்து கேந்திரமாக அமைந்துள்ளது. இதில் அண்ணா சர்வதேச விமானச்சேவை வளாகம் மற்றும் காமராஜ் உள்நாட்டு விமானச்சேவை வளாகம் என்று இரண்டு பிரத்யேக பிரிவுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு வெளிநாட்டு நகரங்களுக்கும் இங்கிருந்து விமான சேவைகள் உள்ளன. இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் உள்நாட்டு சேவைகள் இயக்கப்படுகின்றன. சமீபத்தில் முற்றிலும் புதிய வடிவமைப்புடன் சர்வதேசத்தரத்துடன் சென்னை விமான நிலையம் வளாகம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
  திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
03 Dec,Sat
Return On
04 Dec,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
03 Dec,Sat
Check Out
04 Dec,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
03 Dec,Sat
Return On
04 Dec,Sun