பேப்பூர், கோழிக்கோடு

கோழிக்கோடு நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள பேப்பூர் ஒரு வரலாற்றுப்பின்னணி வாய்ந்த துறைமுக நகரமாகும். வயப்புரா அல்லது வடப்பறநாடு என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட இந்நகரம் அக்காலத்தில் அரேபிய, ஆசிய, ஐரோப்பிய நாடுகளுடன் வாணிபத்தொடர்புகளைக்கொண்ட ஒரு வியாபாரக் கேந்திரமாக திகழ்ந்துள்ளது. வரலாற்றுக் குறிப்புகளின்படி இந்த துறைமுக நகரமானது மெசோபொடாமியா நாட்டுடன் பட்டு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

சாலியார் ஆற்றின் கரையில் அமைந்துள்ள பேப்பூர் நகரம் கப்பல் கட்டுமானத்தொழிலுக்கு புகழ் பெற்று விளங்குகிறது. அக்காலத்தில் ‘உருசு’ என்றழைக்கப்பட்ட மரக்கப்பல்கள் தயாரிப்பதில் இங்குள்ள கப்பற்தளங்கள் பிரசித்தமாக விளங்கியிருக்கின்றன. 1500 வருடங்களை கொண்ட கப்பற்கட்டுமான அனுபவம் மற்றும் தொழில் நுணுக்கங்களை இங்குள்ள கப்பற்கட்டுமான தளங்கள் கொண்டுள்ளன.

இன்று கொச்சிக்கு அடுத்தபடியான பெரிய துறைமுகம் எனும் அடையாளத்தை பேப்பூர் பெற்றுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக இது மலையாள இலக்கிய ஜாம்பவான் ‘வைக்கம் முஹம்மது பஷீர்’ அவர்கள் வாழ்ந்து மறைந்த இடமாகும். ‘பேப்பூர் சுல்தான்’ என்று இலக்கிய ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவரது படைப்புகள் கேரளத்தையும் தாண்டி இந்திய இலக்கிய ரசிகர்களின் நெஞ்சங்களில் வாழ்வது குறிப்பிடத்தக்கது.

துறைமுகம், கப்பல் கட்டும் தளம், கடலுக்குள் செல்லும் ஒரு கற்பாலம், மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் கடலுண்டி பறவைகள் சரணாலயம் (7 கி.மீ) என்று ஏராளமான சுற்றுலா அம்சங்கள் பேப்பூர் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்காக காத்திருக்கின்றன.

Please Wait while comments are loading...