மூணாரிலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் இந்த பொத்தன்மேடு ஆகும். இங்குள்ள ஒரு முக்கியமான மலைக்காட்சி ஸ்தலத்திற்கு இது பிரசித்தி பெற்றுள்ளதால், பயணிகள் மறக்காமல் இந்த கிராமத்துக்கு விஜயம் செய்வது நல்லது.
இங்கிருந்து மூணார் பகுதியின் அழகான மலைச்சரிவுகள், சுற்றியுள்ள பசுமைப்பள்ளத்தாக்குகள் மற்றும் மதுரப்புழா ஆற்றின் அழகுக்காட்சி போன்றவற்றை பார்த்து ரசிக்கலாம். இந்த ரம்மியமான கிராமப்பகுதி இயற்கை ரசிகர்களுக்கும் மலையேற்றப் பிரியர்களுக்கும் மிகப்பிடித்தமான இடமாக பிரசித்தி பெற்றுள்ளது.
சுற்றிலும் ஏராளமான தாவரப்பசுமை மற்றும் பயிர்த்தோட்டங்களுடனும் இந்த கிராமம் காட்சியளிக்கிறது. ஏலக்காய் பயிர்கள் விளையும் மலைப்பகுதி மற்றும் தேயிலைத்தோட்டங்கள் வழியாக தவழ்ந்து வரும் நறுமணம் நிரம்பிய காற்று இங்கு வரும் பயணிகளை தீண்டி மயக்கமூட்டுகிறது.
நறுமணப்பயிர் தோட்டங்களின் வழியாக மலையேற்றம் செய்து பயணிகள் பொத்தன்மேடு மலைக்காட்சி தளத்தை அடையலாம்.ஏறுவது சிரமமாக இருந்தாலும் இந்த மலைக்காட்சி தளத்திலிருந்து காணக்கிடைக்கும் காட்சிகளை அனுபவிக்கும் போது நமது உடல் அலுப்பு மறந்தே போகும். புகைப்பட ஆர்வலர்களுக்கு இந்த மலைக்காட்சி தளம் ஒரு புதையல் போன்றதாகும்.
வளைந்து நெளிந்து செல்லும் மலைச்சாலைகளும் உயர்ந்தோங்கி நிற்கும் மலைகளும் இப்பகுதியை ஒரு மாயாலோகம் போன்று ஜொலிக்க வைத்துள்ளன. பயணிகள் பொத்தன்மேடுக்கு பயணம் மேற்கொள்ளும்போது வேண்டிய அளவு உணவுப்பொருட்கள் மற்றும் தண்ணீர் போன்றவற்றை எடுத்துச்செல்ல மறக்கக்கூடாது.



Click it and Unblock the Notifications