சிவ பெருமானுக்கான நகரம் எனும் பொருள்தரும்படியான பெயரைக்கொண்டுள்ள ஷிவ்புரி நகரத்தில் திரும்பும் இடமெல்லாம் ஏதாவது ஒரு வரலாற்றுச்சின்னம் தென்படுவது சுற்றுலாப்பயணிகளை உற்சாகப்படுத்தும் ஒரு அம்சமாகும்.
நவீன வளர்ச்சிகளும் கட்டுமானங்களும் இந்த நகரத்தில் உருவாகியிருப்பினும் அவற்றின் ஊடே புராதன காலத்தின் மிச்சங்கள் இன்னமும் வீற்றிருப்பது ஒரு அதிசய அம்சம்.
அத்தகைய ஷிவ்புரி நகரத்திலிருந்து ஜான்சி செல்லும் வழியில் இந்த சுர்வயா கி கர்ஹி எனும் சிறிய நகரம் அமைந்துள்ளது. அழகிய நிசப்தம் தவழும் ஏரி ஒன்று இந்த சிறுநகரத்தின் அழகை மேலும் கூட்டும் வகையில் அமைந்திருக்கிறது.
சிவபெருமானுக்காக அமைக்கப்பட்டிருக்கும் ஒரு புராதன கோயில் இந்நகரத்தின் அடையாளமாக வீற்றிருக்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கலைப்படைப்பாக இந்த கோயில் பிரசித்தமாக அறியப்படுகிறது.
சிற்பகலை அம்சங்கள் மற்றும் கட்டிடக்கலை நுணுக்கங்கள் நிறைந்த ஒரு புராதன படைப்பாக இது கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. இந்த கோயில் ஸ்தலத்தில் அலங்கார கருங்கல் சிற்ப வேலைப்பாடுகள் நிரம்பிய ஒரு திறந்த வெளி அரங்கமும் அமைந்துள்ளது.
இந்தியாவில் வேறெங்கும் காணமுடியாத ஒரு கட்டுமானமாக பிரமிப்பூட்டும் கலையம்சம் மற்றும் நுணுக்கமான வேலைப்பாடுகளோடு இந்த திறந்த வெளி அரங்கம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
புராதன காலத்தில் இந்த அரங்கில் ஒலித்த சலங்கை ஒலியும் இசைக்கருவிகளின் அதிர்வும் நம் காதில் இன்னமும் ஒலிப்பது போன்ற பிரமையை இங்கு உணரலாம்.



Click it and Unblock the Notifications