தோரண்மால் - விந்தையான கவர்ச்சியுடைய மலைவாசஸ்தலம்

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நந்தூர்பார் மாவட்டத்தில் உள்ள அடக்கமான ஒரு மலைவாசஸ்தலம் இந்த தோரண்மால் ஆகும்.  சத்புரா  மலைத்தொடரில் 1,150 அடி உயரத்தில் அமைந்துள்ள இது ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக அறியப்படுகிறது. ஒரு பீடபூமி போன்று உச்சியில் 44 ச.கி.மீ பரப்பளவில் இந்த தோரண்மால் அமைந்துள்ளது.

இந்த மலைவாசஸ்தலம் தோர்ணா எனும் மரத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. ஐதீக நம்பிக்கைகளின்படி இந்தப்பிரதேசம் முழுக்க தோரணா மரங்களால் நிரம்பியிருந்ததாகவும் இங்கு வசித்த ஆதிகுடிகள் தோரணா மரத்தை பெண்மையின் வடிவமாக தோர்ணா தேவி என்றே வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இங்குள்ள பல விசேஷ அம்சங்களில் யஷ்வந்த் ஏரி முக்கியமான சுற்றுலா அம்சமாக புகழ் பெற்று விளங்குகிறது. அது தவிர ஏராளமான கோயில்கள் இங்கு உள்ளன. கோரக்நாத் மற்றும் நாகார்ஜுனா கோயில்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும்.

சீதாகாய் எனும் அழகிய பள்ளத்தாக்கு, காட்கி பாயிண்ட் மற்றும் சன்செட் பாயிண்ட் போன்ற மலைக்காட்சி தளங்கள் போன்றவையும் இங்கு முக்கியமான அம்சங்களாக உள்ளன.

தோர்ணமால் – விசேஷ தகவல்கள்

மலையின்மீது அமர்ந்திருப்பதால் இந்த தோரண்மால் மலைவாசஸ்தலம் வருடமுழுதுமே அற்புதமான பருவநிலையை கொண்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களுடனும் நல்ல போக்குவரத்து வசதிகளை கொண்டிருப்பதால் ஒரு நல்ல விடுமுறை சுற்றுலாத்தலமாக இது பிரசித்தமாக அறியப்படுகிறது.

நாலாபுறமும் மலைகளால் சூழப்பட்டுள்ளதால் பசுமையாக காட்சியளிக்கும் இந்த தோரண்மால் மஹாராஷ்டிரா மாநிலத்தின் இரண்டாவது குளுமையான மலைவாசஸ்தலமாக அறியப்படுகிறது.

பல அற்புதமான ஏரிகளையும், மலைக்காட்சி தளங்களையும் இது கொண்டுள்ளது. அது மட்டுமில்லாமல் மலையேற்றத்துக்கு உகந்த மலைப்பாதைகளும் இங்கு உள்ளன. நகரச்சந்தடிகளிலிருந்து விலகி அமைதியையும் இயற்கைச்சூழலையும் அனுபவிக்க தோதான சிறிய மலைவாசஸ்தலம் இந்த தோரண்மால் ஆகும்.

Please Wait while comments are loading...