நம்ம எல்லாருக்குமே பிரபலமான திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா பற்றி தெரியும், பலரும் நிச்சயம் சுவைத்து இருப்போம். ஆனால் அதை விட கூடுதல் சுவைக்கொண்ட ஒரு அல்வாவுக்கு பிரபலமான ஊரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? அது தான் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சார்ந்த, காரைக்கால் அல்வா! காரைக்காலில் பல ஆண்டுகளாக விசேஷமான அல்வா மற்றும் குலாப்ஜாமூன்கள் விற்கப்படுகின்றன, அப்படி என்ன அதீத சுவை? எங்கே வாங்க வேண்டும் என்று இங்கே பார்ப்போம்!
திருநெல்வேலி அல்வாவை விட கூடுதல் சுவை
நம்மில் பெரும்பாலானோருக்கும் அல்வா என்றல் நினைவுக்கு வருவது திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா தான். ஆனால், திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவுக்கே சவால் கொடுக்கக்கூடிய அளவுக்கு இருக்கிறதாம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சார்ந்த, நாகப்பட்டினத்திற்கு முன்னர் அமைந்திருக்கும் காரைக்காலின் அல்வா. காரைக்காலில் அல்வா மட்டுமல்ல குலாப்ஜாமூன்களும் மிகவும் பேமஸ். இனிப்பே பிடிக்காதவர்கள் கூட இந்த குலாப்ஜாமூன்களுக்கு அடிமைகளாக இருப்பார்கள் என்று பலர் கூறுகின்றனர்.

காரைக்கால் அல்வா தோன்றிய கதை
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் நாகூரை சேர்ந்த வியாபாரி ஒருவர் காரைக்காலுக்கு வணிகம் தொடர்பாக வந்ததாக கூறப்படுகிறது. அவர் அல்வாவில் பல வகைகள், குலாப்ஜாமூனை செய்து விற்றதாக கூறப்படுகிறது. ஆனால் வாங்கி சாப்பிட்டவர்கள் அனைவரும், மீண்டும் மீண்டும் கடைக்கு ஓடி வந்து வாங்க ஆரம்பித்தனர். இந்த அல்வாவின் புகழ் சுற்றி இருக்கும் ஊர்களில் பரவியது. அவர் கடையை போலவே காரைக்காலில் பல கடைகள் நாளடைவில் துவங்கப்பட்டு அல்வா மற்றும் குலாப்ஜாமூன் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்தது.
அனைவரையும் சுண்டி இழுக்கும் சுவை
உலகப்புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில், காரைக்கால் அம்மையார் கோவில், திரு பட்டினம் ஆயிரங்காளியம்மன் கோவில் என காரைக்காலை சுற்றி ஏராளமான புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. கோவில்களுக்கு வருபவர்களும், உலகப்பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு நீங்கள் வருகை தந்தாலும், அல்லது நாகூர் தர்காவிற்கு சென்றாலும் என இந்த ஊரை கடந்து செல்லும் எவரும் காரைக்கால் புகழ் அல்வா மற்றும் குலாப்ஜாமூனை வாங்கி செல்லாமல் இருக்க மாட்டார்கள்.

எந்த கடைகளில் வாங்க வேண்டும்
காரைக்காலில் பல கடைகளில் அல்வா மற்றும் குலாப்ஜாமூன்கள் விற்கப்படுகின்றன. ஆனாலும் நீங்கள் காரைக்கால் பாரதியார் சாலையில் அமைந்துள்ள நாகூர் அல்வா கடை, காரைக்கால் அல்வா கடை, ராசி அல்வா கடை உள்ளிட்ட கடைகளில் நீங்கள் எதில் வேண்டுமானாலும் அல்வா வாங்கலாம்.
என்னென்ன வகை? எவ்வளவு ருபாய்?
1. பாதாம் அல்வா - கிலோ ரூ.500
2. பருத்தி அல்வா - கிலோ ரூ.400
3. தம்ரூட் அல்வா - கிலோ ரூ.500
4. கோதுமை அல்வா - கிலோ ரூ.500
5. குலாப்ஜாமூன் - கிலோ ரூ.600
6. பால்கோவா - கிலோ ரூ.500
7. பட்டர்கோவா - கிலோ ரூ.500
8. ஸ்பெஷல் அல்வா - கிலோ ரூ.600
9. பிஸ்தா அல்வா - கிலோ ரூ.700
10. மைசூர்பாகு - கிலோ ரூ.400
இவற்றை எல்லாம் உங்களுக்கு சாம்பிள் சாப்பிடவும் கொடுப்பார்கள். சுவைத்து பார்த்தே உங்களுக்கு பிடித்தவற்றை நீங்கள் வாங்கி செல்லலாம். கட்டாயம் ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள்! பின்னர் நீங்களே தேடிச் சென்று வாங்குவீர்கள்!



Click it and Unblock the Notifications





