ஆலி - உலகப் புகழ் பெற்ற பனிச்சறுக்கு உலகம்!

உலகம் முழுவதுமுள்ள சுற்றுலாப் பயணிகள் பனிச்சறுக்கு சாகசம் செய்து விளையாட ஏற்ற அழகிய சுற்றுலாத் தலம் ஆலி! கடல் மட்டத்திலிருந்து 2800 மீ உயரத்தில் உள்ள ஆலி, அங்குள்ள ஓக் மரங்களை கொண்ட சரிவுகள் மற்றும் பசுமையான ஊசியிலைக்காடுகளுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும். உள்ளூர்வாசிகளின் நம்பிக்கைப் படி ஆதி சங்கராச்சார்யா இந்த இடத்திற்கு வருகை புரிந்துள்ளார்.

'புல்வெளி' என்று வட்டார மொழியில் பொருள் தரும் 'புக்யால்' என்ற பெயரிலும் இந்த பகுதி அழைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியின் மூடுபனி நிரம்பிய சரிவுகளில் நடந்து செல்லும் வேளைகளில் சுற்றுலாப் பயணிகள் நந்தா தேவி, மனா பர்வதம் மற்றும் காமட் மலைத்தொடர்களின் மலைக்கச் செய்யும் காட்சிகளைக் காண முடியும்.

மேலும், ஆப்பிள் பண்ணைகள் மற்றும் தியோதர் மரங்களின் அணிவகுப்பையும் இந்த சரிவுகளில் சுற்றுலாப் பயணிகள் காண முடியும்.

ஆலக்நந்தா மற்றும் நந்தாகினி நதிகள் சங்கமமாகும் இடத்தில் ஆலியின் பிரபலமான சுற்றுலா தலமான நந்தபிரயாகை அமைந்துள்ளது. இந்த நதிகள் சங்கமமாகும் இடத்தில் மூழ்கி எழுவது இந்துக்களின் முக்கியமான கடமையாகும். பனியை உடுத்திக் கொண்டுள்ள மலைகளான பத்ரிநாத் மற்றும் கேதர்நாத் செல்வதற்கான நுழைவாயிலாக நந்தபிரயாகை உள்ளது.

குறைவான பனிப்பொழிவு இருக்கும் மாதங்களில் பனிச்சறுக்கு செய்ய வசதியாக இருக்கும் பொருட்டாக அரசாங்கத்தால் தனியாக உருவாக்கப்பட்ட ஆலி செயற்கை ஏரி ஆலியின் முதன்மையான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.

மேலும், கடல் மட்டத்தில் இருந்து 2744 மீ உயரத்தில் அமர்ந்திருக்கும் பவிஷ்யா பத்ரிக்கும் சுற்றுலாப் பயணிகள் இங்கிருந்து சென்று வர முடியும். ஐந்து பத்ரி கோவில்களில், பத்ரிநாத், யோக் தியான் பத்ரி, ஆதி பத்ரி மற்றும் விரிதா பத்ரி ஆகியவற்றிற்குப் பிறகு வரும் ஐந்தாவது பத்ரி கோவிலை கொண்டிருக்கும் இடமாக ஆலி விளங்குகிறது.

கோடை காலத்திலும் பசுமையால் போர்த்தப் பட்டிருக்கும் அழகிய இடமாக குர்சோ புக்யால் உள்ளது. இந்த இடம் பசுமையான ஊசியிலை மற்றும் ஓக் மரங்களால் சூழப்பட்டுள்ளது.

ஜோஷிமாத்தில் இருந்து கயிற்றுப் பாதை வழியாகவே சுற்றுலாப் பயணிகள் இவ்விடத்திற்கு வர முடியும். மேலும், குர்சோ புக்யாலுக்கு அருகிலேயே சட்டர்குன்ட் ஏரி என்னும் நீர்நிலையும் உள்ளது.

ஆலிக்கு அருகில் உள்ள சிறிய கிராமமான சலிதார் தபோவனத்தில் சுற்றுலாப் பயணிகள் ஒரு இயற்கையான நீரூற்றையும் மற்றும் கோவிலையும் காண முடியும்.

ஆலியின் பனி படர்ந்த சரிவுகளில் பனிச்சறுக்கினை நீங்கள் வேண்டிய மட்டிலும் அனுபவித்து விளையாட முடியும். அல்பைன் பனிச்சறுக்கு, நோர்டிக் பனிச்சறுக்கு மற்றும் டெலிமார்க் பனிச்சறுக்கு ஆகிய வகைகளை இந்த சரிவுகளில் உங்களால் அனுபவித்திட முடியும்.

ஆலியில் ஆசியாவிலேயே மிகவும் நீளமான மற்றும் உயரமான கேபிள் கார் வசதி சுமார் 4 கிலோமீட்டர்களுக்கு செய்யப்பட்டுள்ளது. கோண்டோலா என்று அழைக்கப்படும் இந்த கேபிள் கார்களில் சேர் லிப்ட் மற்றும் ஸ்கை லிப்ட் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த சரிவுகளின் மிதமான தன்மை பனியை ஒழுங்குபடுத்தும் இயந்திரங்கள் மற்றும் ஸ்னோ பீட்டர்களால் சரியாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

இமயமலைப் பகுதிகளில் மலையேற்றம் செய்வதற்கு மிகவும் ஏற்ற இடமாக ஆலி உள்ளது. இவற்றில் ஜோசிமாத் மலையேற்றப் பாதை சுற்றுலாப் பயணிகளிடம் பிரபலமானது.

காமட், நந்தா தேவி, மனா பர்வதம் மற்றும் துனாகிரி ஆகிய சிகரங்களின் அழகிய காட்சிகளை இந்த பிரதேசத்தில் மலையேற்றம் செய்திடும் வேளைகளில் காணலாம்.

கடல் மட்டத்திலிருந்து 7160 அடி உயரத்தில் அமைந்துள்ள திரிசூல் சிகரம் ஆலியின் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இந்த சிகரம், சிவபெருமானின் கையிலுள்ள திரிசூலத்தின் பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது.

சிறந்த பனிச்சறுக்கு பிரதேசமாக இருக்கும் இந்த இடம், இந்தோ-திபெத்திய காவல் படையின் பயிற்சி களமாகவும் உள்ளது. மேலும், இந்த மலையின் அடிவாரத்தில் ரூப்குந்த் என்ற ஏரியையும் சுற்றுலாப் பயணிகள் காண முடியும்.

ஆலியை சுற்றுலாப் பயணிகள் விமானம், இரயில் மற்றும் சாலை வழிகளில் எளிதாக அடைய முடியும். டேஹ்ராடூனில் இருக்கும் ஜாலி கிராண்ட் விமான நிலையம் மற்றும் ஹரித்துவார் இரயில் நிலையம் ஆகியவை ஆலிக்கு அருகில் இருக்கும் விமான மற்றும் இரயில் நிலையங்களாகும்.

மேலும் அருகிலுள்ள நகரங்களிலிருந்து தொடர்ச்சியான பேருந்து சேவைகளும் ஆலிக்கு இயக்கப்பட்டு வருகின்றன. பருவநிலை மிகவும் சாதகமாக இருக்கும் கோடைக்காலம் ஆலிக்கு சுற்றுலா வர சிறந்த காலமாகும்.

Please Wait while comments are loading...