ஷாஹ்பூர் மற்றும் நுர்பூருக்கு இடையே செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த கொட்லா கோட்டை காங்க்ரா மாவட்டத்தில் உள்ள மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும்.
ஒரு தனிமையான மலையின் உச்சியில் இந்த கோட்டை கட்டப்பட்டிருப்பதால் அருகிலுள்ள எல்லா இயற்கை காட்சிகளின் அழகையும் இதன் உச்சியிலிருந்து நன்றாக பார்த்து ரசிக்கலாம். குலேர் வம்ச மன்னர்களின் ஆதரவில் இக்கோட்டை கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
உயரமான பைன் மரங்கள் நிரம்பிய வனப்பகுதிக்கு நடுவே உள்ள இக்கோட்டை வளாகம் வித்தியாசமான சூழலில் ஓய்வெடுக்கும் இனிய அனுபவத்தை சுற்றுலாப்பயணிகளுக்கு வழங்குகிறது.
இக்கோட்டையின் நுழைவாயில் பகுதியிலுள்ள பகலாமுகி கோயிலுக்கும் பயணிகள் விஜயம் செய்யலாம். விநாயகருக்காக கட்டப்பட்டுள்ள ஒரு சிறு கோயிலும் இந்த கோட்டைப்பகுதியில் உள்ளது.
வங்காளக்கோயில்கள் போன்று வட்ட வடிவமான கூரையை இந்த கோயில் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. கோயிலின் வெளிச்சுவர்கள் ஓவியங்கள் தீட்டப்பட்டு காட்சியளிப்பதுடன் ஒரு புறத்தில் மூன்று விதான வளைவுகள் மற்றும் குழிவு மாடங்கள் போன்றவற்றையும் கொண்டுள்ளன.



Click it and Unblock the Notifications