காங்கேர் மாவட்டத்தில் உள்ள மிக உயரமான மலையாக இந்த கடியா மலை அமைந்திருக்கிறது. ஒரு இயற்கை கோட்டை போன்று காட்சியளிக்கும் இந்த மலைப்பகுதி கந்த்ரா வம்சத்தை சேர்ந்த தர்மதேவ் என்ற மன்னரின் தலைநகரமாகவும் இருந்திருக்கிறது.
எப்போதுமே வற்றாத குளம் ஒன்று இந்த மலையின் உச்சியில் காணப்படுகிறது. இந்த மலைகளிருந்து தூத் எனும் ஆறும் ஓடிவருகிறது.
மலை உச்சியில் உள்ள வற்றாத குளம் பற்றி ஒரு கதையும் சொல்லப்படுகிறது. அதாவது, இந்த குளத்தின் இரண்டு தொகுதிகளான சோனாய் மற்றும் ரூபாய் ஆகிய இரண்டும் மன்னரின் இரண்டு மகள்களின் பெயர்களாக சொல்லப்படுகிறது.
இந்த இரண்டு மகள்களும் இந்த குளத்தில் விழுந்து இறந்துபோனதால் அவர்களது பெயர்களாலேயே ‘சோனாய்-ரூபாய் தலாப்’ என்று இந்த குளம் அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. தங்க மீனாகவும், வெள்ளி மீனாகவும் அவர்கள் இருவரும் இந்த குளத்தின் அடியில் இன்றும் வசிப்பதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்.
இந்த குளத்தின் தென்பகுதியில் சுரி பகர் எனும் குகை ஒன்றும் அமைந்திருக்கிறது. சுமார் 500 பேர் அடைக்கலமாகும் அளவுக்கு இடவசதியை கொண்டுள்ள இந்த குகை எதிரிகள் தாக்குதலின்போது பாதுகாப்பாக இருப்பதற்கு பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இவை தவிர சீத்லா கோயில் ஒன்றும் கடியா மலை உச்சியில் அமைந்திருக்கிறது.
கடியா மலையில் மஹாசிவராத்திரி திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அச்சமயம் ஏராளமான பக்தர்கள் இந்த மலை உச்சிக்கு வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications