மத்தியப்பிரதேசம் சுற்றுலா -  வசீகரிக்கும் வரலாற்று மண்!

முகப்பு » சேரும் இடங்கள் » » கண்ணோட்டம்

இந்தியாவிலேயே 2-வது பெரிய மாநிலமாக மத்தியப்பிரதேசம் அறியப்படுகிறது. இயற்கை எழில், புவியியல் அமைப்பு, ஆழமான வரலாற்று பின்னணி மற்றும் தனித்தன்மையான கலாச்சார பாரம்பரியம் போன்றவற்றுக்காக இந்த மாநிலம் இந்தியாவின் முக்கியமான சுற்றுலா கேந்திரமாக பிரசித்தி பெற்றுள்ளது.

இம்மாநிலத்தின் தலைநகரமான போபால் நகரம் ஏரிகளின் நகரம் எனும் சிறப்புப்பெருமையுடன் திகழ்கிறது. சுற்றுலாப்பயணிகள் அனுபவித்து ரசிக்க விரும்பும் எல்லா அம்சங்களையும் மத்தியப்பிரதேச மாநிலம் தன்னுள் கொண்டுள்ளது.

பண்டவ்கர் தேசிய வனவிலங்கு சரணாலயத்தின் கம்பீரமான புலிகள் மற்றும் கஜுராஹோவின் அற்புதக்கோயில்கள் என வெகு அபூர்வமான அம்சங்கள் மத்தியப்பிரதேச  மாநில சுற்றுலாவை  தனித்துவம் வாய்ந்தவையாக  பிரசித்தி பெற வைத்துள்ளன.

புராதன இந்தியா குறித்த அறிமுகத்திற்கு மத்தியப்பிரதேச  மாநிலத்தில் ஒரு முறை சுற்றுலா மேற்கொள்வது அவசியம் என்றே சொல்லலாம்.

மத்தியப்பிரதேசத்தின் புவியியல் அமைப்பு!

இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்திருப்பதோடு மட்டுமல்லாமல் செழிப்பான இயற்கை வளமும் நிரம்பியதாக காட்சியளிப்பதால் இம்மாநிலம் சுற்றுலாப்பயணத்திற்கு மிகவும் ஏற்றது.

வானளாவிய மலைத்தொடர்கள், ஆறுகள் பாயும் பசுமையான வனப்பகுதிகள் மற்றும் வற்றாத ஏரிகள் என்று இயற்கையின் எல்லா பரிமாணங்களையும் மத்தியப்பிரதேச மாநிலம் கொண்டுள்ளது.

விந்தியா மற்றும் சத்புரா மலைத்தொடர்களுக்கிடையே நர்மதா மற்றும் தபதி ஆகிய இரு ஆறுகளும் ஒன்றுகொன்று இணையாக இம்மாநிலத்தில் பாய்கின்றன. பல்வகையான தாவரங்கள் மற்றும் காட்டுயிர் அம்சங்கள் நிரம்பிய இயற்கை வளத்தை பெற்றிருப்பது இம்மாநிலத்தின் தனித்தன்மையாகும்.

வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரியம்!

மிக நீண்ட வரலாற்றுப்பின்னணியை கொண்டுள்ள மத்தியப்பிரதேச  மாநிலம் பல ராஜவம்சங்களின் ஆட்சிகளை சந்தித்து வந்துள்ளது. மௌரியர்கள், ராஷ்டிரகூடர்கள் மற்றும் குப்தர்கள் தொடங்கி புந்தேளர்கள், ஹொல்கார், முகலாயர்கள் மற்றும் சிந்தியா வம்சத்தினர் வரை இப்பிரதேசத்தை ஆண்டிருக்கின்றனர்.

எனவே இப்பகுதியின் பாரம்பரியத்தில் பல்வேறு கலை மற்றும் கட்டிடக்கலை பாணிகளின் தாக்கத்தை காணலாம்.

அற்புதமான சிற்பங்களை கொண்டிருக்கும் கஜுராஹோ வரலாற்று கோயில் ஸ்தலம், குவாலியர் கோட்டை, உஜ்ஜைன் கோயில்கள் மற்றும் சித்ரகூடம் எனப்படும் ஒர்ச்சா சாத்ரிகள் ஆகியவை இம்மாநிலத்தின் பிரசித்தமான கட்டிடக்கலை சின்னங்களாகும்.

கஜுராஹோ, சாஞ்சி மற்றும் பிம்பேத்கா ஆகிய ஸ்தலங்கள் உலகப்பாரம்பரிய ஸ்தலமாக யுனெஸ்கோ அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.

மத்தியப்பிரதேச மாநிலத்தின் பூர்வகுடி கலாச்சாரமும் மிக முக்கியமானதொரு சுற்றுலா அம்சமாக அங்கம் வகிக்கிறது. கோண்ட் இனத்தார் மற்றும் பீல் இனத்தார் ஆகியோர் இம்மாநிலத்தின் முக்கியமான பூர்வகுடிகள் ஆவர்.

இவர்களது கைவினைப்பொருட்கள் மற்றும் கலைப்பொருட்கள் போன்றவை இந்தியா முழுமையும் அறியப்பட்டிருப்பது ஒரு விசேஷ அம்சம். மேலும் பூர்வகுடி மக்களின்   இசை நடனம் போன்ற கலை வடிவங்களும் இந்தியாவின் கலைப்பரிமாணங்களில் ஒன்றாக ரசிக்கப்படுகிறது.

காட்டுயிர் வளம் - மத்தியப்பிரதேச மாநிலத்தின் மற்றொரு கவர்ச்சி அம்சம்!

விந்திய மலைத்தொடர் மற்றும் சத்புரா மலைத்தொடர்களில் அமைந்துள்ள பசுமையான வனப்பகுதிகளில் பல்வகையான காட்டுயிர் அம்சங்கள் நிறைந்துள்ளன.

பந்தவ்கர் தேசியப்பூங்கா, பெஞ்ச் தேசிய பூங்கா, வன் விஹார் தேசியபூங்கா, கன்ஹா தேசியப்பூங்கா, சத்புரா தேசிய பூங்கா, மாதவ் தேசியபூங்கா, பன்னா தேசியப்பூங்கா போன்ற தேசியப்பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் மத்தியப்பிரதேஷ்  மாநிலத்தில் அமைந்துள்ளன. இவற்றில் பலவகையான பறவைகள், விலங்குகள் மற்றும் தாவர வகைகளை பார்க்க முடியும்.

நீமுச் எனும் இடத்திலுள்ள காந்தி சாகர் சரணாலயமும் ஒரு முக்கியமான காட்டுயிர் பூங்காவாகும். சமீபகாலமாக இயற்கைச்சுற்றுலாவுக்கு ஏற்ற பிரதேசமாக மத்தியப்பிரதேஷ்  மாநிலம் பிரசித்தி பெற்று வருகிறது.

உணவு, திருவிழா மற்றும் சந்தைக்கொண்டாட்டங்கள்!

மத்தியப்பிரதேச  மாநில சுற்றுலா அம்சங்களில் இம்மாநிலத்தின் பிரத்யேக உணவுச்சுவையும் முக்கிய அங்கம் வகிக்கிறது. பெரும்பாலும் ராஜஸ்தானிய மற்றும் குஜராத்தி உணவு முறை இம்மாநிலத்தில் பிரதானமாக புழக்கத்தில் உள்ளது.

மாநிலத்தலைநகரான போபால் நகரம் சீக் மற்றும் ஷாமி கபாப் உணவுப்பண்டங்களுக்கு புகழ் பெற்றுள்ளது. சுவையான ஜிலேபிகள் மற்றும் முந்திரி இனிப்பு வகைகள் மாநிலத்தின் எல்லா பகுதிகளிலும் விற்கப்படுகின்றன. இருப்பினும் உணவுப்பழக்கங்களை பொறுத்தவரை இம்மாநிலத்தில் இடத்துக்கு இடம் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

கஜுராஹோ நடனத்திருவிழா மற்றும் குவாலியர் நகரத்தில் நடத்தப்படும் தான்சேன் இசைத்திருவிழா போன்ற கலைத்திருவிழாக்கள் உலகளாவிய அளவில் பிரசித்தமாக அறியப்படுகின்றன.

மதாய் திருவிழா மற்றும் பகோரியா திருவிழா போன்றவை மத்தியப்பிரதேச மாநிலத்தின் கிராமப்பகுதிகளில் பூர்வகுடி மக்களால் நடத்தப்படும் திருவிழா நிகழ்ச்சிகளாகும்.  

Please Wait while comments are loading...