நீங்கள் சென்னைவாசியாகவோ அல்லது வெளியூரில் இருந்து சென்னை வருபவராக இருந்தாலும், பெருங்களத்தூர், தாம்பரம், பல்லாவரம் இடையே நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலில் நிச்சயம் ஏதேனும் ஒரு முறையாவது சிக்கி இருப்பீர்கள்! ஆனால், தினம் தினம் இதே பிரச்சினையை எதிர் கொள்ளும் சென்னை வாசிகள், இதற்கு ஒரு தீர்வு காணும் படி அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி, தாம்பரத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு முடிவு காணப்பட்டுள்ளது!
போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் தாம்பரம்
தாம்பரம் சென்னை GST சாலையில் அமைந்திருப்பதால் எப்போதுமே ஒரு வித போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்கிறது. தாம்பரத்தில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் வாகன அடர்த்திக்கு ஏற்றவாறு சாலை கட்டமைப்புகள் சிரமப்படுகின்றன. குறுகிய சாலைகள், சரியான வாகன நிறுத்துமிடம் இல்லாதது, போதிய போக்குவரத்து மேலாண்மை இல்லாதது நெரிசலை அதிகப்படுத்துகிறது. வாரத்தின் அனைத்து நாட்களிலும் பீக் ஹவர்களில் தாம்பரம் போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்கிறது.

தாம்பரத்தில் எப்போதுமே வாகன நெரிசல்
தாம்பரம் மார்க்கெட், தாம்பரம் ரயில் நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் ஆகிய மூன்றுமே கிட்டத்தட்ட ஒரே இடத்தில் அமைந்திருப்பது நெரிசலை இன்னமும் மோசமாக்குகிறது. சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை எழும்பூருக்கு அடுத்தப்படியாக சென்னையின் மூன்றாவது பெரிய ரயில் நிலையமாக செயல்படுவது தாம்பரம் சந்திப்பு ஆகும். இங்கு புறநகர் ரயில் சேவைகள் மற்றும் தென் மாவட்டங்களுக்கு ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இதனால் தாம்பரத்துக்கு வருகை தரும் ரயில் பயணிகள் வந்து செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
விரைந்து தீர்வு காணுமாறு கோரிக்கை
இது தவிர் தாம்பரம் மார்க்கெட் வந்து செல்வோரும், தாம்பரம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வோரும் GST சாலையிலேயே வாகனங்கள் நிறுத்துவதும், இறங்கி செல்வதுமாக இருப்பதாலும் தாம்பரத்தில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், பயணிகள் சரிவர நேரத்திற்கு போய் சேர வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். முக்கியமாக இது சென்னை விமான நிலையத்திற்கு மிக அருகாமையில் இருப்பதால் இந்த பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணுமாறு பல்வேறு தரப்பில் இந்து அரசுக்கு கோரிக்கை வந்து சேர்ந்த வண்ணம் இருக்கிறது.

ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள்
இதைத்தொடர்ந்து தாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த 2 பஸ்நிலையங்களிலும் மாநகராட்சி மேயர் வசந்த குமாரி கமலக்கண்ணன், துணை மேயர் காமராஜ், ஆணையர் பாலச்சந்தர், மண்டல தலைவர் காமராஜ் இந்திரன், தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன் போக்குவரத்து உதவி ஆணையர் ராஜன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இந்த இரண்டு பஸ் நிலையங்களிலும் ஆய்வு செய்தனர். தாம்பரத்திற்கு என தனி பஸ் நிலையம் இல்லாததால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் ரயில் நிலையத்துக்கு எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலையை ஒட்டி ஆங்காங்கு நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
தாம்பரத்தில் புதிய பேருந்து தடங்கள்
சாலையின் ஓரத்தில் ஒரு புறத்தில் மட்டுமே தூண்கள் அமைத்து புதிய பேருந்து வழிகள் கட்டப்படவுள்ளதால் சாலையை ஒட்டி உள்ள பகுதியில் சாலை மார்க்கத்தில் 10 மீட்டர் அகலத்திற்கு காலியிடம் கிடைக்கும். இதன் மூலம் தற்போது இரண்டு வரிசைகளில் செல்லும் வாகனங்கள் 3 வரிசைகளில் செல்ல முடியும். இதனால் தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல் சீரமைக்கப்படும் பஸ்நிலையங்களில் நவீன மேற்கூரை, கண்காணிப்பு கேமராக்கள். ஒலிபெருக்கிகள், டிஜிட்டல் பெயர்பலகை உள்ளிட்டவை நவீனமாக அமைக்கப்படுகிறது.
தென் மாவட்ட பேருந்துகளுக்கு புதிய பஸ் நிலையம்
அதன்படி ஜி.எஸ்.டி.சாலையின் ஓரத்தில் ஒருபுறத்தில் மட்டுமே இரண்டு மீட்டர் அகலத்திற்கு நடைபாதை, கான்கிரீட் தூண்களுடன் மேற்கூரை அமைக்கப்பட உள்ளது. சென்னைக்கு செல்லும் பஸ்கள் மட்டுமல்லாமல் தென் மாவட்டம் மற்றும் சென்னையை ஒட்டி உள்ள பிற மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் சீரமைக்கப்பட்ட பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும். இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.



Click it and Unblock the Notifications



