தமிழகம் மற்றுமொரு புதிய சர்வதேச விமான நிலையத்தை பெறப் போகிறது. வர்த்தக துறைக்கு புதிய பரிமாணத்தை உருவாக்கும் முயற்சியில் தமிழகத்தின் முக்கிய தொழில் நகரமாக விளங்கும் ஓசூரில் மாபெரும் விமான நிலையம் அமைக்கப்படவிருக்கிறது. தற்போது ஓசூர் விமான நிலையத்திற்காக 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ள வேளையில் 2000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளது.
ஓசூரில் 2000 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விமான நிலையம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரை தமிழ்நாட்டின் முக்கியமான பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்கும் நோக்கில் ஓசூரில் சுமார் 2000 ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 3 கோடி பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படவிருப்பதாக தமிழக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி பகுதியின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஓசூரில் ஒரு விமான நிலையம் அமைப்பது அவசியம் என இந்த அரசு கருதுகிறது. ஒசூரில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 3 கோடி பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் விரைவில் அமைக்கப்படவுள்ளது.

தொழில்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு
2022 ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர்-1 மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளது. மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள், தோல் பொருட்கள், மின்னணுப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. இத்தொழில் வளர்ச்சிக்கான மாநிலங்களின் தரவரிசையில், 2020-ம் ஆண்டில் கடைசி நிலையில் இருந்த தமிழ்நாடு, தற்போது சிறந்த செயற்பாட்டாளர் அந்தஸ்தைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளது. இதற்கு தமிழகத்தின் முக்கிய தொழில் நகரமாக விளங்கும் ஓசூரும் ஒரு முக்கிய காரணம்.
முதலீடு மற்றும் முதலீட்டார்களை ஈர்க்க முயற்சி
அனைத்து மாவட்டங்களிலும் தொழில்களைப் பரவலாக உருவாக்கி வருகிறோம். இதில் மின்னணு மற்றும் மின் வாகனங்கள் உற்பத்தித் துறையில் ஓசூர் கடந்த சில ஆண்டுகளில் முதலீடுகளை அதிகளவில் ஈர்த்து வருகிறது. இப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்டு வேகமாக வளர்ந்து வரும் ஓசூர் நகரத்தினை, தமிழ்நாட்டின் முக்கியமான பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்குவதற்காக, அங்கு நவீன உட்கட்டமைப்புகளை அமைக்கும் நோக்கில், பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது. ஓசூரில் மேலும் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், முதலீட்டாளர்களின் பயண நேரத்தை குறைக்கவும், அங்கு சர்வதேச விமான நிலையம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

AAI முடிவுக்காக காத்திருக்கும் டிட்கோ
ஓசூர் விமான நிலையம் அமைக்க, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழக அரசின், 'டிட்கோ' நிறுவனம் தேர்வு செய்த நான்கு இடங்களில், இந்திய விமான நிலையங்களின் ஆணைய அதிகாரிகள், செப்டம்பர் இறுதியில் ஆய்வு செய்தனர். இத்திட்டத்திற்கு போட்டியாக, ஓசூர் அருகேயுள்ள சோமனஹள்ளியில் விமான நிலையம் அமைக்க, கர்நாடக அரசு திட்டமிட்டு உள்ளது. எனவே, ஓசூர் விமான நிலைய திட்டப்பணிகளை விரைவாக துவக்க, AAI முடிவை எதிர்பார்த்து, டிட்கோ காத்திருக்கிறது.
விரைவில் இடம் தேர்வு செய்யப்படும்
'டிட்கோ' எனப்படும், தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நான்கு இடங்களை தேர்வு செய்தது. அவற்றை, AAI எனப்படும் இந்திய விமான நிலையங்களின் ஆணையத்திடம் வழங்கி, சாத்தியக்கூறு அறிக்கை தயாரித்து தர வலியுறுத்தியது. ஆணைய அதிகாரிகள் நான்கு இடங்களில், செப்டம்பர், 29ல் ஆய்வு செய்தனர். இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நான்கில் எந்த இடம் சாதகமாக உள்ளது என்பதை, AAI பரிந்துரை செய்ய வேண்டும். அந்த இடம் தேர்வு செய்யப்பட்டால்தான் இட அனுமதி, திட்ட அனுமதி என, விமான நிலையம் அமைக்கும் பணிகளில் ஈடுபட முடியும். எனவே, விரைந்து ஆய்வு முடிவை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது' என்றார்.



Click it and Unblock the Notifications






