தேக்கடி பகுதியிலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள மங்களாதேவி கோயில் இப்பகுதியின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகும். இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து 1337 மீட்டர் உயரமுள்ள சிகரத்தில் வீற்றுள்ளது.
மேலும் இந்த கோயில் ஸ்தலத்திலிருந்து சுற்றிலுமுள்ள மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் போன்ற இயற்கை எழில் காட்சிகளை பார்த்து ரசிக்க முடிவது விசேஷமான அம்சமாகும். கோயிலைச்சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி நிறைந்திருப்பதால் இந்த கோயில் தரிசனம் பயணிகளுக்கு பரவசமூட்டும் அனுபவமாக இருக்கும்.
புராதனமான இந்த மங்களாதேவி கோயிலானது பாண்டியர் காலத்து கோயில் பாணியில் கற்பாறைகளால் அமைக்கப்பட்டுள்ளது. சிலப்பதிகார காவிய நாயகியான கண்ணகியே இங்கு மங்களாதேவி ரூபத்தில் குடிகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மே மாதத்தில் சித்திரா பௌர்ணமி நாளில் மட்டுமே இக்கோயில் ஸ்தலத்துக்கு விஜயம் செய்ய பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இருப்பினும் மற்ற நாட்களில் வனப்பாதுகாப்பு அலுவலகத்தில் விசேஷ அனுமதி பெற்றும் இக்கோயிலுக்கு விஜயம் செய்யலாம்.
2000 ஆண்டுகள் பழமையான பாதி சிதிலமடைந்த நிலையில் காட்சியளிக்கும் இந்த கோயிலுக்கு பயணிகள் குமுளியிலிருந்து வாடகை ஜீப்புகளை அமர்த்திக்கொண்டு மட்டுமே சென்றடைய முடியும். சாந்தம் தவழும் மலைச்சூழலும், புராதன தென்னிந்திய பழமையின் அமானுஷ்யமும் கமழும் இந்த கோயில் ஸ்தலம் அனுபவித்து ரசிக்க வேண்டிய ஒரு புராதன அம்சமாகும்.



Click it and Unblock the Notifications