'காதல்' அதுவும் முதல் காதல் என்றால் கேட்கவா வேணும்; காதலிக்கும் போது முதல் ஆண்டில் வரும் காதலர் தினத்தன்று, காதலியே ஆச்சரியப்படும் அளவுக்கும், வாழ்வில் மறக்கமுடியாத அளவுக்கு எதாவது செய்ய வேண்டும் என, தேடாதவர்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் இப்போ இருக்கும் '2 k' கிட்ஸ் கேட்கவே வேண்டாம்.
கோடிக் கணக்கில் பணம் இருப்பவர்களும், லட்சக்கணக்கில் மாத ஊதியம் பெறுபவர்களும் உடனே, தன் காதலிக்கு சர்பிரைஸ் கொடுக்க வெளிநாடுகளுக்கு கூட்டிச் செல்வர். ஆனால், காதலிக்கு சர்பிரைஸ் கொடுக்கவும்; அதுவும் 'பட்ஜெட் ப்ரெண்ட்லி' யா இருக்கனும்னு நினைக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு நாங்கள் கொடுக்கும் இந்த சின்ன டிப்ஸ் உதவியா இருக்கலாம் கைய்ஸ்...
பட்ஜெட் ப்ரெண்ட்லி, அதுவும் அச்சத்துடன் வனத்தில் இருந்து உங்கள் தலை முடியை வருடிச் செல்லும் இதமான சில் காற்றும், நட்சத்திரங்களின் கீழ் 'குஷ் குஷ்' னு அமைக்கப்பட்ட மெத்தையில், பால் ஒளியில் உங்கள் காதலியின் மடியில் உறங்குவதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா?
அது எப்படி சாத்தியம்.. பட்ஜெட் ப்ரெண்ட்லி என கேட்டால், நாங்க சொல்லுவோம் முடியும். அதுவும் குறைந்தபட்சம் 3,000 ரூபாயில். இரண்டு வாரங்கள் தான் இருக்கு... இப்பவே நட்சத்திரங்களின் பால் ஒளியில் காதலி மடியில் படுத்து, வான்வெளி அழகை பார்ப்பது போன்று கற்பனையில் இருக்கீங்க போல... அப்ப உடனே புக் செஞ்சுட்டு கற்பனையில் மிதக்கலாம் லவ்ர்ஸ்...!

இந்தியாவில், அசாம் முதல் உத்தரகாண்ட் இடையேயான கோட்டைகள், படகுகளை, முன்பதிவு செய்து, நட்சத்திரங்களையும், அதிலிருந்து வெளிப்படும் பால் ஒளியையும் ரசித்தவாறு, வானத்தின் சிறந்த காட்சிகளை, கீழே குறிப்பிட்டிருக்கும் ஒரு சில இடங்களில் உள்ள இந்த படுக்கைகளை புக் செய்யுங்க... உங்க காதலியுடன் இந்த லவ்வர்ஸ் டே பிரகாசமாகவும், மறக்க முடியாத அனுபவமாகவும் மாற்றி காட்டுங்கள்..
டாஸ் கிளாம்பிங், கேரளா
காடுகளின் மையத்தில் அமைக்கப்பட்ட இந்த கண்கவர் இடம், கேரள மாநிலம், இடுக்கியின் மவுண்ட் சத்திரம் ஆகும். இரண்டு பேருக்கு நான்கு கண்ணாடி அறைகள் மற்றும் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒரு பெரிய அறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
சார்ஜிங் போர்ட்கள் மற்றும் லைட்டிங் பொருத்தப்பட்ட இந்த கேபின்கள், சிறந்த வெளிப்புறங்களின் நேரடி பார்வை மற்றும் அனுபவத்தை வழங்குகின்றன.
கண்ணாடி சுவர்கள் வாயிலாக, வானத்தையும், பள்ளத்தாக்கையும் உங்கள் காதலியின் கண்கள் ஊடே நீங்களும் பார்த்து ரசிக்கலாம். இரண்டு பேருக்கு கட்டணம் ரூ.4,500.
ராமத்ரா கோட்டை, ராஜஸ்தான்
பழைய கட்டடத்தின் ஊடே ஆடம்பரத்தை, ராமத்ரா கோட்டை வெளிப்படுத்துகிறது. இங்கு டீலக்ஸ் அறைகள் மற்றும் கூடாரங்கள் இருக்கின்றன. இருப்பினும், நேர்த்தியான இருக்கையுடன் கூடிய இரண்டு சொகுசு அறைகள். கிங் சைஸ் படுக்கைகள், அரண்மனையின் அற்புதமான காட்சிகளைக் கொண்ட தனியார் மொட்டை மாடிகளும் உள்ளன.
நீங்கள் கேட்டால், இந்த தனியார் மொட்டை மாடிகளில் படுக்கைகளை ஏற்படுத்தி கொடுப்பர். அங்கு உங்கள் காதலியுடன் வானில் மின்னும் நட்சத்திர கூட்டங்களில் இருந்து வரும் பால் ஒளியை காணுவதோடு, உங்களின் அன்பானவருடன் பாதுகாப்பாக உறங்கலாம்.
ஜம்தாரா வன முகாம், மத்திய பிரதேசம்
இங்குள்ள ஒவ்வொரு சொகுசு கூடாரமும், நீங்கள் இயற்கையோடும், உங்களின் அன்பானவருடன் நட்சித்தர படுக்கையின் கீழ் ஒன்றி இருப்பதை உணர வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்கு அமைக்கப்படும் கட்டில், மெத்தைகள், உள்ளூர் விவசாயிகளின் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் புக் செய்யும் தொகையில் இருந்து ஒரு குறிப்பிட்ட வருவாய், அப்பகுதி விவசாயிக்கு திருப்பி தரப்படுகிறது.
பகலில் வயல்களையும், வனவிலங்குகளையும், இரவில் நட்சத்திரக் கூட்டங்களைப் பார்த்து, இந்த காதலர் தினத்தை, உங்களின் காதலிக்கு மறக்க முடியாத நாளாக மாற்ற தயாராகுங்க... இருவருக்கு கட்டணம் ரூ.7,350 முதல்...
அசாம் பெங்கால் நேவிகேஷன்
அசாம் பெங்கால் நேவிகேஷன் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான, MV ருத்ர சிங்க அல்லது ருத்ர சிங்க-II கப்பலில், பிரம்மபுத்திரா நதியின் நீளம் மற்றும் அகலத்தில் பயணிக்கும் குளிரூட்டப்பட்ட மரப் படகில் காதலர் தினத்தில் தங்கலாம்.
'ஹவுஸ்போட் டெக்கில்' நட்சத்திரங்களின் கீழ் உங்கள் காதலியுடன் இனிமையாக நதி மீது பட்டு உங்கள் இருவரின் உடலின் ஊடே செல்லும் சில்லென்ற காற்றின் அனுபவம் அலாதியாகும்.
கேப்டன், வழிகாட்டி அல்லது இயற்கை ஆர்வலர் வழங்கும் தனிப்பட்ட சேவையும், கூடுதலாக, புதிய உள்ளூர் உணவு வகைகள், தேநீர் மற்றும் காபி, எப்போதும் உங்களை தொடர்பில் வைத்திருக்க வசதியாக வைஃபை இணைப்பும் இருக்கும். கொஞ்சம் காஸ்ட்லி தான்.. ஆனா நதியின் நீரோட்ட இன்ப இரைச்சலில், இரவில் பயணிக்கும் அழகுக்கு எவ்வளவு விலை என்றாலும் கொடுக்கலாம் தானே... ஹலோ ஹலோ கோவப்படாதீங்க... உங்கள் காதலியும் அழகு தான்...

ஸ்பிட்டி எகோஸ்பியர், ஹிமாச்சல பிரதேசம்
டெமுல் மற்றும் குவாங் கிராமங்களில் உள்ள பாரம்பரிய ஸ்பிட்டியன் ஹோம்ஸ்டேகளில், இங்குள்ள ஜன்னல்கள் வாயிலாக மில்லியன் கணக்கான நட்சத்திரங்களை முன்வரிசை இருக்கையில் அமர்ந்து பார்க்கலாம்.
உலகின் மிக உயரமான கிராமங்களில் தான் பெரும்பாலான எகோஸ்பியர் அனுபவங்கள் கிடைக்கிறது. 3,000 ரூபாயிலிருந்து இந்த வசதிகளை பெற முடியும்.
சமோட் சஃபாரி லாட்ஜ், மத்திய பிரதேசம்
இந்த சஃபாரி லாட்ஜ் பாந்தவ்கர் தேசிய பூங்காவின் தாலா வாயிலில் இருந்து சிறிது தூரத்தில் உள்ளது. பிரதான விருந்தினர் மாளிகையில் கட்டப்பட்டு இருக்கும் 12 தனி குடியிருப்புகள் உள்ளூர் கலை பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு, துடிப்பான சாயல்களை கொண்டிருக்கும். ஒவ்வொரு அறையின் வெளிப்புற தளத்திலும், விருந்தினர்கள் பகலில் ஓய்வெடுக்கவும் இரவில் நட்சத்திரங்களை கண்டவாறே தூங்கவும் வசதிகள் உள்ளன.
ஆஸ்ட்ரோபோர்ட் சரிஸ்கா, ராஜஸ்தான்
ஆஸ்ட்ரோபோர்ட் சரிஸ்கா, 2017 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் 'ஆஸ்ட்ரோ ரிசார்ட்' ஆக திறக்கப்பட்டது. சரிஸ்கா தேசிய பூங்காவிலிருந்து 5 கிமீ தொலைவில் நகரங்களில் இருந்து வெகு தொலைவில் இருண்ட பகுதியில் அமைந்திருக்கிறது.
வானத்தையும், அதன் மர்மங்களையும் புரிந்து கொள்ள உதவும் தொலைநோக்கிகள், வான விளக்கப்படங்கள், சிறப்பு உபகரணங்கள் மற்றும் பயிற்சி பெற்ற வல்லுநர்கள் போன்ற வசதிகளுக்கு இங்கு குறைவில்லை.
இரவை நெருங்கும் போது, உங்கள் அறைக்கு வெளியே உள்ள படுக்கையை அமைக்கும்படி குழுவிடம் தயக்கமின்றி கேட்கலாம். மார்ச் முதல் நவம்பர் வரை, வானிலை குளிர்ச்சியாக இருக்கும். ஆகையால், இந்த நேரம் சரியான நேரம்.
பிரிஜ் லக்ஷ்மண் சாகர், ராஜஸ்தான்
ஜோத்பூரிலிருந்து 115 கிமீ தொலைவில் அமைந்துள்ள லக்ஷ்மண் சாகர் ஒரு சுற்றுலாத்தலமாகும். ராஜஸ்தானின் வறண்ட நிலப்பரப்பில் அமைந்திருக்கும் இந்த இடம், 19 ஆம் நூற்றாண்டில் ராய்ப்பூரின் தாக்கூர் லக்ஷ்மண் சிங்கின் வேட்டையாடும் விடுதியாக இருந்தது. அப்போது, அவர் இங்கு தனது விருந்தினர்களை மகிழ்வித்தார்.
இங்கு 12 குடிசைகளில் ஒவ்வொன்றும் பள்ளம் போன்ற தனியார் குளம் மற்றும் படுக்கைகள் உள்ளன. விருந்தினர்களின் வேண்டுகோளின் பேரில் ஹோட்டல் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து கொடுக்கும்.
மச்சான்(ட்ரீ ஹவுஸ்), மகாராஷ்டிரா
வனத்தில் இருந்து 30 அடி முதல் 45 அடி உயரமுள்ள மர வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீடுகளிலும் ஆடம்பர வசதியுடன் இரவு வானத்தின் நம்பமுடியாத காட்சிகளை நிச்சயம் காணலாம். ஒரு பட்டனைக் கிளிக் செய்வதன் மூலம் விரிந்து மடங்கும் ஒளி ஊடுவக்கூடிய கூரையுடன் இருக்கும் மர வீட்டில், நட்சத்திரங்களுக்கு அடியில் தூங்குவது போன்று நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். இதற்கு காசு கிடையாது... இங்கு வந்து கற்பனை செய்ய தான் காசு கொடுக்கும் காதல்களே...
இதேபோன்று இன்னும் அரிய, த்ரில்லிங் அனுபவங்களை வழங்கும் இடங்களும், காதலர் தின அனுபவங்களை மறக்க முடியாததாக மாற்ற உள்ளன.
அவற்றை தேடுவதும், தேடி புக் செய்வதும் உங்கள், உங்கள் பார்ட்னரில் சுய விருப்பு சார்ந்தது. முன்னணி சுற்றுலா இணையதளங்கள் வாயிலாக நீங்கள், மேற்குறிப்பிட்ட பகுதிகளை புக் செய்து.... இந்த காதலர் தினத்தை என்ஜாய் பண்ணுங்க... உங்கள் பார்ட்னருடன். இன்னும் புக் பண்ணலையா.... தமிழகத்திலும் இதுபோன்ற பல இடங்கள் உள்ளன. சரியான ட்ராவல் புக்கிங் வெப்சைட்கள் உங்களுக்கு வழிகாட்டும்.... எங்களை போன்று....!



Click it and Unblock the Notifications





