சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் அடுத்தடுத்து வருவதால் உலகப் புகழ்பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானம் மூடப்பட இருக்கிறது.
அக்டோபர் 25 ஆம் தேதி ஏற்படுகிற சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருக்கோயில் சுமார் 12 மணி நேரம் மூடப்படும் என்றும், நவம்பர் 8 ஆம் தேதி வருகிற சந்திர கிரகணத்தையொட்டி சுமார் 10.40 மணி நேரத்திற்கு நடை சாத்தப்பட இருக்கிறது என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது!

அக்டோபரில் சூரிய கிரகணம்
சூரிய கிரகணம் அக்டோபர் 25 ஆம் தேதி மாலை 5.11 தொடங்கி, 6.27 மணிக்கு முடிவடைகிறது. இதையொட்டி அக்டோபர் 25 அன்று, திருமலை திருப்பதி தேவஸ்தானம் காலை 8.11 மணிக்கு மூடப்பட்டு இரவு 7.30 மணிக்கு மீண்டும் திறக்கப்படும் என்று தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பரில் சந்திர கிரகணம்
நவம்பர் 8 ஆம் தேதி பிற்பகல் 2.39 மணிக்கு துவங்கும் சந்திர கிரகணம் மாலை 6.19 மணிக்கு முடிவடைகிறது. இதன் எதிரொலியாக வெங்கடேஸ்வரா திருக்கோயில் காலை 8.40 மணிக்கு மூடப்பட்டு இரவு 7.20 மணிக்கு மீண்டும் திறக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்படும் தரிசனங்கள்
இந்த இரண்டு நாட்களிலும் விஐபி பிரேக் தரிசனம், ஸ்ரீவானி ட்ரஸ்ட், 300 ரூபாய் சிறப்பு தரிசனம், அனைத்து வித ஆர்ஜித சேவைகளான கல்யாணோட்சவம், ஊஞ்சல் சேவா, பிரம்மோட்சவம், சகஸ்ர தீபாலங்கரா சேவா ஆகியவையும் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கைக்குழந்தைகள் உடன் வரும் பெற்றோர், என்.ஆர்.ஐ, பாதுகாப்புத் துறையை சேர்ந்தவர்கள் ஆகியோருக்கான பிரத்யேக தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சர்வ தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்படும் அன்னதானம்
கிரகண நேரங்களில் சமையல் செய்வதோ உண்பதோ நன்மை அல்ல. அதன்படி திருமலையில் உள்ள மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத பவனிலும், வைகுந்தம் கியூ வளாகத்தில் அன்னபிரசாதம் வழங்கப்படாது. சர்வ தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு திருமலைக்கு திட்டமிட்டு வரவேண்டும்.
மேலும், இந்த இரண்டு நாட்களும் திருப்பதி வர திட்டமிட்டிருந்த பக்தர்கள் உரிய முறையில் மாற்றம் செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications





