ஆந்திரப் பிரதேசம் சுற்றுலா  - தென்னக சீமை!!!

முகப்பு » சேரும் இடங்கள் » » கண்ணோட்டம்

ஆந்திரப் பிரதேசத்திலிருந்து ஜூன் 2, 2014-ஆம் ஆண்டு தெலங்கானா பிரிக்கப்பட்டபின் ஆந்திரப் பிரதேச மாநிலம் , ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரப் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இந்த மாநிலத்தில் அனந்தபூர், சித்தூர், கடப்பா, கர்னூல், ஸ்ரீகாகுளம், விஜயநகரம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, குண்டூர், பிரகாசம், நெல்லூர், கிருஷ்ணா ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன. மேலும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் ஹைதராபாத் மாநகரம் தலைநகரமாக செயல்படுகிறது. 

ஆந்திரப் பிரதேசத்தின் சுற்றுலாத் தலங்கள் 

ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி ஏராளமான பக்தர்களையும், பயணிகளையும் ஈர்க்கும் முக்கிய சுற்றுலாத்தலம் மற்றும் ஆன்மிக ஸ்தலமாக திருப்பதி அறியப்படுகிறது.

இந்தியாவின் 2-வது பணக்கார கோயிலாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

அதேபோல விஜயநகர மன்னர்களால் 6-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வீரபத்ரர் ஆலயம் சீமாந்திராவின் மற்றுமொரு ஆன்மிக மற்றும் சரித்திர சிறப்பு வாய்ந்த இடமாகும். இந்தக் கோயில் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள லேபாக்ஷி எனும் அழகிய கிராமத்தில் அமையப்பெற்றுள்ளது.

இவைத்தவிர சத்ய சாய்பாபாவின் புட்டப்பர்த்தி, ஸ்ரீகாளஹஸ்தி, ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் மந்த்ராலயம் ஆகிய ஸ்தலங்கள் ஆந்திரப் பிரதேசத்தை புண்ணிய பூமியாக பிரதிபலிக்கின்றன.

மேலும் விசாகப்பட்டணம், கபில தீர்த்தம், ராஜமுந்திரி, விஜயவாடா, கர்னூல், பழவேற்காடு ஏரி, அரக்கு பள்ளத்தாக்கு உள்ளிட்ட எண்ணற்ற ஆந்திரப் பிரதேசம் பகுதியில் அமைந்துள்ளன. 

கலாச்சாரம் 

விஜயநகர மன்னர்கள் ஆட்சி செய்த பூமியான ஆந்திரப் பிரதேசம் பகுதியில் கலாச்சாரத்தின் செழுமை பற்றி கூற வேண்டியதில்லை. குமரகிரி வேமனா ரெட்டி, பொட்லூரி வீரபிரம்மேந்திர சுவாமி போன்ற தெலுங்கு மொழி கவிகளும், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போன்ற தத்துவ அறிஞர்களும் பிறந்த அற்புத பூமி ஆந்திரப் பிரதேசம். அதோடு வைணவத் துறவியான அன்னமாச்சாரியார் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கடப்பா மாவட்டத்தில்தான் அவதரித்தார். 

குச்சிப்புடி

கிருஷ்ணா மாவட்டத்தில், கிருஷ்ணா நதியின் அரவணைப்பில் அமைந்திருக்கும் சிறிய கிராமமான குச்சிப்புடியில்தான் இந்தியப் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான குச்சிப்புடி பிறப்பெடுத்தது.

இன்னும் சரியாக சொல்லவேண்டுமென்றால் குச்சிப்புடி நடனம் இப்பகுதியில்தான் தோன்றியதன் காரணமாகத்தான் இந்த கிராமம் குச்சிப்புடி என்ற பெயரையே பெற்றதாக சொல்லப்படுகிறது. 

ஆந்திரப் பிரதேசத்தின் உணவு வகைகள் 

ஆந்திரப் பிரதேசத்தின் உணவு வகைகள் குறித்து பேசும்பொழுது இந்தியாவில் ஆந்திர மக்களை போல எவரும் இவ்வளவு காரசாரமான உணவை உண்பதில்லை என்றே சொல்ல வேண்டும்.

காரசாரமான குண்டூர் சிக்கனை சுவைக்காத அசைவப் பிரியர்கள் இந்தியாவில் யாரும் இருக்க மாட்டார்கள். மேலும் ஆந்திரப் பிரதேசத்தின் பிரபலமான உணவு வகைகளான பிரியாணி, கொங்குரா-மாம்சம், மீன் குழம்பு, கோடி-வேப்புடு உள்ளிட்ட அசைவ உணவு வகைகளின் ருசி என்றென்றைக்கும் உங்கள் அடிநாக்கில் சுவைத்துக் கொண்டே இருக்கும்.

ஆந்திரப் பிரதேசத்தை எப்படி அடைவது? 

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரே பன்னாட்டு விமான நிலையம் விசாகப்பட்டணம் மட்டும்தான். எனினும் விஜயவாடா, புட்டப்பர்த்தி, ராஜமுந்திரி போன்ற பகுதிகளில் உள்நாட்டு விமான நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மூலமும் ஆந்திரப் பிரதேசத்தை நாட்டின் எந்த மூலையிலிருந்தும் எளிதில் அடைந்துவிட முடியும். 

Please Wait while comments are loading...