திருப்பதி – வெங்கடேஸ்வரர் வீற்றிருக்கும் திருவேங்கடம்

சீமாந்திரா மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் வீற்றிருக்கும் இந்த திருப்பதி நகரம் ஒரு அதிமுக்கியமான, ஆன்மீக பாரம்பரிய நகரமாக இந்தியாவில் புகழ் பெற்று விளங்குகிறது. உலகப்பிரசித்தி பெற்றுள்ள வெங்கடாசலபதி கோயில் இந்த நகரத்தை ஒட்டியுள்ள திருமலை எனப்படும் மலையுச்சியில் அமைந்துள்ளது. வேறெங்கும் காண முடியாத வகையில் ஏராளமான பக்தர்களும் பயணிகளும் விஜயம் செய்யும் பரபரப்பான கோயிலாக இது சர்வதேச அளவில் அறியப்படுகிறது.

பெயர்க்காரணமும் வரலாற்றுப்பின்னணியும்

திருப்பதி எனும் பெயர் எப்படி உருவானது என்பது பற்றிய தெளிவான குறிப்புகள் கிடைக்காவிட்டாலும், இதன் பெயர்ப்பொருத்தம் குறித்த சந்தேகத்திற்கு இடமேயில்லை. ‘திரு’ எனும் தமிழ்ச்சொல் பண்டைய தமிழ் மரபுப்படி யாவற்றுக்கும் அப்பாற்பட்ட ‘இறைச்சக்தியை’ குறிப்பதாகும். ‘பதி’ என்பதற்கு ‘ஸ்தலம்’ என்பது பொருள்.

பொதுவாக அந்நாளில் இறைவன் குடிகொண்டிருந்த தலத்தை ‘திருப்பதி’ என்று குறிப்பிடும் மரபு வழக்கில் இருந்துள்ளது. எனவே இந்த ‘திருப்பதி’ எனும் பெயருக்கு ‘ஒப்பிலா இறைவன் குடிகொண்டுள்ள தலம்’ எனும் பொருத்தமான பெயர் ஆதியிலிருந்தே விளங்கி வந்திருப்பது தெளிவு.

கோயில் அமைந்திருக்கும் மலைப்பகுதி மேல் திருப்பதி என்றும், அடிவார நகர அமைப்பு கீழ்திருப்பதி என்றும் தற்போது விளங்கி வருகின்றன. மேலும், இந்த திருப்பதி எனப்படும் வெங்கடேஸ்வரர் கோயில் அமைந்திருக்கும் திருமலையானது உலகிலேயே இரண்டாவது பழமையான பாறை மலையமைப்பை கொண்டதாக புவிஅறிவியல் ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது.

திருப்பதி கோயில் எப்போது கட்டப்பட்டது என்பது குறித்த வரலாற்று ஆதாரங்கள் ஏதுமில்லை. ஆனால் பல சங்கத்தமிழ் இலக்கியங்களில் இந்த திருமலைப்பகுதியானது ‘திருவேங்கடம்’ என்ற பெயரில் இடம்பெற்றிருக்கிறது.

பல தமிழ்ப்புலவர்களின் பாடல்களிலிருந்து கோர்த்து திரட்டப்பட்ட வரலாற்று ஆதாரங்களின்படி திருப்பதிக்கோயிலானது திருவேங்கடமலையில் தொண்டை மண்டல மன்னனான ‘தொண்டைமான் இளந்திரையன்’ என்பவரால் எழுப்பப்பட்டிருக்கவேண்டும் என்று ஊகிக்கப்படுகிறது.

பின்னர் இக்கோயில் 4ம் நூற்றாண்டிலிருந்து பல தமிழ் மன்னர்களால் ஆதரிக்கப்பட்டு வந்துள்ளதற்கு குறிப்புகள் கிடைக்கின்றன. பல்லவ வம்சம், அவர்களுக்குப்பின் சோழ வம்சம், இறுதியாக விஜயநகர வம்சம் என்று பல்வேறு மன்னர்களின் பராமரிப்பில் திருப்பதி கோயில் இருந்து வந்துள்ளது.

திருவேங்கடமலை என்பது நாளடைவில் திருமலை என்றாகியுள்ளது. திருப்பதி என்பது மஹாவிஷ்ணு வீற்றிருக்கும் கோயில்தலத்தின் பெயராக காலத்தில் நீடித்து நின்றுவிட்டது.

இப்படி வளர்ந்து வந்த இந்த வைணவக்கோயில் 14ம் மற்றும் 15ம் ஆண்டுகளில் நிகழ்ந்த முஸ்லிம் ஊடுறுவல் மற்றும் கோயில் கொள்ளைகளிலிருந்தும் தப்பித்துள்ளது. ஆங்கிலேயர் காலத்திலும் காலனிய ஆட்சியாளர்கள் இந்த கோயிலின் நடைமுறைகளில் எந்தவகையிலும் தலையிடாமல் விட்டு வைத்திருந்தனர்.

1933ம் ஆண்டில் ‘மெட்ராஸ் பிரசிடென்சி’ அரசாங்கம் ஒரு சிறப்பு மசோதாவை இயற்றி ‘திருமலா தேவஸ்தான கமிட்டி’ எனும் தன்னாட்சி குழுவிடம் இந்த கோயிலின் நிர்வாகப்பொறுப்பை ஒப்படைத்தது. அதன்படி அரசால் நியமிக்கப்படும் கமிஷனர் மூலம் இந்த கோயில் நிர்வகிக்கப்படும் நடைமுறை தொடங்கியது.

ஏனைய ஆகம நெறிகளில் இந்த கமிட்டிக்கு அறிவுறை கூற ‘ஆகம ஆலோசனைக்குழு’ வும் ஏற்படுத்தப்பட்டது. கோட்டுரு எனும் இடத்தில் உருவான கீழ்த்திருப்பதி நகரமைப்பு இன்று பரந்து அளவில் வளர்ந்து பெருநகரமாக காட்சியளிக்கிறது.

பல திருவிழாக்கள் மற்றும் சந்தைகளின் கோலாகலம்

இன்று திருப்பதி நகரம் ஒரு ஆன்மீக மையமாக மட்டுமல்லாமல் ஒரு செழுமையான கலாச்சார கேந்திரமாகவும் பரிணமித்துள்ளது. இந்நகரத்தில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் சந்தைகள் மிகப்பிரசித்தமாக அறியப்படுகின்றன.

இவற்றில் மே மாதத்தில் நடைபெறும் கங்கம்மா ஜாத்ரா எனும் உற்சவம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்த உற்சவத்தின்போது வித்தியாசமான சடங்கு முறைகள் பின்பற்றப்படுகின்றன.

அச்சமயம் பக்தர்கள் முதலில் மாறுவேடம் பூண்டு கோயிலுக்கு முன்பாக தெருவில் ஊர்வலமாக செல்கின்றனர். பின்னர் முகத்தில் சந்தனம்பூசி தலையில் மல்லிகை மலர் மாலைகள் அணிந்து கோயிலுக்குள் நுழைகின்றனர்.

இறுதியாக மண்ணால் செய்யப்பட்ட தெய்வச்சிலையை உடைக்கும் சடங்குடன் இந்த உற்சவம் நிறைவுறுகிறது. பல திசைகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்துகொள்ள வருகை தருகின்றனர். இது தவிர திருப்பதி ஸ்தலத்தின் முக்கியமான திருவிழாவாக பிரம்மோத்சவம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.

விஜயநகர திருவிழா, சந்திரகிரி கோட்டை திருவிழா மற்றும் ராயலசீமா நடனம் மற்றும் உணவுத்திருவிழா போன்றவையும் திருப்பதி நகரத்தில் நடத்தப்படும் இதர கொண்டாட்ட நிகழ்ச்சிகளாகும்.

பார்த்து ரசிக்க வேண்டிய சிறப்பம்சங்கள்

பிரதானக்கோயிலான திருப்பதி மலைக்கோயில் மட்டுமல்லாமல் இங்கு வராகஸ்வாமி கோயில், வெங்கடேஸ்வரஸ்வாமி கோயில், பத்மாவதி கோயில், கோவிந்தராஜா கோயில், சீனிவாசமங்காபுரம் போன்ற ஏனைய முக்கியமான ஆலயங்களும் இந்நகரில் அமைந்துள்ளன.

ஆன்மீக அம்சங்களை தரிசித்தபின் பயணிகள் இங்குள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்காவிற்கும் விஜயம் செய்யலாம். இங்கு பலவகை விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாத்து வளர்க்கப்படுகின்றன. ஷிலாத்தோரணம் என்றழைக்கப்படும் பாறைத்தோட்டமும் அவசியம் பார்க்க வேண்டிய அம்சமாகும்.

திருப்பதியில் சர்க்கரை பொங்கல் மற்றும் திருப்பதி லட்டு போன்றவற்றை சுவைக்காமல் திரும்பக்கூடாது என்பது பயணிகளும் பக்தர்களும் நன்கு அறிந்ததே. ஆந்திர மற்றும் தமிழக உணவுமுறைகளின் கதம்பமான அம்சங்கள் திருப்பதி உணவுவகைகளில் மணப்பதை பயணிகள் சுவைத்து தெரிந்துகொள்ளலாம்.

மேலும், இங்கு உள்ளூர் தயாரிப்புகளாக பலவகை கைவினைப்பொருட்கள், மரக்குடைவு பொருட்கள், மரப்பொம்மைகள், கலம்காரி ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள் மற்றும் சந்தன பொம்மைகள் போன்றவை ஏராளமாக கிடைக்கின்றன. ரசனை மிக்கவர்கள் இவற்றில் ஏதாவதொன்றை வாங்காமல் ஊர் திரும்புவதில்லை.

பயண வசதிகளும் பருவநிலையும்

திருப்பதிக்கு பயணம் மேற்கொள்வது மிக எளிதாகவே உள்ளது. நகரத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் ரேணிகுண்டாவில் திருப்பதிக்கான உள்நாட்டு விமான நிலையம் உள்ளது.

டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் சென்னையிலிருந்து இந்த விமானநிலையத்துக்கு தினசரி விமான சேவைகள் உள்ளன. தற்போது இதனை வெளிநாட்டு சேவைகளை இயக்குவதற்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

மேலும், முக்கிய போக்குவரத்து வசதியாக திருப்பதியில் பிரத்யேக ரயில் நிலையமும் உள்ளது. எல்லா முக்கிய இந்திய நகரங்களிலிருந்தும் இந்த ரயில்நிலையத்துக்கு இணைப்புகள் உள்ளன.

அது மட்டுமல்லாமல் பெங்களூர், ஹைதராபாத், வைசாக் மற்றும் அருகிலுள்ள சென்னை நகரத்திலிருந்து ஏராளமான பேருந்துகள் அடிக்கடி திருப்பதிக்கு இயக்கப்படுகின்றன.

ஏறக்குறைய தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் இங்கு வருவதற்கு பேருந்து வசதிகள் உள்ளன. திருப்பதி நகரின் முக்கிய ஆன்மீக ஸ்தலங்கள் மற்றும் இதர அம்சங்களை சுற்றிப்பார்க்க வாடகைக்கார்கள் மற்றும் உள்ளூர் தேவஸ்தான பேருந்துகள் அதிக அளவில் கிடைக்கின்றன. குறைந்த கட்டணத்தில் நாள் வாடகைக்கும் டாக்சிகளை பயணிகள் அமர்த்திக்கொள்ளலாம்.

டிசம்பர் முதல் பிப்ரவரி வரையுள்ள பருவம் திருப்பதி ஸ்தலத்துக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. பெரும்பாலும் கோடையில் கடும் வெப்பத்துடன் காணப்படுவதால் கோடைக்காலத்தில் இங்கு விஜயம் அவ்வளவு உகந்ததல்ல. மழைக்காலம் வெப்பநிலையை குறைப்பதுடன் திருப்பதியின் அழகையும் கூட்டுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, திருப்பதி நகரம் அடிப்படையில் ஒரு ஆன்மீக நகரமாக திகழ்வதால் ஒரு சில முக்கியமான நெறிகளையும் பயணிகள் மனதில் கொள்ளவேண்டும்.

ஆர்ப்பாட்டமில்லாத அடக்கமான ஆடைகளை அணிவது, தலைக்குல்லா தொப்பி போன்ற டாம்பீக அலங்காரங்களை தவிர்ப்பது மிக அவசியமாகும். முக்கியமாக மலர்கள் கடவுளுக்குரியவையாக இங்கு கருதப்படுவதால் இங்கு பெண்கள் தலையில் பூச்சூடுவதை தவிர்ப்பது அவசியம்.

இங்கு அசைவ உணவுகள், லாகிரி வஸ்துகள் மற்றும் மதுபானங்கள் போன்றவை அதிகமாக விற்பனை செய்யப்படுவதில்லை. இவற்றை உபயோகப்படுத்துவது பொதுவாக மக்களால் வெறுக்கப்படுகிறது. மேலும், கோயில் வளாகங்களின் நவீன சாதனங்கள், கேமராக்கள், மொபைல் போன்கள் போன்றவற்றுக்கு அனுமதி இல்லை.

தென்னிந்திய கோயில் மரபு மற்றும் கலாச்சாரத்தில் ஆர்வம் உள்ள பகதர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் அவசியம் விஜயம் செய்து தரிசிக்க வேண்டிய ஆன்மீக திருத்தலம் - இந்த திருப்பதி - எனும் உண்மை யாவரும் அறிந்த ஒன்றுதான் எனினும் திரும்ப சொல்வதில் தவறுமில்லை.

Please Wait while comments are loading...