கடப்பா - கலாச்சார நதிகள் பாயும் நகரம்!

ஆந்திர தலைநகர் ஹைதராபாத்திலிருந்து 412 கிலோமீட்டர் தொலைவில், கவின் கொஞ்சும் பெண்ணை நதிக்கு வெகு அருகில் நல்லமலா மற்றும் பாலகொண்ட மலைகளுக்கு நடுவே எழில் ஓவியமாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது கடப்பா நகரம்.

ஆந்திர மாநிலம் ராயலசீமா பகுதியில் அமைந்திருக்கும் கடப்பா  நகரம் திருமலை திருப்பதியின் நுழைவாயிலாக கருதப்படுகிறது. இதற்கேற்றார் போல தெலுங்கு மொழியில் 'வாயில்' என்ற அர்த்தத்தில் இந்த நகரின் பெயர் அறியப்படுகிறது.

கடப்பா நகரம் 11 மற்றும் 14-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் சோழ பேரரசின் கீழ் இருந்தது. அதன் பிறகு 14-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக கடப்பா நகரம் மாறியது.

அப்போது விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகள் முழுக்க இரு நூற்றாண்டு காலம் கண்டிகொட்டா நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. அதோடு விஜயநகர அரசர்களின் ராஜ பிரதிநிதிகளாக செயலாற்றி வந்ததோடு, கடப்பா நகரை சுற்றி எண்ணற்ற கோயில்களையும், குளங்களையும் உருவாக்கிய பெருமை நாயக்கர்களையே சேரும்.

கடப்பா நகருக்கு 1565-ஆம் ஆண்டில் படையெடுத்து வந்த கோல்கொண்டா இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அந்நகரத்தை கைப்பற்றினர். அதோடு சின்ன திம்ம நாயுடுவை சூழ்ச்சி செய்து ஏமாற்றி கண்டிக்கொட்டா கோட்டையை கைப்பற்றி அதனுள்ளே இருந்த பொக்கிஷங்களை மீர் ஜூம்லா கவர்ந்து சென்றார்.

இதன் பிறகு குதுப் சாஹி ஆட்சியாளர் நேக்னம் கான் கடப்பாவின் எல்லைகளை விரிவுபடுத்தி நேக்னம்பாத் என்று பெயரிட்டார். எனினும் இந்த காலங்களை பற்றி குறிப்பிடுகையில் 'நேக்னம்பாத் நிஜாம்கள்' என்று கூறுவதற்கு பதிலாக 'கடப்பா நிஜாம்கள்' என்ற சொல்லாடலையே பயன்படுத்துகின்றனர்.  

கடப்பா நகரம் 1800-ஆம் ஆண்டுக்கு பிறகு ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிற்குள் வந்ததோடு, அவர்களுடைய நான்கு துணை ஆட்சியர் அலுவலகங்களில் ஒன்றின் தலைமையிடமாகவும் திகழ்ந்து வந்தது.

அப்போது கடப்பா உள்ளிட்ட தலைமையிடங்கள் அனைத்தும் பிரதான ஆட்சியர் தாமஸ் மன்றோவின் தலைமையில் இயங்கி வந்தன. மேலும் சுதந்திரத்திற்கு பிறகு மாநகராட்சியாக மாற்றப்பட்ட கடப்பா நகரில் புகழ்பெற்று விளங்கும் மூன்று தேவாலயங்களும் ஆங்கிலேயர்களின் ஆட்சியில்தான் கட்டப்பட்டன.

கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒண்டிமிட்டா எனும் பகுதியில்தான் இராமாயணத்தின் ஏழு காண்டங்களில் ஒன்றான கிஷ்கிந்தா காண்டம் இடம் பெற்றதாக ஹிந்து புராணம் கூறுகிறது.

இந்த ஒண்டிமிட்டா பகுதி கடப்பா நகரின் மத்தியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அதோடு ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்காக மிகவும் பிரசித்தமாக அறியப்படும் கண்டி கிராமம் கடப்பா நகருக்கு வெகு அருகிலேயே உள்ளது.

இங்கு காணப்படும் ஆஞ்சநேயர் சிலை இராம பிரானாலேயே உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அதாவது சீதா தேவியை மீட்க பேருதவியாக இருந்த ஆஞ்சநேயரை கௌரவப்படுத்தும் விதமாக இந்த சிலையை இராமர் தன் அம்பின் நுனியால் செதுக்கியதாக சொல்லப்படுகிறது.

கடப்பா நகரம் இன்று ஆந்திர மாநிலத்தின் முக்கியமான சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களாக அமீன் பீர் தர்கா, பகவான் மஹாவீர் அருங்காட்சியகம், சாந்த் பீரா கும்பாத், தேவுனிகடப்பா, மஸ்ஜித்-இ-ஆஸாம்  ஆகியவை அறியப்படுகின்றன.

கடப்பா நகரின் மத்தியிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்நாட்டு விமான நிலையம் அமைந்திருக்கிறது. இதுதவிர கடப்பா நகருக்கு அருகில் இருக்கக்கூடிய பன்னாட்டு விமான நிலையமாக ஹைதராபாத் விமான நிலையம் அறியப்படுகிறது.

அதோடு மும்பை-சென்னை வழித்தடத்தில் அமைந்திருப்பதால் கடப்பா நகர ரயில் நிலையத்தில் முக்கியமான ரயில்கள் அனைத்தும்  வந்து செல்கின்றன. அதுமட்டுமல்லாமல் கடப்பா நகருக்கு ஆந்திராவின் பிற பகுதிகளிலிருந்து எண்ணற்ற அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும்  சூடான கோடை காலத்தையும், மிதமான மழைப் பொழிவை பெறும் மழைக் காலத்தையும், இதமான பனிக் காலத்தையும் கடப்பா நகரம் கொண்டிருக்கிறது.

 

Please Wait while comments are loading...