கர்னூல்– நவாப்களின் நகரம்!

சீமாந்திரா மாநிலத்தில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்றான கர்னூல்நகரம் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக இயங்குகிறது. அதுமட்டுமல்லாமல்,சுதந்திரத்திற்கு பிறகு உருவாக்கப்பட்ட புதிய ஆந்திர மாகாணத்தின் தலைநகரமாகவும் கர்னூல் நகரம் 1953ம் ஆண்டு முதல் 1956ம் ஆண்டு வரை இருந்துள்ளது.

ஹந்த்ரி மற்றும் துங்கபத்ரா ஆறுகளின் தென்கரையில் இந்த கர்னூல் நகரம் வீற்றுள்ளது. ஹைதராபாதிலிருந்து இது 250 கி.மீ தூரத்தில் உள்ளது.

ராயலசீமா பகுதியின் நுழைவாயிலாக கர்னூல் நகரத்தை கூறுகின்றனர். கடப்பா, சித்தூர் மற்றும் அனந்தபூர் பகுதிகளுக்கு தலைநகரிலிருந்து வரவேண்டுமானால் இந்த கர்னூல் நகரை கடந்துதான் வர வேண்டியுள்ளது.

செழுமையான வரலாற்றுப்பின்னணி, வித்தியாசமான சிறு நகரச்சூழல் மற்றும்பாரம்பரிய கலாச்சாரம் கலந்த பண்பான உபசரிப்பை வழங்கும் குடிமக்களையும் கொண்ட இந்த நகரம் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவரும் என்பதில் ஐயமில்லை.

வரலாற்றுப்பின்னணி

ஆதி இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் இந்த கர்னூல் நகரத்தின் பெயர் கண்டன்வொலு என்ற தெலுங்குப்பெயரால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், ஆயிரம் வருட வரலாற்றுப்பின்னணியையும் கர்னூல் நகரம் கொண்டுள்ளது.

கர்னூல் நகரத்திலிருந்து 18 கி.மீ தூரத்திலுள்ள கேதவரம் எனும் இடத்தில் காணப்படும் பாறைச்சித்திரம் கற்கால நாகரிகத்தை சேர்ந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. ஜுர்ரேரு பள்ளத்தாக்கு, கடவாணி குண்டா மற்றும் யகந்தி போன்ற இடங்களில் காணப்படும் பாறைக்கிறுக்கல் சித்திரங்கள் 3500-4000 வருடங்களுக்கும் முந்தியவையாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

புகழ் பெற்ற சீனப்பயணியான யுவான் சுவாங் கராச்சியை நோக்கி பயணம் மேற்கொண்டபோது இந்த கர்னூல் நகருக்கும் விஜயம் செய்ததாக தனது வரலாற்று குறிப்புகளில் எழுதியுள்ளார்.

7-ஆம் நூற்றாண்டில் கர்னூல் நகரம் பிஜாப்பூர் சுல்தான்களின் ஆட்சியில் இருந்துள்ளது. பின்னர் 1687-ஆம் ஆண்டில் முகலாயப் பேரரசர் இப்பகுதியை கைப்பற்றி நவாப் அரசர்களின் கட்டுப்பாட்டுக்குள் விட்டுள்ளார்.

இறுதியில் நவாப் வம்சத்தினர் சுதந்திர ராஜ்ஜியமாக 200 வருடங்களுக்கு கர்னூல் பகுதியை ஆண்டு வந்துள்ளனர். 18ம் நூற்றாண்டில் இந்த நவாப் வம்ச ஆட்சியாளர்கள் ஆங்கிலேயரையும் எதிர்த்து போரிட்டுள்ளனர்.

புராதன கட்டிடக்கலை அம்சங்கள் மற்றும் கோயில்கள்

புராதன கட்டிடக்கலை அம்சங்கள் மற்றும் வரலாற்று சின்னங்களில் ஆர்வம் உள்ள சுற்றுலாப்பயணிகள் விரும்பக்கூடிய பல முக்கியமான ஸ்தலங்களை கர்னூல் நகரம் கொண்டுள்ளது.

இங்கு விஜயநகர அரசர்களால் கட்டப்பட்ட, சிதிலமடைந்த நிலையில் காணப்படும் கோட்டை ஒன்றில் அரபிக் மற்றும் பாரசீக கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இது அவசியம் பயணிகள் காண வேண்டிய ஒரு வரலாற்று அம்சமாகும்.

கொண்ட ரெட்டி புருஜு மற்றும் அப்துல் வஹாப் சமாதிகள் ஆகியவையும் இதர முக்கியமான ஸ்தலங்களாக அமைந்துள்ளன. மேலும், கர்னூல் அரசர்களின் கோடை வாச மாளிகை, வெள்ளப்பாதுகாப்பு மண்டபம் போன்ற புராதன கட்டமைப்புகள் மற்றும் பெத்த ஆஞ்சனேயஸ்வாமி கோயில், நகரேஷ்வரஸ்வாமி கோயில், வேணுகோபாலஸ்வாமி கோயில் மற்றும் ஷிர்டி சாய் பாபா கோயில் ஆகியவைகர்னூல் நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களாக விளங்குகின்றன.

நவம்பர்/டிசம்பர் மாதத்தில் கர்னூல் நகரத்தில் கோலாகலமான தேர்த்திருவிழாவும் நடத்தப்படுகிறது. ஆஞ்சநேயருக்காக எட்டு நாட்களுக்கு தொடர்ந்து இந்த சடங்குத்திருவிழாகொண்டாடப்படுகிறது.

இதர சுற்றுலா தகவல்கள்

கர்னூல் நகரத்துக்கு பயணம் மேற்கொள்வது சுலபமான சிரமமில்லாத ஒன்றாக உள்ளது. இந்த நகரத்துக்கான விமான நிலையமாக ஹைதராபாத் நகரில் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளது.

கர்னூல் நகரிலிருந்து மூன்றரை நேரப்பயணத்தில் இந்த விமான நிலையத்தை அடைந்துவிடலாம். கர்னூல் நகரத்தில் கர்னூல் டவுன், அடோனி, நந்தியாலா மற்றும் தோனே ஆகிய நான்கு ரயில் நிலையங்கள் உள்ளன. பெங்களூர், சென்னை மற்றும் முக்கிய ஆந்திர நகரங்களிலிருந்து கர்னூல் நகரத்துக்கு வசதியான பேருந்து சேவைகள் கிடைக்கின்றன.

கோடைக்காலத்தில் கர்னூல் நகரம் அதிக வெப்பம் மற்றும் அசௌகரியமான சூழலைக்கொண்டுள்ளது. மழைக்காலத்தில் கடும் மழைப்பொழிவும் இப்பகுதியில் நிலவுகிறது.

எனவே மழைக்காலத்தின் இறுதியில் துவங்கி கோடையின் முற்பகுதி வரையிலான -குளிர்காலத்தையும் உள்ளடக்கிய - பருவமே கர்னூல் நகரக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது.

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் இப்பருவத்தில் அடங்குகின்றன. மிதமான சூழல், குளுமையான பருவநிலை நிலவும் இம்மாதங்கள் சுற்றுலாவை முழுமையாக ரசிக்க உகந்ததாக உள்ளன.

Please Wait while comments are loading...