நல்கொண்டா – வரலாற்றுப்பாரம்பரியம் கமழும் ஆந்திர நகரம்

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் நல்கொண்டா மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி நகரமே இந்த நல்கொண்டா ஆகும். கருப்பு மலை என்ற பொருளைத்தரும் ‘நல்ல’ மற்றும் ‘கொண்டா’ எனும் இரண்டு தெலுங்கு வார்த்தைகளை இணைந்து இந்த பெயர் பிறந்துள்ளது. உள்ளூர் மக்களால் கருப்பு மலை எனப்படும் இந்த நகரம் ஆதியில் ‘நீலகிரி’ என்ற பெயரில் அழைக்கப்பட்டிருக்கிறது.

பாமனி அரசர்களின் ஆட்சியின்போதுதான் இந்த நகரம் ‘நல்லகொண்டா’வாக பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. பின்னாளில் நிஜாம் மன்னர்களின் ஆட்சியில் இது நிர்வாக வசதிக்காக ‘நல்கொண்டா’வாக மாற்றப்பட்டு அதுவே நிலைத்துவிட்டது.

உள்ளூர் மக்கள் இன்னமும் நல்லகொண்டா என்றே இந்த நகரத்தை அழைப்பதும் குறிப்பிடத்தக்கது. தெலுங்கானா சுதந்திரப்போராட்ட கவிதைகளிலும் இந்த ஊர் நல்லகொண்டா என்றே சொல்லப்பட்டிருப்பதுடன் இப்படித்தான் எழுதவேண்டுமென்பதும் பலரது விருப்பமாக உள்ளது.

தெலுங்கானா இயக்கப்பின்னணி

இன்றும் நல்லகொண்டா நகரமானது தெலுங்கானா இயக்கத்தின் கேந்திரமாகவே விளங்குகிறது. நல்லகொண்டா மற்றும் வாரங்கல் மாவட்டத்தை சுற்றியே இந்த இயக்கங்கள் செயல்படுகின்றன.

இந்த இரண்டு மாவட்டங்களிலுள்ள எல்லா நகரங்கள் மற்றும் கிராமங்கள் இந்த இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தெலுங்கானா இயக்கமானது ஆந்திர மஹா சபா மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் வளர்த்தெடுத்த ஒன்றாகும்.

1946ம் ஆண்டில் இந்தப்பகுதியில் ராணுவ ஆட்சியும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ரஜாக்கர்கள் எனும் குண்டர்களால் இப்பகுதி மக்கள் அக்காலத்தில் பாதிக்கப்பட்டிருந்தனர். கடைசி நிஜாம் மன்னர் ஆட்சியில் இம்மாவட்டங்களில் போரட்டக்காரர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

பின்னர் சுமார் 5000 கிராமங்கள் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டு கிராம பஞ்சாயத்து தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். பண்ணைக்காரர்களிடமிருந்த நிலங்கள் ஏழைகளுக்கு விவசாயத்திற்காக பிரித்துக்கொடுக்கப்பட்டன.

இப்படியாக இந்த பிரதேசத்தின் உள்நாட்டு கலவரங்களுக்கு இந்திய ராணுவப்படையினரால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு ஹைதராபாத் சமஸ்தானம், நல்லகொண்டா மற்றும் வாரங்கல் ஆகியவை இந்திய யூனியனுடன் பலவந்தமாக இணைக்கப்பட்டன.

சுற்றுலா அம்சங்கள்

இன்று சுற்றுலா அடிப்படையில் பார்க்கும்போது ஆந்திர மாநிலத்தில் ஒரு முக்கிய நகரமாக நல்கொண்டா பிரசித்தி பெற்றுள்ளது. வேறு எந்த தொழில்களையும் பொருளாதார ரீதியாக சார்ந்திராததால் சுற்றுலாத்தொழில் இந்த நகரத்தின் முக்கிய வருவாய் அம்சமாக திகழ்கிறது.

மட்டபள்ளி, பில்லலமரி, ராஜீவ் பார்க், பாணிகிரி பௌத்த ஸ்தலங்கள், பனகல் கோயில், நந்திகொண்டா, லதீஃப் ஷேஃப் தர்க்கா, கொல்லன்பாகு ஜெயின் கோயில், ரச்சகொண்டா கோட்டை, மெல்லசெருவு, தேவரகொண்டா மற்றும் புவனகிரி கோட்டை போன்ற முக்கியமான சுற்றுலா அம்சங்கள் இந்த நகரத்தில் இடம் பெற்றுள்ளன.

நல்கொண்டாவுக்கு ரயில் மற்றும் சாலைப்போக்குவரத்து மூலமாக பயணம் மேற்கொள்வது சுலபமாகவே உள்ளது. இருப்பினும் இந்த நகரத்தின்வழியே தேசிய நெடுஞ்சாலைகள் ஏதும் செல்லவில்லை.

நல்கொண்டா ரயில் நிலையம் குண்டூர்-செகந்தராபாத் ரயில் பாதையில் அமைந்துள்ளது. இவ்வழியே பல ரயில்கள் நின்று செல்கின்றன. பேருந்து போக்குவரத்து சேவைகளும் நல்கொண்டா நகரத்துக்கு நல்ல முறையில் இயக்கப்படுகின்றன. ஹைதராபாத் விமான நிலையம் இந்த நகரத்துக்கு அருகிலுள்ள விமான நிலையமாகும்.

நல்கொண்டா பகுதி வெப்பப்பிரதேச பருவநிலையை கொண்டதாக அதிக வறட்சி மற்றும் உஷ்ணத்துடன் கோடைக்காலத்தில் காட்சியளிக்கிறது. மழைக்காலத்தில் நல்ல மழைப்பொழிவும், குளிர்காலத்தில் மிதமான குளிரும் இப்பகுதியில் நிலவுகிறது.

குளிர்காலத்தில் இந்த நகரத்துக்கு விஜயம் செய்வதை பயணிகள் விரும்புகின்றனர். அதுவும் அந்தி சாயும் மாலை நேரம் குளுமையுடன் காணப்படுவதால் ஊர் சுற்றிப்பார்ப்பதற்கு பிற்பகல் பகுதி பொருத்தமாக உள்ளது.

Please Wait while comments are loading...