குண்டூர் – சீமாந்திராவின் பாடசாலை!

சீமாந்திரா மாநிலத்தின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குண்டூர் நகரம் மாநிலத்தலைநகரமான ஹைதராபாதிலிருந்து 266 கி.மீ தூரத்தில் உள்ளது. வங்களா விரிகுடா கடற்கரைப்பகுதியிலிருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் இது அமைந்துள்ளது. 2012ம் ஆண்டில் குண்டூர் நகரத்தின் எல்லை சுற்றியிருந்த 10 கிராமப்பகுதிகளையும் சேர்த்து உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது. 

கல்வி மற்றும் அறிவுசார் துறைகளின் தொட்டிலாக அறியப்படுவதால் ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற நகரமாக குண்டூர் புகழ் பெற்று விளங்குகிறது. மாநிலத்திலேயே நன்கு வளர்ச்சியடைந்த மாநகரமாகவும் இது கருதப்படுகிறது. ஏராளமான கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசாங்க மையங்கள் இந்த நகரத்தில் அமைந்துள்ளதே இதற்கு காரணம்.

பழமையும் நவீனமும்

குண்டூர் மாவட்டம் கி.மு 500 வரை நீளும் மிகப்புராதனமான வரலாற்றுப்பின்னணியை பெற்றுள்ளது. வேறு எந்த பிரதேசமும் தென்னிந்தியாவில் இந்த அளவுக்கு பழமையான வரலாற்றுப்பின்னணியை கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குண்டூர் மாவட்டம் அமைந்திருக்கும் இடத்தில் புராதன காலத்தில் பிரதிபாலபுரம் அல்லது பட்டிபுரோலு எனும் ராஜ்ஜியம் இருந்ததாக தெரியவருகிறது. 922 – 929ம் ஆண்டுகளில் இப்பகுதியை ஆண்ட வெங்கி சாளுக்கிய வம்ச அரசரான முதலாம் அம்மராஜா என்பவரது ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ள ஓட்டுக் குறிப்புகளில் குண்டூர் இடம்பெற்றுள்ளது.

1147 – 1158 ம் ஆண்டுகளைச்சேர்ந்த இரண்டு கல்வெட்டுகளிலும் குண்டூர் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் குண்டூர் நகரம் கர்த்தபுரி என்ற பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. கர்த்தபுரி எனும் பெயருக்கு குளங்களால் சூழப்பட்ட ஊர் என்பது பொருளாகும்.

நவீன குண்டூர் நகரத்தின் வரலாறு ஐரோப்பியர்களின் வருகையிலிருந்து துவங்குகிறது. அதற்குப்பின் குண்டூர் நகரம் தேசிய மற்றும் சர்வதேச கவனத்தை பெற்றதுடன் ஒரு புதிய யுகத்தை நோக்கியும் செலுத்தப்பட்டது.

இந்த நகரத்தின் வளர்ச்சி மற்றும் கட்டமைப்பினால் கவரப்பட்ட ஃபிரெஞ்சுக்காரர்கள் தங்கள் ராணுவக்கேந்திரத்தையும் 1752ம் ஆண்டு குண்டூரில் அமைத்தனர். அதன் பின்னர் இந்நகரம் நிஜாம் மன்னர் மற்றும் ஹைதர் அலியால் ஆளப்பட்டது. அவர்களைத் தொடர்ந்து 1788ம் ஆண்டில் ஆங்கில அரசாங்கம் தனது ஆட்சியில் குண்டூர் நகரத்தை இணைத்துக்கொண்டது.

காலனிய ஆட்சியின்போது குண்டூர் மாவட்டம் முக்கியமான விவசாய மாவட்டமாகவும் புகழ்பெற்றிருந்தது. இதன் விளைவாக 1890ம் ஆண்டிலேயே ரயில் பாதையை பெற்ற பெருமையும் இந்நகரத்திற்கு கிடைத்தது.

சுதந்திரத்துக்கு பின்னும் மேலும் வளர்ச்சிப்பாதையில் நகர்ந்த குண்டூர் நகரம் இன்றும் மேன்மேலும் வளர்ந்து வருகிறது. பல தென்னிந்திய நகரங்களை பின்னுக்கு தள்ளி பலவகையிலும் கல்வி மற்றும் தொழில்நுட்பத்துறையில் இது முன்னணியில் இருக்கிறது.

குண்டூர் நகரம் தொடர்பான சுற்றுலா தகவல்கள்

சீமாந்திரா மாநிலத்தின் முக்கிய சுற்றுலா நகரமாக விளங்கும் குண்டூர் நகரம் கொண்டவீடு கோட்டை, உண்டவல்லி குகைகள், அமராவதி, உப்பலபாடு தோட்டப்பூங்கா மற்றும் பிரகாசம் அணைக்கட்டு போன்ற சுற்றுலா அம்சங்களுக்கு பிரசித்தி பெற்றுள்ளது.

மற்ற எல்லா ஆந்திர நகரங்களையும் போன்றே கடுமையான கோடைக்காலத்தையும், மிதமான குளிர் நிலவும் குளிர்காலத்தையும் குண்டூர் நகரம் பெற்றுள்ளது. மழைக்காலத்தில் மிதமானது முதல் கடுமையானது வரையான மழைப்பொழிவை இந்நகரம் பெறுகிறது.

குண்டூர் நகரத்தில் விமான நிலையம் இல்லை. இங்கிருந்து 250 கி.மீ தூரத்தில் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இருப்பினும் ரயில் போக்குவரத்து மற்றும் சாலைப்போக்குவரத்து மூலம் சுலபமாக இந்நகருக்கு பயணம் மேற்கொள்ளலாம்.

குண்டூர் ரயில் நிலையம் நாட்டின் பல பகுதிகளை ரயில் சேவைகளால் இணைக்கிறது. டெல்லி, மும்பை, பெங்களூர், மற்றும் சென்னை போன்ற நகரங்களை இணைக்கும் பல ரயில்கள் குண்டூர் ரயில் நிலையத்தில் வழியாக செல்கின்றன. மாநிலத்தின் பிற நகரங்கள் மற்றும் வெளி மாநில நகரங்களோடு நல்ல இணைப்புசேவைகளை இது பெற்றுள்ளது.

ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குவதால் தென்னக ரயில்வே பல புதிய சேவைகளையும் குண்டூரிலிருந்து அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. சாலை மார்க்கமாக பயணிப்பதற்கு ஏற்றவாறு நன்கு பராமரிக்கப்பட்ட சாலை இணைப்புகளை இந்நகரம் பெற்றுள்ளது.

மாநிலத்தின் முக்கிய நகரங்களிலிருந்து குண்டூருக்கு அடிக்கடி பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன. வால்வோ போன்ற அதிசொகுசு பேருந்து வசதிகளும் கிடைக்கின்றன. இவற்றின் கட்டணம் சற்று அதிகமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

Please Wait while comments are loading...