விஜயவாடா – மாம்பழங்களுக்கும் இனிப்புக்கும் பெயர் பெற்ற சீமாந்திர நகரம்!

சீமாந்திரா மாநிலத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக விளங்கும் விஜயவாடா நகரம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ளது. மூன்று புறமும் நீர்நிலைகளாலும், ஒரு புறம் மலையினாலும் சூழப்பட்டிருப்பதால் இந்த நகரம் அற்புதமான இயற்கை அழகோடு வீற்றிருக்கிறது. இந்த நகரத்தின் தென்பகுதியில் சுற்றுப்புறப் பகுதிகள் யாவையும் வளம் கொழிக்கச் செய்தவாறு சலசலத்து ஓடிக் கொண்டிருக்கிறது கிருஷ்ணா நதி. இதன் வட பகுதியில் புடமேரு ஆறு ஓடுகிறது.

மேலும், நகரத்தின் கிழக்கே பரந்து விரிந்த வங்களா விரிகுடாக்கடலும், வடக்கே வானோக்கி உயர்ந்திருக்கும் இந்திரகீலாத்ரி மலையும் வீற்றிருக்கின்றன. இவை மட்டுமல்லாமல், நகரத்தின் எல்லையை ஒட்டி மேற்குப்பகுதியில் கொண்டபள்ளி பாதுகாப்பு வனச்சரகமும் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த வனப்பகுதி தனது பசுமையான சூழலின் தூய்மையை விஜயவாடா நகரத்திலும் போர்த்தியுள்ளது.

விஜய-வாடா எனும் சொல்லுக்கு வெற்றியின் தேசம் என்பது பொருளாகும். கனகதுர்க்கா தெய்வத்தை குறிக்கும் பொருட்டு இந்த நகரத்துக்கு இப்பெயரிடப்பட்டுள்ளது. விஜயா எனும் சொல் இந்த பெண் தெய்வத்தை குறிப்பிடுகிறது.

பெஜாவாடா என்ற புராதனப்பெயரிலும் இந்த நகரம் அறியப்படுகிறது. நாட்டின் முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ள இந்த நகரம் சுவையான மாம்பழங்கள் விளையும் பூமியாக புகழ் பெற்றுள்ளது. பலவிதமான இனிப்பு வகைகள் மற்றும் நீரூற்றுகளுக்கும் இந்த நகரம் சிறப்புடன் அறியப்படுகிறது.

நவீன விஜயவாடா நகரம் ஆந்திர மாநிலத்தில் ஒரு முக்கியமான வியாபார தொழில் கேந்திரமாக வளர்ச்சியடைந்துள்ளது. புகழ் பெற்ற கல்வி நிலையங்கள் பல இந்நகரத்தில் உருவாகியுள்ளன. வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக சர்வதேச அளவில் அறியப்படும் விஜயவாடா நகரம் ‘நாளைய சர்வதேச நகர’ங்களில் ஒன்றாக ‘மெகின்ஸி குவார்ட்டர்லி’ மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

விஜயவாடாவின் வரலாற்று பக்கங்கள்

பல ராஜவம்சங்களின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் இந்த விஜயவாடா நகரம் கண்டு வந்துள்ளது. 15ம் நூற்றாண்டுகளில் கலிங்கத்தில் கோலோச்சிய கஜபதி வம்சம் தொடங்கி, கிழக்குச்சாளுக்கியர்கள் மற்றும் விஜயநகர சாம்ராஜ்ய கிருஷ்ணதேவராயர் ஆட்சி வரை பல அரசாட்சிகளுக்குள் இந்த நகரம் இருந்து வந்துள்ளது.

பல புராணக்கதைகள் மற்றும் ஐதீகக்கதைகளிலும் விஜயவாடா நகரம் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இங்குள்ள இந்திரகீலாத்ரி மலையில்தான் அர்ஜுனனுக்கு சிவன் வரம் தந்தருளியதாக கூறப்படுகிறது.

ஒரு புராணக்கதையின்படி, மஹிஷாசுரனை வதம் செய்த பின்னர் இந்த ஸ்தலத்தில்தான் துர்க்கை ஓய்வெடுத்ததாகவும், எனவே இதற்கு விஜய-வாடா என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

மற்றொரு கதையின்படி, கிருஷ்ணா என்றழைக்கப்படும் கிருஷ்ணவேணி ஆறு அர்ஜுனனிடம் தன்னை வங்காள விரிகுடா கடலுடன் சேர்ப்பிக்க வேண்டியதாகவும், அதற்காக அர்ஜுனன் ‘பெஜ்ஜம்’ எனும் துளையை மலையினூடே உருவாக்கி ஆற்றின் விருப்பத்தை நிறைவேற்றியதால் இந்நகரத்துக்கு ‘பெஜ்ஜவாடா’ என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆங்கிலேயர்களும் தங்கள் பங்குக்கு, இந்த நகரத்தை ‘பிளேஸ்வாடா’ என்ற பெயரால் அழைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது, அதிக வெப்பத்தை கொண்டிருந்ததால் ‘நெருப்பு நகரம்’ எனும் பொருள்தரும்படியான இந்த பெயர் அவர்களால் வழங்கப்பட்டது.

விஜயவாடாவின் முக்கியமான சுற்றுலா அம்சங்கள்

சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவரக்கூடிய பல அம்சங்கள் விஜயவாடா நகரத்தில் நிறைந்துள்ளன. புகழ் பெற்ற கனக துர்கா கோயில் மற்றும் தென்னிந்தியாவிலேயே பழமையான வைஷ்ணவ கோயிலாக கருதப்படும் மங்களகிரி போன்றவை இங்குள்ள முக்கியமான ஆன்மீக திருத்தலங்களாகும்.

இவை தவிர, அமரேஷ்வரர் என்ற சிவன் அவதாரத்துக்கான அமராவதி, குணாடலா மாதா கோயில் எனப்படும் செயிண்ட் மேரி தேவாலாயம் போன்றவையும் இந்நகரத்தில் உள்ளன.

மேலும், மொகலாராஜபுரம் குகைகள் , உன்டவலி குகைகள் மற்றும் காந்தி மலையில் உள்ள காந்தி ஸ்தூபி, கொண்டபள்ளி கோட்டை, பவானி தீவு மற்றும் ராஜீவ் காந்தி பார்க் ஆகியவை விஜயவாடா நகரத்தில் அவசியம் பார்க்க வேண்டிய அம்சங்களாகும். பிரகாசம் அணைத்தடுப்பு நீர்த்தேக்கமும் விஜயம் செய்ய வேண்டிய இயற்கை எழிற்பிரதேசமாகும்.

போக்குவரத்து வசதியும் இதர தகவல்களும்

விஜயவாடா விமான நிலையமானது, நகரத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் கண்ணவரம் எனும் இடத்தில் உள்ளது. இங்கிருந்து விசாகப்பட்டிணம் மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன.

ஹைதராபாத்திலிருந்து பயணிகள் இணைப்புச்சேவைகளை மற்ற பெருநகரங்களுக்கும், வெளிநாட்டு நகரங்களுக்கு தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். விஜயவாடா ரயில் நிலையம் நாட்டின் முக்கிய நகரங்களுடன் ரயில் சேவைகளால் இணைக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமன்றி தென்னிந்தியா மற்றும் மத்திய இந்தியாவின் நகரங்களுடன் நல்ல சாலைகளாலும் விஜயவாடா நகரம் இணைக்கப்பட்டுள்ளது.

விஜயவாடாவுக்கு விஜயம் செய்ய அக்டோபர் முதல் மார்ச் வரையிலான இடைப்பட்ட மாதங்கள் ஏற்றதாக உள்ளன. மழைக்கு பிறகான இந்த காலம் வெப்பநிலை குறைந்ததாகவும், குளிர்காலத்தை உள்ளடக்கியதுமாக காணப்படுகிறது.

அது மட்டுமன்றி, டெக்கான் திருவிழா, லும்பினி திருவிழா, துசேரா மற்றும் தீபாவளி போன்ற முக்கியமான திருவிழாக்கள் இக்காலத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...