பத்ராச்சலம் - ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தியின் புண்ணிய பூமி

ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்துக்கு வடகிழக்கே 309 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் சிறிய நகரமான பத்ராச்சலம், கம்மம் மாவட்டத்தில் கோதாவரி ஆற்றங்கரையோரம் எழிலே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த சிறிய நகரத்தில் ஸ்ரீ இராம பிரான் சிறிது காலம் வாழ்ந்ததாக சொல்லப்படுவதால் பத்ராச்சலம் நகரம் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலம். இதன் காரணமாக ஏராளமான பக்தர்கள் கூடும் புகழ்பெற்ற யாத்ரீக ஸ்தலமாக பத்ராச்சலம் நகரம் திகழ்ந்து வருகிறது.

பத்ராச்சலம் நகரத்தின் பெயர் 'பத்ரகிரி' என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும். அதாவது புராண கூற்றின் படி,  மேரு மற்றும் மேனகாவுக்கு வரம் வாங்கி பிறந்த குழந்தையே பத்ரா என்று சொல்லப்படுகிறது. இன்று அயோத்திக்கு பிறகு இராம பிரானின் பக்தர்கள் மிகவும் முக்கியமாக கருதுவது இந்த பத்ராச்சலம் நகரைத்தான்.

புராணம் சொல்வது என்ன?

ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி சீதா தேவி மற்றும் லக்ஷ்மனனுடன் இராமாயண காலத்தில் தண்டகாரண்யா காடுகளின் ஒரு பகுதியாக இருந்த பத்ராச்சலம் பகுதியில் தன்னுடைய வனவாசத்தின் சில காலங்களை கழித்ததாக புராணம் கூறுகிறது.

இங்கு காட்டுப் பகுதிகளுக்கு அருகாமையில் உள்ள ஸ்ரீ இராமர் கோயில் தற்போது இருக்கும் சுற்றுப்பகுதிகளில்தான் இராமர் தன்னுடைய மனைவி மற்றும் சகோதரருடன் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

இந்தக் கோயிலிருந்து  32 கிலோமீட்டர் தொலைவில் இராம பிரான் அழகிய குடிசை ஒன்றை கட்டி அமைதியாக வாழ்ந்து வந்தார். அப்போதுதான் இந்தக் குடிசைக்கு வந்த இராவணன் சீதா தேவியை ஏமாற்றி இலங்கைக்கு கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

பத்ராச்சலம் நகரில் விஷ்ணு பகவான் மற்றும் அவருடைய பக்தர் பக்த பத்ரா ஆகிய இருவர் சம்பந்தப்பட்ட புராண கதை ஒன்றும் சொல்லப்பட்டு வருகிறது. அதாவது ஸ்ரீ இராமரின் தீவிர பக்தரான பத்ராவை, சீதா தேவியை காப்பாற்ற இலங்கைக்கு செல்லும் வழியில் இராமச்சந்திர மூர்த்தி சந்தித்தார்.

அப்போது இராமரை தன் தலை மீது அமருமாறு முனிவர் பத்ரா மன்றாடி கேட்டுக் கொண்டார். ஆனால் சீதாவை காப்பாற்ற வேண்டிய அவசரத்தில் இருந்த இராம பிரான் தான் திரும்பி வரும் பொழுது பத்ராவின் விருப்பத்தை பூர்த்தி செய்வதாக வாக்கு கொடுத்தார்.

இருந்தபோதிலும் இராமர் அவ்வாறு தன் விருப்பத்தை நிறைவேற்றாத காரணத்தால் விஷ்ணுவை நோக்கி கடுந்தவம் செய்யத் தொடங்கினார் பத்ரா. இதன் பிறகு பத்ராவின் தவ வலிமையை பாராட்டி சங்கு முழங்க அவர் முன்பு சீதா தேவி மற்றும் லக்ஷ்மனனுடன் இராமர் வடிவத்தில் காட்சி தந்தார் விஷ்ணு பகவான்.

அதுமட்டுமில்லாமல் பக்த பத்ராவின் வரத்தினை நிறைவற்றும் விதமாக பத்ரகிரியின் உச்சியில் தன் இடது தொடையில் சீதா தேவியையும், வலது தொடையில் தம்பி லக்ஷ்மனனையும் தாங்கிக் கொண்டு இராம பிரான் அமர்ந்ததாக புராணம் கூறுகிறது.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் ராமராஜ்யத்துக்கு பிறகு  வெகு காலத்துக்கு பின் நடைபெற்றவை ஆகும். அதோடு இந்த நகரமும் அன்றிலிருந்து இராம பிரானின் பக்தரான பத்ராவின் நினைவாக பத்ராச்சாலம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீ இராமர் கோயில் குறித்தும் ஒரு பிரபலமான புராண கதை பத்ராச்சாலத்தில் சொல்லப்படுகிறது. அதாவது போகால தம்மக்கா என்ற பெண்ணின் கனவில் வந்த இராம பிரான் பத்ரகிரியின் மலைச் சரிவுகளில் சில விக்ரகங்கள் மறைந்து கிடப்பதாக கூறினார்.

இதைத் தொடர்ந்து அடுத்த நாள் பத்ரகிரி சென்று பார்த்த போகால தம்மக்கா அங்கு மலை முழுக்க எண்ணற்ற விக்ரகங்கள் சிதறிக் கிடப்பதை பார்த்து ஆச்சர்யம் அடைந்தார். இதன் பிறகு பத்ரகிரியில் ஒரு சிறிய கட்டிடம் ஒன்றை எழுப்பி அதற்கு தம்மக்கா என்று பெயர் சூட்டினார் போகால தம்மக்கா.

பின்பு காடுகளை தன்னால் முடிந்தவரை சுத்தம் செய்த போகால தம்மக்கா, தினமும் தான் கட்டிய சிறிய ஆலயத்தையும், பூஜை மாடத்தையும் வழிபடத் தொடங்கினார். அன்றிலிருந்து பத்ரகிரி மலைப்பகுதி ஹிந்துக்களின் முக்கிய யாத்ரீக மையமாக இருந்து வருவதோடு, உலகம் முழுவதுமிருந்து இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

சுற்றுலா அம்சங்கள்

பத்ராச்சலம் நகரில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக கூடும் இடங்களாக ஜடாயு பக்க, பர்ணசாலா, தும்முகுடேம், குண்டாலா ஆகிய பகுதிகள் அறியப்படுகின்றன. இந்த நகரத்தில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களான ஸ்ரீ சீதா இராமச்சந்திர சுவாமி கோயில் மற்றும் பத்ராச்சல இராமர் கோயில் ஆகிய இரண்டு கோயில்களுக்கும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

மேலும் பத்ராச்சலம் நகரை ரயில் மற்றும் சாலை மார்க்கங்களில் அடைவது மிகவும் எளிதான காரியம். அதோடு எண்ணற்ற புராண கதைகளை சுமந்து கொண்டிருக்கும் பத்ராச்சலம் நகருக்கு அதன் இதமான வெப்பநிலை காரணமாக எந்த காலங்களிலும் நீங்கள் சுற்றுலா வரலாம்.

Please Wait while comments are loading...