ராஜமுந்திரி – சீமாந்திராவின் கலாச்சார தலைநகரம்

சீமாந்திரா மாநிலத்தில் உள்ள இந்த ராஜமுந்திரி நகரம் கலாச்சார தலைநகரமாகவே பிரசித்தமாக அறியப்படுகிறது. ஆதிகாலத்தில் ராஜமஹேந்திரி என்றழைக்கப்பட்ட இந்நகரத்தின் பெயர் நாளடைவில் திரிபடைந்து இப்படி ராஜமுந்திரி என்றாகியுள்ளது.

வரலாற்று சான்றுகளின்படி இந்த நகரத்தில்தான் நன்னய்யா எனும் மிகச்சிறந்த தெலுங்கு புலவர் தெலுங்கு எழுத்துருக்களை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. ஆதிகவி என்ற புகழுடன் அழைக்கப்படும் இந்த நன்னய்யா தெலுகு இலக்கியப் பாரம்பரியத்தின் பிதாமகராக அறியப்படுகிறார்.

தெலுஙகு லிபி மற்றும் ஆகச்சிறந்த புலவர் நன்னய்யா பிறந்த ஸ்தலமாக மட்டுமல்லாமல் வேதப்பாரம்பரியம் மற்றும் ஹிந்து அறக்கோட்பாடுகளை தீவிரமாக பின்பற்றி திகழ்ந்த பாரம்பரிய நகரம் என்ற புகழையும் இது பெற்றுள்ளது.

இன்றும் ராஜமுந்திரியில் புராதன ஐதீகங்கள் மற்றும் வேதச்சடங்குகள் தீவிரமாக பின்பற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு பாரம்பரிய கலையம்சங்களும் அழிந்துவிடாமல் இந்நகரில் வளர்க்கப்பட்டு வருகின்றன.

ராஜமுந்திரி நகராட்சிக்கு அதிகாரபூர்வமாகவே “ மஹோன்னத கலாச்சார நகரம்” என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தியாவிலுள்ள பழமையான புராதன நகரங்களில் ஒன்றாக கருதப்படும் இந்நகரம் 11ம் நூற்றாண்டின் துவக்கத்தில் சாளுக்கிய அரசனான ஸ்ரீ ராஜராஜ நரேந்திரன் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

இது குறித்த மாற்றுக்கருத்துகளும் வரலாற்று அறிஞர்களிடையே நிலவுகின்றன. இருப்பினும் சாளுக்கிய வம்சத்தின் எழுச்சியும் இந்த ராஜமுந்திரி நகரத்தின் நிர்மாணமும் தொடர்புடைய வரலாற்று நிகழ்வுகளாகவே கருதப்படுகிறது.

ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் மெட்ராஸ் பிரசிடென்சி மாநிலத்து உட்பட்ட பகுதியாக விளங்கிய இது 1823ம் ஆண்டில் தனி மாவட்ட அந்தஸ்தையும் பெற்றது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு இது கோதாவரி மாவட்டத்தின் தலைநகரமாக மாற்றப்பட்டது.

மாநிலத்தலைநகரமான ஹைதராபாதிலிருந்து 400 கி.மீ தொலைவில் கோதாவரி ஆற்றின் கரையில் இந்த ராஜமுந்திரி நகரம் அமைந்திருக்கிறது. தெலுங்கு மொழி இங்கு பிறந்த காரணத்தால் இது ஆந்திர மாநிலத்தின் பிறப்பிடமாகவே கருதப்படுகிறது.

வரலாற்றுப்பின்னணியும் சமூகப்பங்களிப்பும்

ராஜமுந்திரி நகரத்தின் தோற்றமானது சாளுக்கிய வம்சத்தினரின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த ஒன்றாக வரலாற்றுச்சான்றுகள் கூறுகின்றன. ஸ்ரீ ராஜராஜ நரேந்திரம் எனும் மன்னரால் நிர்மாணிக்கப்பட்டு அவரது பெயராலேயே ராஜமஹேந்திரி அல்லது ராஜமஹேந்திரவரம் என்ற பெயரால் புராதன காலத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது.

1893ம் ஆண்டிலேயே இந்த நகரம் ரயில் பாதை இணைப்பையும் பெற்றிருக்கிறது. அக்காலத்திலேயே பல முக்கியமான கல்வி நிறுவனங்களும் இந்த நகரத்தில் துவங்கப்பட்டுள்ளன. சுதந்திரப்போராட்டத்தோடு தொடர்புடைய பலவிதமான இயக்கங்களும் இந்த நகரின் உருவெடுத்துள்ளன.

இந்திய ஆங்கிலப்பத்திரிகைகளில் முன்னோடியான ‘தி ஹிந்து’ பத்திரிகையின் ஸ்தாபகர்களில் ஒருவரான சுப்பா ராவ் இந்த ராஜமுந்திரி நகரத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய ஆந்திர மாநிலத்தின் சமூக சீர்திருத்த தந்தையாக கருதப்படும் கண்டுகுரி வீரேசலிங்கம் பந்துலு என்பவரும் இந்த நகரத்தில் பிறந்தவரே. ராஜமுந்திரி நகரத்தில்தான் அவர் தனது சமூக சீர்திருத்த செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளார்.

இவரது முயற்சியால் டவுன் ஹால் எனப்படும் நகரசபை 1890ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. மேலும், கலைத்துறையிலும் ஏராளமான முன்னோடிகளை ராஜமுந்திரி நகரம் வழங்கியிருக்கிறது.

இவர்களில் டாமர்லா ராமா ராவ் குறிப்பிடத்தக்க கலைஞர் ஆவார். இவர் ஆந்திர பாணி ஓவியக்கலையை மீட்டு வளர்த்ததில் பெரும் பங்களிப்பை அளித்துள்ளார். இந்திய ஓவிய மரபிலேயே முதல் முதலாக நிர்வாண பாணி ஓவியங்களை அறிமுகப்படுத்தியதும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பலவித புதிய ஓவிய நுணுக்கங்களை பின்பற்றிய இவரது ஓவியங்கள் சர்வதேச கவனிப்பை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ராஜமுந்திரி சித்ர கலாசாலா எனும் ஓவியக்கல்லூரியை உருவாக்கி அவர் ஓவியக்கலையை தன் மாணவர்களுக்கு கற்பித்துள்ளார்.

ராஜமுந்திரி நகரத்தில் இன்று டாமர்லா ராமா ராவ் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள காலரியில் (ஓவியக்காட்சிக்கூடம்) இவரது பிரசித்தி பெற்ற ஓவியங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த காலரி பயணிகள் அவசியம் ராஜமுந்திரி நகரத்தில் விஜயம் செய்ய வேண்டிய இடமாகும்.

ராஜமுந்திரி நகரத்தின் விசேஷ அம்சங்கள்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைகளிலும் பெருமளவில் தனது பங்களிப்பை அளித்திருக்கும் ராஜமுந்திரி நகரத்தில் பல அறிவியல் கழகங்களும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையங்களும் அமைந்துள்ளன.

ஆர்யபட்டா சைன்ஸ் அன்ட் டெக்னாலஜி சொசைட்டி (ஆர்யபட்டா அறிவியல் தொழில்நுட்ப கழகம்) அவற்றில் முதன்மையான ஒன்றாகும். இங்கு அறிவியல் கருத்துகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ராஜமுந்திரி நகரத்தில் நிறைய கோயில்களும் நிறைந்துள்ளன. இவற்றில் சில முக்கியமான கோயில்கள் வருடம் முழுதுமே ஏராளமான பக்தர்களை கவர்ந்திழுக்கும் ஆன்மீக யாத்திரை மையங்களாக புகழ் பெற்றுள்ளன.

ஸ்ரீ கோடிலிங்கேஷ்வரா கோயில் மற்றும் ஸ்ரீ பால திரிபுர சுந்தரி கோயில் போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை. கௌதமி காட் என்றழைக்கப்படும் ISKCON கோயிலும் பிரபலமான ஆன்மீக திருத்தலமாக இங்கு பிரசித்தி பெற்றுள்ளது.

சீமாந்திரா மாநிலத்தின் ‘கலாச்சார தலைநகரம்’ எனும் பெருமையை பெற்றிருப்பதால் ராஜமுந்திரி நகரம் நாட்டின் எல்லா பகுதிகளுடனும் ரயில் மற்றும் சாலைப்போக்குவரத்து வசதிகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், ராஜமுந்திரி நகரத்திலுள்ள சிறிய உள்நாட்டு விமானநிலையம் சென்னை, மதுரை, விஜயவாடா, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு விமான சேவைகளை கொண்டுள்ளது.

இப்பகுதியின் பருவநிலை பெரும்பாலும் வெப்பமான, ஈரப்பதமான சூழலுடன் காணப்படுகிறது. குறிப்பாக கோடைக்காலத்தில் இங்கு தாங்க முடியாத வெப்பம் நிலவுகிறது. இக்காலத்தில் சராசரி வெப்பநிலை 34° C முதல் 48° C வரை காணப்படுவது மட்டுமல்லாமல், உச்சபட்சமான வெப்பநிலையாக 51° C வரையிலும்கூட செல்வதுண்டு. குளுமையான சூழல் நிலவும் குளிர்காலப்பருவமான டிசம்பர்-ஜனவரி மாதங்களில் ராஜமுந்திரிக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்வது சிறந்தது.

Please Wait while comments are loading...