வாரங்கல் – வரலாற்று உன்னதங்கள் ஒளிரும் ஆந்திரப்புராதன நகரம்

ஆந்திர மாநிலத்தின் தென் பகுதியில் வாரங்கல் என்ற பெயரிலேயே அமைந்துள்ள மாவட்டத்தின் தலைநகரமே இந்த வாரங்கல். 12ம் – 14ம் நூற்றாண்டுகளில் ஆந்திரமண்ணில் கோலோச்சிய காகதீய ராஜவம்சம் இந்த நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தது என்பது இதன் முக்கியமான வரலாற்று அடையாளமாகும்.

ஆந்திர மாநிலத்தில் 5 வது பெரிய நகரமாக விளங்கும் வாரங்கல் நகரம் ‘ஒருகல்லு’ என்றும் ‘ஒம்டிகொண்டா’ என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு பிரம்மாண்ட ஒற்றைப்பாறைக்குன்று இங்கு வீற்றிருப்பதே இப்பெயருக்கான காரணம். ஹனுமகொண்டா மற்றும் காஜிபேட் ஆகிய பகுதிகளையும் வாரங்கல் நகரம் உள்ளடக்கியுள்ளது.

வாரங்கல் நகரத்தில் பல அற்புதமான கட்டிடக்கலை அதிசயங்கள் இடம் பெற்றுள்ளது. இவற்றுள் முக்கியமானது வாரங்கல் கோட்டை. புரோள ராஜ எனும் காகதீய வம்ச மன்னர் இந்த அழகான நகரத்தை நிர்மாணித்தவராக கருதப்படுகிறார்.

மார்க்கோ எனும் பிரபல இத்தாலிய வரலாற்றுப்பயணியின் குறிப்புகளில் இந்த வாரங்கல் நகரம் பற்றிய தகவல்கள் இடம்பெற்றிருப்பதுடன், காகதீய அரசாட்சியில் நிர்வாகம் மற்றும் கலையம்சங்கள் உன்னதமான நிலையில் காணப்பட்டதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

வாரங்கல் மாவட்டம் அடிப்படையாக ஒரு விவசாய பூமியாக விளங்குகிறது. மிளகாய், புகையிலை, பருத்தி மற்றும் நெல் போன்றவை இங்கு பெரிய அளவில் விளைவிக்கப்படுகின்றன. வாரங்கல் நகரத்தின் மக்கள் தொகை 10 லட்சத்திற்கும் உட்பட்டு காணப்படுகிறது.

வரலாற்றின் பின்பக்கங்களின் ஊடே ஒரு பயணம்

12ம் நூற்றாண்டிலிருந்து 14ம் நூற்றாண்டு வரை இந்த வாரங்கல் பகுதி காகதீய ராஜ வம்சத்தினரால் ஆளப்பட்டிருக்கிறது. இந்த வம்சத்தை சேர்ந்த பிரதாப ருத்ரா என்ற மன்னரை வீழ்த்தி தோற்றுவிக்கப்பட்ட முசுன்றி நாயக்கர்களின் ஆட்சி ஒரு 50 ஆண்டு காலத்துக்கு நடந்திருக்கிறது.

பின்னர் நாயக்க தளபதிகளிடையே ஒற்றுமையில்லாத காரணத்தினாலல் இந்த ராஜாங்கம் வம்சச்சண்டையினால் முடிந்து போனது. அவர்களுக்கு அடுத்ததாக பாமனி அரசர்கள் வாரங்கல் பகுதியை தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தனர்.

பின்னர் 1687ம் ஆண்டில் முகலாயப்பேரரசர் ஔரங்கசிப்’பால் கோல்கொண்டா கோட்டை கைப்பற்றப்பட்டபோது அதன் அங்கமாக இருந்த வாரங்கல் நகரமும் முகலாயர் வசம் சென்று 1724ம் ஆண்டுவரை அவர்களின் ஆட்சிக்குட்பட்டதாக இருந்துள்ளது.

1724ம் ஆண்டுக்கு ஹைதராபாத் சமஸ்தான ராஜ்ஜியம் என்ற ஒன்று உருவானபோது அதில் வாரங்கல் நகரமாவட்டமும், மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவின் ஒருசில பகுதிகளும் அடங்கியிருந்தன.

பின்னர் இந்திய சுதந்திரத்திற்கு பின் 1948ம் ஆண்டில் ஹைதராபாத் தவிர்த்த மற்ற பகுதிகள் தனி மாநிலமாகி, இறுதியாக 1956ம் ஆண்டு ஹைதராபாத் நிஜாம் சமஸ்தானம் உள்ளிட்ட தெலுங்கு பேசும் பகுதிகள் யாவும் ஒன்றிணைக்கப்பட்டு இன்றைக்குள்ள பரந்த ஆந்திரப்பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்டது.

12ம் நூற்றாண்டிற்கு முற்பகுதியில் இந்த வாரங்கல் நகரம் ‘காகதீபுரம்’ என்று அழைக்கப்பட்டதற்கான கல்வெட்டு குறிப்புகள் கிடைத்துள்ளன. அதாவது காகதீய ராஜ்ஜியத்தின் தலைநகரம் என்று குறிப்பிடும்படியாக இந்த பெயர் விளங்கியிருக்கிறது.

வாரங்கல் நகரத்திலும், அதைச்சுற்றியும் உள்ள விசேஷ அம்சங்கள்

வரலாற்று முக்கியத்துவம், பலவகையான வரலாற்றுச்சின்னங்கள், காட்டுயிர் சரணாலயங்கள் போன்றவற்றுக்காக இந்த வாரங்கல் நகரமானது வருடந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகளால் விஜயம் செய்யப்படுகிறது.

பக்கால் ஏரி, வாரங்கல் கோட்டை, ஆயிரங்கால் மண்டபக்கோயில் மற்றும் பாறைத்தோட்டம் போன்றவை வாரங்கல் மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலா அம்சங்களாகும்.

பத்மாக்ஷி கோயில் மற்றும் பத்ரகாளி கோயில் போன்ற ஆன்மீக திருத்தலங்களும் இங்கு பக்தி யாத்ரீகர்களை கவர்ந்து இழுக்கின்றன. வாரங்கல் பிளானட்டேரியம் மற்றும் ஏரிகள், பூங்காங்கள் போன்ற அம்சங்களும் இங்கு சுற்றுலா பயணிகளுக்காக காத்திருக்கின்றன.

சம்மக்கா சாரக்கா ஜாத்ரா அல்லது சம்மக்கா சாரளம்மா ஜாத்ரா என்றழைக்கப்படும் எனப்படும் உள்ளூர் சடங்குத்திருவிழா ஒன்று இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வாரங்கல் மாவட்டத்தில் நடத்தப்படுகிறது.

கும்ப மேளாவுக்கு அடுத்தபடியான பெரிய சடங்குத்திருவிழாவாக கருதப்படும் இதில் சுமார் 80 லட்சம் முதல் 1 கோடி மக்கள் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

காகதீய ராஜவம்ச ஆட்சியின்போது ஒரு கொடுமையான சட்டத்தை எதிர்த்து கலகம் செய்த ‘சம்மக்கா – சாரளம்மா’ என்ற தாயும்-மகளுமான இரண்டு புரட்சிப்பெண்களின் ஞாபகார்த்த சடங்காக இந்த திருவிழா காலம் காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே கும்ப மேளாவிற்கு அடுத்தப்படியான பெரிய திருவிழாக்கூட்டமாக இது பிரசித்தி பெற்றுள்ளது.

பலவிதமான மலர்களால் பெண் தெய்வங்களுக்கு பூஜை செய்து விசேஷ ஐதீகச்சடங்குகளில் பெண்கள் மட்டுமே ஈடுபடும் ‘பத்துகம்மா’ எனும் சடங்குப்பண்டிகையும் இங்கு கொண்டாடப்படுகிறது.

மஹாளய அமாவாசையில் துவங்கி துர்க்காஷ்டமிக்கு இரண்டு நாள் முன்னதாக இது முடிவடைகிறது. பாரம்பரிய உடைகள் மற்றும் ஆபரணங்கள் அணிந்து பெண்கள் இந்த சடங்குகளில் ஈடுபடுகின்றனர்

பயண வசதிகள் மற்றும் இதர தகவல்கள்

அரசுப்பேருந்து சேவை நகரம் முழுவதுமே இயக்கப்படுவதால் இது பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்கு விஜயம் செய்து ரசிக்க வசதியாக உள்ளது. ஆட்டோ வசதிகளும் இந்த நகரத்தில் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து அம்சங்களுக்கு எந்த குறையுமில்லை. இருப்பினும் மீட்டர் கட்டண முறை இல்லாததால் முன்கூட்டியே கட்டணங்களை பேசியபின் ஆட்டோ வாடகைக்கு எடுப்பது அவசியம்.

சுற்றுலாப்பயணிகள் அதிக விஜயம் செய்யும் இடம் என்பதால் தங்கிமிடங்களை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளவில்லை என்றால் சிரமத்துக்குள்ளாக நேரிடும். 750 ரூ வாடகையில் பட்ஜெட் விடுதிகள் இங்கு கிடைக்கின்றன.

எனினும் கோடைக்காலத்தில் வெயில் கொளுத்தும் என்பதால் இந்த சாதாரண விடுதிகளில் தங்க முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். குளிர்வசதியுடன் கூடிய சொகுசு அறைகள் 1200 ரூபாய் வாடகையில் வாரங்கல் கோட்டை ஸ்தலத்துக்கு அருகில் கிடைக்கக்கூடும்.

நாளொன்றுக்கு 3000 முதல் 4000 ரூபாய் வரை செலவழிக்கூடிய சக்தி உடையவர்கள் இங்குள்ள ரிசார்ட் விடுதிகளில் தங்கலாம். அறைகளில் இன்டர்நெட் வசதி, நீச்சல் குளம், பன்னாட்டு பாணி உணவுக்கூடம் போன்ற வசதிகள் இது போன்ற ரிசார்ட் விடுதிகளில் வழங்கப்படுகின்றன.

Please Wait while comments are loading...