நிஜாமாபாத் – நிஜாம் ராஜவம்ச நகரம்

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள இந்த நிஜாமாபாத் நகரம் இந்தூரு அல்லது இந்திரபுரி என்றும் அழைக்கப்படுகிறது. தன் பெயரிலேயே அழைக்கப்படும் மாவட்டத்தின் தலைநகரமாகவும், ஒரு முனிசிபல் கார்ப்பரேஷன் நகராட்சியாகவும் விளங்கும் இது ஆந்திர மாநிலத்தின் 10 பெரிய நகரங்களின் ஒன்றாகும்.

எட்டாம் நூற்றாண்டில் இந்த நகரம் ராஷ்டிரகூட வம்சத்தை சேர்ந்த வல்லப பந்திய வர்ஷ இந்திர சோமா என்ற மன்னரின் ஆளுகைக்குள் இருந்திருக்கிறது. அந்த மன்னரின் பெயராலேயே இது இந்திரபுரி என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும் செகந்தராபாத் நகருக்கும் மன்மட் நகருக்கும் இடையே ரயில்பாதை அமைக்கப்பட்ட போது இந்த நகரில் ரயில் நிலையம் ஏற்படுத்தப்பட்டு அதற்கு நிஜாமாபாத் என்று பெயரிடப்பட்டது.

அப்போதைய நிஜாம் மன்னரான நிஜாம்-உல்-முல்க் என்பவரின் பெயரில் இது அழைக்கப்பட்டது. பின்னாளில் ஹைதராபாத் மற்றும் மும்பையை இணைக்கும் பாதையில் இந்த நிஜாமாபாத் ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக மாறியதால் இந்திரபுரி நகரமும் நிஜாமாபாத் என்றே மாறி வழங்கப்படலாயிற்று.

நிஜாமாபாத் நகரத்தை பல ஆண்டுகள் ஆட்சி செய்த நிஜாம்-உல்-முல்க் மன்னரின் பொற்கால ஆட்சியின்போது இந்நகரம் செழிப்பாகவே விளங்கியிருக்கிறது. கலை மற்றும் கட்டிடக்கலை அம்சங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த இந்த மன்னர் மசூதிகள் மற்றும் கோயில்கள் ஆகியவற்றை மத வேற்றுமை பாராது நிர்மாணித்துள்ளார்.

நிஜாமாபாத் மாவட்டத்துக்குள் அர்முரு, போதான், பன்ஸ்வாடா, கமரெட்டி உள்ளிட்ட பல நகரங்களும் கிராமங்களும் அமைந்துள்ளன. போதான் நகரத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரியதான நிஜாம் சர்க்கரை ஆலை அமைந்துள்ளது.

பல்வேறு கலாச்சார அம்சங்களின் கதம்ப நகரம்

நிஜாமாபாத் நகரம் தனது செழுமையான கலாச்சார சங்கமத்துக்கு பெயர் பெற்று விளங்குகிறது. இங்கு ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள் மற்றும் சீக்கியர்கள் போன்ற பல்வேறு மதப்பிரிவுகளை சார்ந்த குடிமக்கள் இணக்கமாக ஒற்றுமையாக வாழ்கின்றனர். இந்த நகரத்தில் எந்த விதமான இனரீதியான வன்முறைகளும் நிகழ்ந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜண்டா மற்றும் நீலகண்டேஷ்வரர் திருவிழா ஆகிய இரண்டும் இந்த நகரத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன. ஆகஸ்ட் – செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படும் ஜண்டா திருவிழா 15 நாட்களுக்கு தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நிகழும் நீலகண்டேஷ்வரர் திருவிழா 2 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.

நிஜாமாபாத் நகரின் விசேஷ அம்சங்கள்

ஆந்திர மாநிலத்தில் அதிக மக்கள் விஜயம் செய்யும் நகரங்களில் ஒன்றாக இருப்பதால் இந்த நிஜாமாபாத் முக்கிய சுற்றுலா நகரமாக பிரசித்தி பெற்றுள்ளது. மேலும் இந்நகரத்தில் ஹனுமான் கோயில், நீல கண்டேஷ்வரர் கோயில், கில்லா ராமாலயம் கோயில், ஸ்ரீ ரகுநாத கோயில், ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோயில் மற்றும் சரஸ்வதி கோயில் போன்ற முக்கியமான ஆன்மீக திருத்தலங்கள் அமைந்துள்ளன.

இவை தவிர வரலாற்று ஆர்வலர்கள் விரும்பும்படியான அம்சமாக நிஜாமாபாத் தொல்லியல் பண்பாட்டு அருங்காட்சியகம் பல அரிய வரலாற்றுப்பொருட்களை காட்சிக்கு கொண்டதாக அமைந்துள்ளது.

சிதிலமடைந்து காணப்பட்டாலும் நிஜாம்களின் உன்னத வரலாற்றுக்காலத்தை நினைவுபடுத்தும் விதமாக தொம்மகொண்டா கோட்டையும் இங்கு உள்ளது. மற்றொரு முக்கியமான கோட்டையாக நிஜாமாபாத் கோட்டையும் நகரத்துக்கு அருகிலேயே உள்ளது.

இது சுற்றுலாப்பயணிகள் மற்றும் பிக்னிக் பிரியர்கள் விரும்பி விஜயம் செய்யும் ஒரு வரலாற்றுச்சின்னமாக திகழ்கிறது. கென்டு மஸ்ஜித் எனும் மசூதியும் அனைத்துப்பிரிவினரும் விஜயம் செய்யும் ஆன்மிக மையமாக பிரசித்தி பெற்றுள்ளது.

இதர சுற்றுலாத்தகவல்கள்

பிரசித்தமான சுற்றுலாத்தலமான நிஜாமாபாத் நகரத்துக்கு நவம்பர் முதல் பிப்ரவரி வரையான இடைப்பட்ட மாதங்களில் விஜயம் செய்வது சிறந்தது. இக்காலங்களில் பருவநிலை இனிமையாகவும் வெப்பநிலை மற்றக்காலங்களை விட குறைவாகவும் இருக்கும். வெப்ப மண்டலத்தில் உள்ளதால் நிஜாமாபாத் நகரம் கோடைக்காலத்தில் கடுமையான வெப்பநிலையை பெறுகிறது.

மே மற்றும் ஜூன் மாதங்களில் இப்பகுதி கொதிக்கும் வெப்பத்துடன் காட்சியளிக்கிறது. மழைக்காலத்தில் மிதமான மழைப்பொழிவை பெற்றாலும் அக்காலத்தில் ஈரப்பதமும் அதிகரித்து காணப்படுவது அசௌகரியமாக இருக்கும்.

நாட்டின் மற்ற எல்லாப்பகுதிகளுடனும் சாலை மற்றும் ரயில் வசதிகளால் இணைக்கப்பட்டிருந்தாலும் போவதற்கும் வருவதற்கும் நன்கு திட்டமிட்டுக்கொண்டு நிஜாமாபாத் நகரத்துக்கு சுற்றுலா மேற்கொள்வது சிறந்தது.

ஆந்திர மாநில அரசுப்பேருந்துகள் நிஜாமாபாத் நகரத்திலிருந்து அடிக்கடி பிற முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. மும்பையிலிருந்தோ ஹைதராபாதிலிருந்தோ பயணிக்கும்பட்சத்தில் சாலைகள் மிக நன்றாக உள்ளன.

சென்னை மற்றும் பெங்களூரிலிருந்தும் சாலை மார்க்கமாக பயணிப்பதற்கு சிறந்த நெடுஞ்சாலை வசதிகள் உள்ளன. மெலும் ரயில் மார்க்கமாகவும் சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை போன்ற நகரங்களுடன் நேரடியாக இந்த நிஜாமாபாத் நகரம் இணைக்கப்பட்டிருக்கிறது.

அருகிலுள்ள விமான நிலையமாக 200 கி.மீ தூரத்தில் ஹைதராபாத் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து டாக்ஸி மூலம் நிஜாமாபாத் நகரத்தை வந்தடையலாம்.

Please Wait while comments are loading...