தஞ்சாவூர் – சோழர்குல முடிவேந்தர்களின் ஆட்சிப்பீடம்!

தமிழ்நாட்டின் முக்கிய கலாச்சார பூமியான தஞ்சை மாவட்டமானது தமிழ்த்திராவிட தென்னிந்தியாவை ஆண்ட மூவேந்தர்களுள் சோழர்கள் ஆண்ட மண்ணாகும். ராஜராஜசோழனால் கட்டப்பட்ட பிருகதீஸ்வரர் ஆலயம் எனப்படும் தஞ்சை பெருவுடையார் கோயில் இந்நகரத்தின் கலாச்சார அடையாளமாக வீற்றிருப்பதோடு உலகளாவிய கீர்த்தியையும் பெற்றுத்தந்திருக்கிறது. இக்கோயில் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரியச்சின்னம் எனும் பெருமையை பெற்றுள்ளது.

18ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து நாட்டின் முக்கியமான கலாச்சார மையமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டம் தென்னகத்தில் அதிகம் யாத்ரீகர்களும் பயணிகளும் விஜயம் செய்யும் மாவட்டமாக திகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2009ம் ஆண்டில் 2,00,225 இந்தியப்பயணிகளும்; 81,435 வெளிநாட்டுப்பயணிகளும் தஞ்சாவூருக்கு விஜயம் செய்ததாக ஒரு கணக்கீடு தெரிவிக்கிறது.

பெயர்க்காரணம்

‘தஞ்சகாசுரன்’ என்ற பெயரைக்கொண்ட ஒரு அசுரனை மஹாவிஷ்ணு தஞ்சாவூர் ஸ்தலத்தில் வதம் செய்ததாகவும், அதனாலேயே இவ்வூருக்கு தஞ்சாவூர் என்ற பெயர் வந்ததாக ஒரு கருத்து நிலவுகிறது (சிவபெருமான் தான் இவனை வதம் செய்தார் என்றும் சொல்லப்படுகிறது).

காவிரி ஆற்றுப்படுகையில் குளிர்ச்சியான வளம் கொழிக்கும் பகுதி என்பதால் இந்த இடத்துக்கு ‘தண் – செய்யூர்’ என்ற பெயர் வழங்கி அது தஞ்சாவூர் ஆக திரிந்திருக்கலாம் என்பது மற்றொரு ஊகமாக முன் வைக்கப்படுகிறது.

புகார் நகரை தலைநகராக கொண்டு ஆண்ட கரிகாற்சோழன் அந்நகரை கடல் கொண்டதால் இந்த ஊருக்கு தன் தலைநகரத்தை மாற்றி தஞ்சமடைந்ததாகவும், எனவே இது தஞ்சாவூர் ஆனதாகவும் ஒரு விளக்கம் தரப்படுகிறது.

ஆனால் இவை எவற்றுக்கும்  ஆதாரங்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், வளம் கொழிக்கும் பூமியாக இருந்ததால் பல பகுதிகளிலிருந்தும் பஞ்சம் பிழைக்க வந்து தஞ்சமடைந்ததால் தஞ்சாவூர் ஆயிற்று என்று சொல்லப்படும் கருத்து ஓரளவு பொருத்தமானதாகவும் நம்பக்கூடியதாகவும் உள்ளது.

வரலாற்றுப்பின்னணி

தமிழர் பாரம்பரியத்தின் அறமும்-ஆட்சியும், மரபும்-மாட்சியும் உயர்ந்தோங்கியிருந்த சோழ மண்ணின் பெருமையானது பழந்தமிழ்ப்புலவர்கள் இயற்றிய செய்யுள்களிலும் காப்பியங்களிலும் ஆவணங்களாக பதிக்கப்பட்டுள்ளது.

சோழ நாட்டின் பெருமையை சேக்கிழார் பெரிய புராணத்தில்  இப்படி வர்ணிக்கின்றார்: 

'வீதிகள் விழவின் ஆர்ப்பும், விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும் சாதிகள் நெறியில் தப்பா; தனையரும மனையில் தப்பார் நீதிய புள்ளும் மாவும் நிலத்திருப் புள்ளும் மாவும் ஓதிய எழுத்தாம் அஞ்சும் உறுபிணி வரத்தாம் அஞ்சும் …''.

பிறிதொரு தமிழர் இலக்கியமான சிலப்பதிகாரத்தின் வைர வரிகள் சோழ மண்ணை பின்வருமாறு விவரிக்கின்றன.  

“முடிஉடை வேந்தர் மூவருள்ளும்தொடிவிளங்கு தடக்கைச் சோழர்க்குலத்து உதித்தோர்அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்பழவிறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும்விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும்ஒடியா இன்பத்து அவர்உறை நாட்டுக்குடியும் கூழின் பெருக்கமும் அவர்தம்தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும்பொய்யா வானம் புதுப்புனல் பொழிதலும்அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும் பரந்துஇசை எய்திய பாரதி விருத்தியும்திணைநிலை வரியும் இணைநிலை வரியும்அணைவுறக் கிடந்த யாழின் தொகுதியும்ஈர்ஏழ் சகோடமும் இடநிலைப் பாலையும்தாரத்து ஆக்கமும் தான்தெரி பண்ணும் ஊரகத் தேரும் ஒளியுடைப் பாணியும்…”

மிகை இருப்பின் பொய்யிருக்க வாய்ப்பில்லை புலவர்கள் செய்யுளில். எனவே மேற்சொன்ன வரிகள் அந்நாளைய சோழ பூமியின் செழிப்பையும், நாகரிகத்தையும் கண் முன் நிறுத்துகின்றன என்பதில் ஐயமே இல்லை.

அப்படிப்பட்ட சோழப் பேரரசின் தலைநகரமாக பிற்கால சோழர்களால் ஆளப்பட்ட நகரமே தஞ்சாவூர். இருப்பினும் சோழப்பேரரசு ஆண்ட சுவடுகளின் மிச்சமாக ‘ராஜராஜுச்சுரம்’ என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘பெருவுடையார் கோயில்’ மட்டுமே இன்று தஞ்சாவூரில் மிச்சமிருக்கிறது.

மற்ற தகவல்கள் யாவும் இலக்கியங்களிலிருந்தும் கல்வெட்டுகளிலிருந்தும் மட்டுமே கிடைக்கின்றன. சோழர் காலத்திய தஞ்சாவூர் நகரமைப்பு இன்று வல்லம் என்ற இடத்தில் இருந்திருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

9ம் நூற்றாண்டு முதல் 13 வரை தஞ்சைப்பகுதியில் பிற்கால சோழர்களின் பொற்காலம் நீடித்திருக்கிறது.  இதற்கு முன்பே உறையூர், பழையாறை மற்றும் காவிரிப்பூம்பட்டிணம் எனப்படும் புகார் நகரம் போன்ற நகரங்களை தலைநகரங்களாக கொண்டு முற்கால சோழ மன்னர்கள் 1ம் நூற்றாண்டு துவங்கி ஆண்டு வந்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முற்கால சோழர்களில் 2ம் நூற்றாண்டைசேர்ந்த கரிகாற் சோழன் முக்கியமான அரசராக அறியப்படுகிறார். இவரது வடநாட்டுப்படையெடுப்பு பற்றி சிலப்பதிகாரத்திலும் சொல்லப்படுகிறது.

காவிரி ஆற்றின் கரைகளை உயர்த்திய பெருமையையும் இவர் பெற்றுள்ளார். பிற்கால சோழர்களில் ‘ராஜகேசரி அருள்மொழிவர்மன்’ என்ற இயற்பெயருடன் அரியணை ஏறி பின்னாளில் ‘ராஜராஜ சோழன்’ என்ற கீர்த்திப்பெயர் பெற்ற அரசரின் ஆட்சிக்காலமானது சோழர்களின் பொற்காலமாக வர்ணிக்கப்படுகிறது.

இவர் 985ம் ஆண்டு முதல் 1012ம் ஆண்டு வரை தஞ்சையை தலைநகராக கொண்டு சோழ நாட்டை ஆண்டுள்ளார். தமிழ் மண்ணில் கோயிற்கலை மரபின் உச்சபட்ச அடையாளமாக கருதப்படும் ‘தஞ்சை பெருவுடையார் கோயில்’ இவரால் கட்டுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு பின்பு வந்த ஆதித்த சோழன், பராந்த சோழன் மற்றும் முதலாம் ராஜேந்திர சோழன் போன்ற மன்னர்களும் சிறந்த ஆட்சியாளர்களாக திகழ்ந்திருக்கின்றனர்.

13ம் நூற்றாண்டில் பிற்காலச்சோழர்களின் வீழ்ச்சிக்குப்பிறகு தஞ்சாவூர் சோழ ராஜ்ஜியமானது பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்குள் வந்திருக்கிறது. அதையடுத்து 14ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மாலிக் கபூர் எனும் டெல்லி சுல்தான் படையால் சோழ ராஜ்ஜியமும் தஞ்சாவூரும் சூறையாடப்பட்டு சுல்தான் அரசுடன் சேர்க்கப்பட்டிருக்கிறது.

பின்னர் 14ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் விஜயநகர பேரரசின் ஆக்கிரமிப்பில் இப்பகுதி இருந்திருக்கிறது. 15 ம் நூற்றாண்டு வரை விஜயநகர பேரரசின் ஆதிக்கத்தில் இருந்த  தஞ்சாவூர் பகுதியை 16ம் நூற்றாண்டின் பாதியில் விஜயநகர அரசின் பிரதிநிதிகளாக விளங்கிய நாயக்க வம்சத்தினர் தனி ராஜ்ஜியமாக ஆளத்துவங்கினர். 

இவர்கள் காலத்தில் தஞ்சைப்பகுதி கலை மற்றும் இலக்கியத்தில் செழிப்படைய துவங்கியதாக சொல்லப்படுகிறது. பின்னர் 1673ம் ஆண்டு மதுரை நாயக்கர் வசம் சென்ற தஞ்சாவூர் பகுதியை மராட்டிய வம்சத்தினர் ஆக்கிரமித்து 1855ம் ஆண்டு வரை ஆண்டுள்ளனர்.

இந்த வம்சத்தை சேர்ந்த சரபோஜி ராஜா ஆங்கிலேயருடன் இணக்கமான உறவை கடைபிடித்து வரலாற்றில் முக்கியமான பெயராக அறியப்படுகிறார். கடைசியாக மராட்டிய வம்சத்திற்கு ஆண் வாரிசில்லாத ஒரு சூழலில் 1855ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் தஞ்சாவூர் நகரை மெட்ராஸ் பிரசிடென்சி மாகாணத்துடன் இணைத்துக்கொண்டனர்.

1871ம் ஆண்டுக்குரிய ஒரு கணக்கெடுப்பின்படி மெட்ராஸ் பிரசிடென்சியின் மூன்றாவது பெரிய நகரமாக தஞ்சாவூர் திகழ்ந்திருந்தது தெரியவருகிறது.

பயண வசதிகள்

காவிரிப்படுகைப்பகுதியில் வீற்றிருக்கும் தஞ்சாவூர் 36 ச.கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. சென்னை, திருச்சி, ஈரோடு, வேலூர், கொச்சி, ஊட்டி போன்ற நகரங்களோடு நல்ல சாலை வசதிகளால் இது இணைக்கப்பட்டிருக்கிறது.

நகரத்திற்குள் பயணிக்க அரசுப்போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் போன்ற நகரங்களிலிருந்து நவீன சொகுசுப்பேருந்து சேவைகளும் உள்ளன.

பருவநிலை

தமிழ்நாட்டின் எல்லா நகரங்களையும் போன்றே தஞ்சாவூர் நகரமும் உஷ்ணம் மற்றும் ஈரப்பதம் அதிகமாக காணப்படும் சூழலை கொண்டுள்ளது. தென்மேற்கு பருவ மழையை விடவும் வடகிழக்கு பருவமழைப்பருவம் இப்பகுதிக்கு அதிக மழைப்பொழிவை தருகிறது. மேலும் இப்பருவத்தில் காவிரி ஆற்றில் அதிக நீர் வரத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூரில் தங்கும் வசதிகள் ஏராளம் உள்ளன. மாநில அரசின் சுற்றுலாத்துறை மூலமாக சுற்றுலாப்பயணிகளுக்கு உதவும் அம்சங்களும் ஏராளம் உள்ளன. யாத்ரீகர்களும் பயணிகளும் தாம் விரும்பும் இடத்திற்கருகிலேயே தங்கிக்கொள்ளும் வகையில் பல தங்கும் விடுதிகள் பல்வேறு கட்டணங்களில் தஞ்சாவூரில் நிறைந்துள்ளன.

Please Wait while comments are loading...