மிசோரம் ஸ்டேட் மியூசியம் என்று அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் அய்சால் நகரத்தின் மையப்பகுதியிலேயே அமைந்திருக்கிறது. மிசோரம் மாநிலத்தின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் 2500 அரும்பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
இங்குள்ள ஒவ்வொரு பொருளும் மிசோரம் நாகரிகத்தோடு தொடர்புடைய பின்னணியை கொண்டிருக்கின்றன. முதலமைச்சர் மாளிகைக்கு அருகில் மக்டொனால்டு மலையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் 1977ம் ஆண்டு துவங்கப்பட்டிருக்கிறது.
புகைப்படங்கள் முதல் தொல்லியல் சான்றுகள் வரை பல்வேறு அரும்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் இயற்கை வரலாறு சார்ந்த தொல்லியல் சான்றுகள் போன்றவற்றையும் இங்கு பார்க்கலாம்.
மிசோ இனத்தைச்சேர்ந்த பல்வேறு பிரிவினரின் தனித்தன்மையான துணிவகைகள் இங்குள்ள பிரசித்தமான காட்சிப்பொருட்களாக விளங்குகின்றன. ஒரு சுவாரசியமான சுற்றுலா அம்சமாக வீற்றிருக்கும் இந்த அருங்காட்சியகம் வரலாற்று ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் இந்த மியூசியம் திறக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் இது மூடியிருக்கும். உள்ளூர் டாக்சிகள் மூலம் பயணிகள் இந்த அருங்காட்சியகத்திற்கு வரலாம்.