இம்பால் - காத்து நிற்கும் பசுமை மலைகள்!

வட கிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூரின் தலைநகரம் இம்பால் ஒரு சந்தடியில்லாத சிறு நகரமாகும். இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்கள் இந்தியாவிற்குள் படையெடுத்து வந்த போது இம்பால் முக்கியத்துவம் பெறத் துவங்கியது. இரண்டாம் உலப்போரின் வரலாற்றில் நடைபெற்ற இம்பால் போர் மற்றும் கோஹிமா போர் ஆகியவற்றின் போது தான் ஆக்ரோஷமான ஜப்பானிய படைகள் ஆசிய மண்ணில் முதன்முறையாக தோற்கடிக்கப்பட்டன. இந்த போரினால் இம்பால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் என பலரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், இம்பால் புதிய உத்வேகத்துடன், தன்னை மீண்டும் ஒரு புதிப்பொலிவு மிக்க நகரமாக உருவாக்கிக் கொண்டது.

இரண்டாம் உலகப்போரினால் முக்கியத்துவம் பெறுவதற்கு முன்னர், 1826-ம் ஆண்டிலிந்து மணிப்பூர் அரசரின் தலைநகரமாக இம்பால் இருந்து வந்தது.

ஆனால் இரண்டாம் உலகப்போருக்கு மிகவும் முன்னதாகவே 1891-ம் ஆண்டு நடந்த ஆங்கிலோ-மணிப்பூர் போரின் போது இம்பால் பிரிட்டிஷாரின் கவனத்திற்குரிய இடமாக மாறியது.

அந்த போரில் பிரிட்டிஷார், உள்ளூர் அரசரை வென்று விட்டனர். அதன் பிறகு இந்தியா சுதந்திரமடையும் வரையிலும் இம்பால் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது.

பிரிட்டிஷார் இந்த நகரத்தை கைப்பற்றிய பின்னர், இந்த இடத்தின் கேந்திரமான முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்த நகரத்திற்கு போதுமான முக்கியத்துவத்தை அளிக்கத் துவங்கினார்கள்.

எனவே தான், ஜப்பான் இராணுவத்தினர் இம்பாலை தாக்கிய போது, அந்த ஆக்ரோஷமான படையை முறியடிக்கும் பொருட்டாக பிரிட்டிஷார் தங்களுடைய இராணுவத்தையும், படைகளையும் வழங்கி இந்நகரத்தை காத்தனர்.

இம்பால் என்ற வார்த்தை 'பல்வேறு கிராமங்களையுடைய நிலப்பகுதி' என்று பொருள்படும் 'யும்பால்' என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இங்கே மலைகளை சமவெளிகளுடன் இணைக்கும் வகையில் இருக்கும் முடிவில்லாத நிலப்பகுதிகள் உங்களுக்கு மனம் மயக்கும் உணர்வுகளை கொடுக்கும்.

இதன் காரணமாகவே இம்பால் எந்த நாட்களிலும் அழகிய நகரமாக இருக்கிறது. இம்பாலை சுற்றியிருக்கும் இந்த பசுமையான மலைகள் தான் அதனை அரண் போல காத்து நிற்கின்றன.

இந்த தலைநகரத்தை சுற்றியிருக்கும் மலைகளை இம்பால், சேக்மே, இரில், தௌபல் மற்றும் குகா போன்ற சில நதிகளும் கடந்து செல்கின்றன. இந்த நகரத்தில் நிறைந்திருக்கும் பலாப்பழ மற்றும் பைன் மரங்கள் அதன் அழகுக்கு மெருகேற்றுகின்றன. இம்பால் அதன் கானகங்களின் அழகிற்காகவே பெரும்பாலும் அறியப்படும் நகரமாக இருக்கிறது.

இம்பால் நகரம் கோவில்கள், பழமையான மற்றும் வரலாற்று நினைவுச்சின்னங்கள் நிரம்பியிருப்பதால் அது வரலாற்று ஆய்வாளர்களை கவர்ந்திழுக்கும் இடமாக உள்ளது. இம்பாலில் உள்ள போர் நினைவுச்சின்னங்கள் அவற்றில் முக்கியமானவையாகும்.

இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள முதன்மையான இன மக்களாக மெய்ட்டிஸ் இனத்தினர் உள்ளனர் மற்றும் இதர மலைவாழின மக்கள் அவர்கள் வருவதற்கு முன்னர் சில தலைமுறைகளாக வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

பாமன்ஸ் என்று அழைக்கப்படும் மணிப்புரி பிராமணர்கள், பங்கன் மற்றும் மணிப்புரி முஸ்லீம்களும் இம்பால் நகரத்தில் வாழந்து வருகின்றனர். காபுய், டாங்குல் மற்றும் பைய்ட் என்ற  மலைவாழின மக்களும் இங்கே வசித்து வருகின்றனர்.

நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் இடம் பெயர்ந்து வந்தவர்கள் குடியேறியுள்ளதால் இம்பாலில் மார்வாரி, பஞ்சாபி, பீகாரி மற்றும் பெங்கால் மக்களும் உள்ளனர், ஆனால் அவர்களுடைய எண்ணிக்கை தற்போது வேகமாக குறைந்து வருகிறது.

மெய்டெய்லன் அல்லது மணிப்புரியை முதன்மையான மொழியாக கொண்டிருக்கும் இம்பாலில் ஆங்கிலம், இந்தி, திபெத்திய மற்றும் பர்மிய மொழிகளும் பேசப்பட்டு வருகின்றன.

இம்பாலில் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள் பலவும் உள்ளன. இம்பாலில் சுற்றுலா பயணிகளால் அதிகமாக பார்க்கப்பட்ட இடமாக இருக்கும் காங்லா கோட்டை 2004-ம் ஆண்டு வரையிலும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப்பிரிவின் கீழ் இருந்து வந்தது.

பின்னர் பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் முறையாக இந்த கோட்டையை மாநில அரசாங்கத்தின் பொறுப்பிற்கு கொடுத்தார். காங்லா என்ற வார்த்தைக்கு மெய்ட்டி மொழியில் 'வறண்ட இடம்' என்று பொருள், இது இம்பால் நதிக்கரையில் உள்ளது.

இம்பாலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் க்வய்ரம்பான்ட் பஜாருக்கு ஒரு முறை சென்று வர வேண்டும். சுருக்கமாக 'இமா கெய்தெல்' என்று அழைக்கப்படும் இந்த தனித்தன்மை வாய்ந்த பஜாரை முழுக்க முழுக்க பெண்களே நடத்தி வருகின்றனர். 'இமா கெய்தெல்' என்ற வார்த்தைக்கு 'தாய்மார்கள் சந்தை (Mother Market)' என்று பொருளாகும்.

உலகத்திலேயே மிகவும் பழமையான போலோ விளையாட்டு மைதானத்தை கொண்டிருக்கும் இம்பாலில் உள்ள போலோ விளையாட்டு மைதனங்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்களாகும்.

மணிப்பூரின் தொல்பொருட்கள் மற்றும் வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள், இவற்றையெல்லாம் தேக்கி வைத்திருக்கும் மணிப்பூர் மாநில அருங்காட்சியகத்திற்கு செல்ல வேண்டும்.

இம்பாலுக்கு வெளியில் பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலா தலங்களாக கெய்புல் லாம்ஜாவோ தேசிய பூங்கா, மோய்ரங், அன்ட்ரோ, செக்டா ஆகியவற்றை சொல்லலாம்.

Please Wait while comments are loading...