மத்தியப் பிரதேச மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத்தை உலகிற்கு உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப் பட்ட இடம் தான் பிர்லா மியூசியம். இந்த மியூசியத்தில் மத்தியப் பிரதேசத்தின் வரலாற்றையும் அறிய உதவும் கலை மற்றும் தொல்பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன.
போபாலின் முக்கியமான அருங்காட்சியகங்களில் ஒன்றாக இருக்கும் இந்த இடம், முக்கியமான சுற்றுலா தலமாகவும் உள்ளது. மத்தியப் பிரதேசத்தின் வரலாற்றுக்கு முந்தைகாலம் மற்றும் பழைய கற்காலம் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு கலைப்பொருட்களைக் கொண்டுள்ள இடமாக இந்த அருங்காட்சியகம் உள்ளது.
இங்கிருக்கும் பழைய கற்காலம் மற்றும்புதிய கற்காலத்தைச் சேர்ந்த கருவிகளை காணும் வரலாற்று ஆய்வாளர்கள் மிகவும் ஆச்சரியப்படுவார்கள். 7-ம் நூற்றாண்டு முதல் 13-ம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த பல்வேறு கற்சிற்பங்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.
கி.மு. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படும் நாணயங்களும் கண்டறியப்பட்டு இந்த மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களை ஆச்சரியத்தில் வாயைப் பிளக்க வைக்கும் பிம்பெட்கா கற்குகைகளின் அளவீட்டு மாதிரி ஒன்றும் இந்த மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.