பித்தூர் - இராமாயணம் இயற்றப்பட்ட இடம்!

உத்திரபிரதேச மாநிலத்தில், கான்பூரில் இருந்து சுமார் 22 கிமீ தொலைவில், கங்கை நதிக்கரையில் அமைந்திருக்கும் இயற்கை எழில் பொங்கும் அழகிய நகரம் பித்தூர். கான்பூரின் நெரிசலான வேகமான நகர வாழ்க்கைக்கு மாற்றாக, பித்தூர் மனதிற்கு அமைதியையும், சந்தோஷத்தையும் தரும் அழகிய இடம். இந்துக்களின் ஆன்மீக சுற்றுலாத்தலமாக திகழும் பித்தூர், பல வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை கொண்டது.

பித்தூரின் வரலாறும், புராணமும்!

புராணங்களிலும், பழங்கால கதைகளிலும் பித்தூர் பற்றிய சிறப்பு குறிப்புகள் பல உள்ளன. பகவான் விஷ்ணு, அண்ட சராசரத்தையும் அழித்து, பின் மனித உயிர்களை உருவாக்கி, அஸ்வமேத யாகத்தை நிறைவு செய்தார் என சொல்கின்றன புராணங்கள்.

இதனைச் செய்ய அவர் தேர்ந்தெடுத்த இடம் பித்தூர்.  இந்த வரலாற்று நிகழ்வுகளின் காரணமாக பிரம்மவர்த்தா என்று பெயரில் இருந்த ஊர், காலப்போக்கில் மருவி பித்தூர் என்றானது. பிறகு உத்தன்பத மகராஜர் காலத்தில் செழிப்புடன் வளர்ந்தது பித்தூர். அதன் பிறகு அரசரின் மகன் துருவர், பிரம்ம தேவனுக்காக இங்கு கடும் தவம் புரிந்திருக்கிறார்.

இராமாயணத்துடன் மிகவும் நெருக்கமான தொடர்புடைய ஊர் பித்தூர். இராவணினிடம் இருந்து மீட்ட சீதையை, நாட்டு மக்களின் எண்ணங்களுக்கு இசைவு கொடுத்து ஏற்க மறுக்கிறார் இராமபிரான்.

இந்தச் சம்பவம் பித்தூரில் நடைபெற்றதாகக் கூறுகிறது இராமாயணம். மேலும், வால்மீகி மகாரிஷி, இங்கு தான் இராமாயண காவியத்தை எழுதினார் என்பதும் வரலாறு.

இதுமட்டுமல்லாமல், லவன், குசன் என இரு மகன்களை சீதாதேவி ஈன்றெடுத்தது பித்தூரில் தான் என்று நம்பப்படுகிறது. வால்மீகியின் குருகுலத்தில் இலக்கியம், போர், அரசியல் போன்ற ஞானத்தை இவர்கள் பெற்றனர்.

லவன், குசன் இருவரும் இராமபிரானிடம் ஒன்று சேர்ந்ததும் இங்குதான். இப்படி இராமபிரான் தொடர்பான முக்கிய நிகழ்வுகளைக் கொண்ட ஊர் என்பதால் பித்தூருக்கு ராமேல் என்றும் பெயர் உண்டு.

இது போல பித்தூர் குறித்து பல புராண கூற்றுக்கள் உண்டு. துருவர் எனும் துறவி, பிரம்மனிடம் சாகா வரம் பெற்று, வானில் துருவ நட்சத்திரமாக மின்னுவதாக புராணங்கள் கூறுகின்றன.

நவீன யுகத்தில் பித்தூர்!

வரலாற்று நாயகர்களையும், சுதந்திரப்போராட்ட வீரர்களையும் ஈன்ற மண் பித்தூர். ஜான்சி ராணி எனும் ராணி லக்ஷ்மி பாய் பிறந்த ஊர் பித்தூர். சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய சாகிப் பேஷ்வா பிறந்ததும் இங்கே தான்.

இவ்விருவரும் தங்களின் இளமைக்காலங்களில் இங்கு தான் போர், அரசியல் தந்திரம் போன்ற யுக்திகளைப் பயின்று, சிறந்த வீரர்களாக உருவெடுத்தனர். இதன் விளைவாக 1857 இல் ஏற்பட்ட சிப்பாய் கலகத்தில் நாட்டின் சுதந்திரத்திற்காக பெரும் பங்காற்றினார்கள்.

பித்தூரைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

பித்தூர் வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் மட்டும் அல்ல, எழில் கொஞ்சும் இயற்கைக் காட்சிகளைக் கொண்ட அழகிய இடம். படகுகளில் பயணிப்பது, கோவிலின் அமைதியை அனுபவிப்பது என பித்தூரில் ரசிக்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன.

ராமாயணத்தை இயற்றிய வால்மீகி மகரஷியின் ஆஷ்ரமம் இங்கு தான் உள்ளது. பித்தூரின் புனித இடங்களில் ஒன்றான பிரம்மகாட்டை தரிசிக்க பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். மற்றொரு புனித இடமான பத்தார்காட்டிலும் பக்தர்கள் கூட்டத்தை பார்க்கலாம்.

துருவ மகராஜன் தன் குழந்தைப் பருவத்தில் ஒற்றைகாலில் தவம் இருந்த இடம் துருவ தீலா என்பதாகும். இதனைத் தவிர பித்தூரில், ஜஹாங்கீர் மசூதி, ஹரிதாம் ஆஸ்ரமம், ராம்ஜானகி கோவில், லவ குசா கோவில் மற்றும் நானே சாகேப் ஸ்மாரக் போன்றவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களாகும்.

இந்துக்களின் ஆன்மீகத் தலமான பித்தூரில் திருவிழாக்களுக்கும், கண்காட்சிகளுக்கும் குறைவே இல்லை. கார்த்திகை பௌர்ணமி, மகா பௌர்ணமி மற்றும் மகர சங்கராந்தி போன்ற சமயங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி இங்கு புனித நீராடி மகிழ்கின்றனர்.

Please Wait while comments are loading...