இமாச்சல பிரதேசத்தின் அழகின் அழகாக விளங்கும் தர்மஷாலா மனதை மயக்கும் ஒரு மலை வாசஸ்தலமாகும். இப்படி ஒரு அழகான இடத்தைப் பற்றி இங்கு படிப்பவர்கள், இதை படித்தவுடன் இன்றே இவ்விடத்தைக் காணக் கிளம்பிவிடுவர். மனதை சொக்க வைக்கும் பல அழகிய இடங்களைக் கொண்ட இவ்விடத்தைக் காண கண் கோடி வேண்டும். பிறந்த பயனை அனுபவிக்க மனிதர்களாகிய நாம் ஒருமுறையாவது இங்கு சென்று வர வேண்டும். சுற்றுலா செல்ல விருப்பமுடைய அனைவருமே காண வேண்டிய இடமான இவ்விடத்தைப் பற்றி பல அரிய மற்றும் சிறந்த தகவல்களை நாம் இங்கு காண்போமா
காங்க்ராவின் வடகிழக்கே 27 km தொலைவில் உள்ளது தர்மஷாலா. இமாச்சல பிரதேசத்தின் குறிப்பிடத்தக்க மலை வாசஸ்தலமாக விளங்கும் இத்தலம், சண்டிகரிலிருந்து 251 km தொலைவிலும், மணாலியிலிருந்து 243 km தொலைவிலும், சிம்லாவிலிருந்து 247 km தொலைவிலும், புதுதில்லியிலிருந்து 496 km தொலைவிலும் உள்ளது.
காங்க்ரா பள்ளத்தாக்கின் நுழைவு வழியாக கருதப்படும் இந்த இடம், எங்கு பார்த்தாலும் வியப்பை ஏற்படுத்தும் அழகைக் கொண்டுள்ளது. தௌலதர் மலைத்தொடர்கள் இதன் பின்னணியிலிருந்து இதன் கண்ணுக்கினிய அழகை மேலும் அதிகப் படுத்துகிறது. என் மனம் இங்கு பிரமிப்பில் உறைந்து நிற்கிறது. அடடா, என்ன அழகு. சொல்ல வார்த்தைகளே இல்லை.
காங்க்ரா பள்ளத்தாக்கின் முக்கிய நகரமாக விளங்கும் இவ்விடத்தில் 1905 ஆம் வருடம் ஒரு நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. அது இவ்விடத்தை பேரழிவுக்குள்ளாக்கியது. அதன் பின்னர் புனரமைப்பு செய்யப்பட்டு, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் ஒரு அழகிய மலை வாசஸ்தலமாக மாற்றப்பட்டது.
அப்பர் மற்றும் லோயர் தர்மஷாலாவாக நகரம் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. லோயர் தர்மஷாலா ஒரு வணிக மையமாகவும், அப்பர் தர்மஷாலா அதனது முந்தைய காலனித்துவ வாழ்க்கை முறையையும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. மெக்லியோட்கஞ்ச் மற்றும் ஃபார்சித்கஞ்ச் போன்ற பகுதிகள் பிரிட்டிஷ் புறநகரின் பிரதிநிதித்துவத்தை காட்டுகிறது.
தர்மஷாலாவின் பெரும்பான்மை பகுதிகள் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் இருப்பதோடு, இக்காடுகளில் நீங்கள் ஓக் மற்றும் ஊசியிலை மரங்களைக் காணலாம். மூன்று பக்கங்களிலும் தௌலதர் மலைத் தொடர்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது.
இங்கிருந்து காங்க்ரா பள்ளத்தாக்கின் மனதை மயக்கும் காட்சிகளைக் நாம் காணலாம். மேலும் இங்கு இவ்விடத்தின் கலை மற்றும் கலாச்சாரத்தின் தடயங்களை இங்குள்ள காங்க்ரா அருங்காட்சியகத்தில் காணலாம். அரியவகை சிற்பங்கள், ஓவியங்கள், நாணயங்கள், மண்பாண்டங்கள், ஆபரணங்கள், சுவடிகள், அரசருக்குரிய ஆடை மற்றும் ஆபரணங்கள் போன்றவற்றோடு விலைமதிப்பற்ற ஐந்தாம் நூற்றாண்டின் கலைப் பொருட்களையும் இங்கு காணலாம்.
சர்வதேச அளவில் அறியப்பட்டுள்ள தர்மஷாலா "இந்தியாவின் லிட்டில் லாசா" என்று மதிப்புடன் அழைக்கப்படுகிறது. தலாய் லாமா 1960 ஆம் ஆண்டு தன்னுடைய வனவாசத்தின் போது இந்த அழகிய இடத்தை தனது தற்காலிக உறைவிடமாக ஏற்படுத்திக் கொண்டார். பரந்த திபெத்திய குடியேற்றங்கள் காரணமாக இவ்விடம் தற்போது 'லாமாக்களின் பூமி' என்றழைக்கப்படுகிறது.
மெக்லியோட்கஞ்ச் குறிப்பிடத்தக்க மத மையங்களின் பகுதியாக உள்ளது. இவ்விடத்தில் திபெத்திய புத்த கல்வி போதிக்கப்படுகிறது. மேலும், அம்மதத்தின் வளர்ச்சிக்கான பணிகளும் இங்கு நடந்து கொண்டிருக்கிறது.
பல்வேறு மடங்கள், கல்வி மையங்கள், இந்து மற்றும் ஜெயின் மத கோயில்கள் இங்கு உள்ளன. இவ்விடத்தை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள், இங்குள்ள மெக்லியோட்கஞ்ச் சந்தையில் உள்ளூர் நினைவுச் சின்னங்களான அழகிய திபெத்திய கைவினைப் பொருட்கள், ஆடை வகைகள் மற்றும் தங்கா எனப்படும் ஒரு வகை திபெத்திய ஓவியங்கள் போன்றவற்றை வாங்கலாம்.
இங்கு பல தேவாலயங்கள், கோயில்கள், அருங்காட்சியங்கம், மற்றும் மடாலயங்கள் உள்ளன. மிகப் பழமையான ஜுவாலாமுஹி கோயில், ப்ரிஜேஸ்வரி கோயில் மற்றும் சாமுண்டா கோயில் ஆகிய கோயில்கள் பெரும் எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
காங்க்ரா அருங்காட்சியகம், செயின்ட் ஜான் தேவாலயம் மற்றும் போர் நினைவுச்சின்னம் போன்றவை சுற்றுலாப்பயணியர் காணும் குறிப்பிடத்தகுந்த இடமாகும். இது தவிர கோட்வலி பஜார் என்ற புகழ் பெற்ற வணிக மையம் பல பார்வையாளர்களை ஈர்க்கிறது. மேலும் தேயிலைத் தோட்டங்கள், பைன் காடுகள் மற்றும் தேவதாரு மரங்கள் இவ்விடத்திற்கு கூடுதல் ஈர்ப்பைச் சேர்க்கிறது.
தர்மஷாலாவிற்கு மிக அருகில் 15 km தொலைவில் அமைந்துள்ள விமான தளமாக கக்கல் விமான நிலையம் (gaggal airport) உள்ளது. இது காங்க்ரா பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
இந்த விமான நிலையம் உள்நாட்டு விமானங்கள் மூலம் புதுதில்லியை இணைக்கிறது. அதனால் வெளிநாடுவாழ் மக்கள் புதுதில்லி வந்து, அங்கிருந்து இவ்விடத்திற்கு வரலாம்.
தர்மஷாலாவிலிருந்து மிக அருகில் உள்ள ரயில் நிலையமாக, 22 km தொலைவில் உள்ள கங்கிரா மந்திர் உள்ளது. எனினும், இது சிறிய ரயில் நிலையம் என்பதால், அனைத்து வண்டிகளும் இங்கு நிற்பதில்லை.
பதான்கோட், தர்மஷாலாவிலிருந்து 85 km தொலைவில் உள்ள முக்கிய ரயில் நிலையமாகும். இந்தியாவின் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களில் இருந்தும் ரயில்கள் இங்கு வந்து செல்கின்றன. சாலை மூலமாக வர விரும்பும் பயணியர்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் தர்மஷாலாவிற்கு அருகிலுள்ள நகரங்களில் இருந்து இங்கு வரலாம்.
மார்ச் முதல் ஜூன் வரை இங்கு கோடை காலமாகும். இக்காலத்தில் இங்குள்ள வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையான அளவுகளில் இருக்கிறது.
இதமான காலநிலை காரணமாக, இந்த சீசனில் மலையேறுதலை விரும்பும் சாகசக்காரர்களுக்கு, இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். பருவமழைக் காலத்தில் இங்கு கடுமையாக மழை பொழிவதால் பயணியர்கள் எவரும் இக்காலத்தில் இங்கு வர விரும்ப மாட்டார்கள்.
குளிர் காலத்தில் இங்கு மிகவும் குளிராக இருக்கும். வெப்ப நிலை - 4 டிகிரிக்கும் கீழே செல்லும். அதனால் பாதைகள் சரியாக தெரியாது. மேலும் சாலைகளும் மூடப்பட்டுவிடும். சுற்றுலா பயணிகள் செப்டம்பர் மற்றும் ஜூன் மாதங்களில் இவ்விடத்திற்கு வர திட்டமிடலாம்.



Click it and Unblock the Notifications