தியூ கோட்டை, தியூ

போர்த்துகீசிய கோட்டை என்றும் அழைக்கப்படும் இந்த தியூ கோட்டையானது 1535ம் ஆண்டு மற்றும் 1541ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. 1400ம் ஆண்டில் ஒரு அராபிய கவர்னரால் கட்டப்பட்ட கோட்டையின் சிதிலங்களின் மீது இது எழுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது.

போர்த்துகீசிய காலனி ஆட்சியாளர்கள் மற்றும் குஜராத் சுல்தான் பஹதூர் ஷா ஆகியோர் கூட்டாக இந்த கோட்டையை அமைத்துள்ளனர். முகலாய பேரரசர் ஹுமாயுன் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு முயற்சிகளை தடுக்கும் நோக்கத்துடன் இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது.

29 மீட்டர் உயரமுள்ள இந்த கோட்டையானது ஃபோர்ட் ரோட் சாலையின் இறுதியில் கடற்கரையை ஒட்டியவாறு அமைந்துள்ளது. மூன்று புறங்களில் கடற்பகுதியையும் நான்காவதில் ஒரு கால்வாய் அமைப்பையும் எல்லைகளாக இந்த கோட்டை கொண்டுள்ளது.

இரண்டு பிரம்மாண்டமான சுற்றுச்சுவர்கள் இந்த கோட்டையை சூழ்ந்துள்ளன. வெளிப்புற சுவர் கடற்கரையை ஒட்டியவாறு அமைந்துள்ளது. அதனை அடுத்து காவல் அரண் அமைப்புகளுடன் அடுத்த சுவர் அமைப்பு காணப்படுகிறது.

இதில் பீரங்கி பொருத்துவதற்கான அமைப்புகள் உள்ளன. இவற்றோடு இரண்டு அகழி அமைப்புகளையும் இந்த கோட்டை கொண்டிருக்கிறது. முதல் அகழி கடல் அகழி அமைப்பாகவும் இரண்டாவது அகழி இரண்டு சுற்றுச்சுவர்களுக்கு இடையே மணற்பாறைக்கற்களால் அமைக்கப்பட்டதாகவும் காணப்படுகிறது.

இந்த கோட்டை வளாகத்துக்குள் மலர்த்தோட்ட பூங்கா, பீரங்கிகள் வரிசையாக அணிவகுத்திருக்கும் நடைபாதை அமைப்புகள், ஒரு சிறைச்சாலை மற்றும் கலங்கரை விளக்கம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. அகண்ட அரபிக்கடல் நீர்ப்பரப்பையும் சுற்றியுள்ள நிலப்பகுதிகளையும் இந்த கோட்டையிலிருந்து நன்றாக பார்த்து ரசிக்கலாம்.

Please Wait while comments are loading...