நகோவா பீச், தியூ

புச்சார்வாடா கிராமத்தில் உள்ள நகோவா எனும் மீனவக்குடியிருப்பு பகுதியில் அமைந்திருப்பதால் அப்பெயரே இந்த கடற்கரைக்கும் வழங்கப்படுகிறது. தியூ நகரத்திலிருந்து 20 நிமிட நேரப்பயணத்தில் இந்த கடற்கரைக்கு வந்து சேரலாம்.

அரை வட்ட வடிவில் ஒரு குதிரை லாடம் போன்ற வடிவத்தில் இந்த கடற்கரை அமைந்திருக்கிறது. இதன் ஒரு முனையிலிருந்து மறு முனை வரையிலான தூரம் 2.5 கி.மீ ஆக உள்ளது.

வசிப்பிடங்களிலிருந்து விலகி தனிமையான பிரதேசத்தில் அமைந்திருப்பதால் இந்த கடற்கரை நிசப்தம் தவழும் இயற்கை அழகுடன் காட்சியளிக்கிறது.

மன அழுத்தங்கள் நிறைந்த அன்றாட நகர வாழ்க்கையிலிருந்து விலகி ஒரு அமைதியான இயற்கை ஸ்தலத்தில் பொழுதை கழிக்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் பொருத்தமான இடம்.

தனிமை மட்டுமல்லாமல் தூய்மையுடனும் பொலிவுடனும் காட்சியளிப்பது இந்த கடற்கரையின் தனிச்சிறப்பு. மேலும், கடற்கரையை சுற்றிலும் காணப்படும் ஹொக்கா பனை மரங்கள் காற்றில் அசைந்தாடியபடி இந்த சூழலுக்கு மேலும் ஒரு கவித்துவமான அழகை அளிக்கின்றன.

அதிக வேகம் இல்லாமல் மெதுவாக கரையை தொடும் அலைகள் முதல் பார்வையிலேயே பார்வையாளர்கள் மனதை கவர்கின்றன. அலை நீரில் நீந்தி குதித்து விளையாடும்போது மனக்கசடுகள் யாவும் அகன்று புதிதாய் பிறந்த உணர்வு ஏற்படுவதை உணரமுடியும். நீச்சல் மற்றும் நீர் விளையாட்டுகளில் ஈடுபட இந்த கடற்கரை மிகவும் பாதுகாப்பான ஒன்று.

சாகச பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபட விரும்புபவர்கள் மிதவைச்சவாரி, படகுச்சவாரி, நீர்ச்சறுக்கு போன்ற சாகச நீர் விளையாட்டுகளில் ஈடுபடலாம்.

நீச்சல் மற்றும் சாகச பொழுதுபோக்குகளில் ஈடுபட விரும்பாத அமைதி விரும்பிகள் மிருதுவான ஈர மணலில் நடந்தபடியோ கடற்கரையோர பனை மர நிழல்களில் ஓய்வெடுத்தபடியோ கடற்கரை எழிலை கண்களால் அள்ளிப்பருகலாம்.

Please Wait while comments are loading...