தியூ – எங்கும் கடல் மணற்பரப்பு!

தியூ எனும் எனும் இந்த சிறு தீவு குஜராத் மாநில சௌராஷ்டிரா (கத்தியவாட்) தீபகற்ப பகுதியின் தென்முனையில் வீற்றிருக்கிறது. ரம்மியமான தென்னை மரங்கள் பின்னணியில் அணிவகுத்திருக்க, அரபிக்கடலின் அழகிய மணற்கடற்கரைகளை கொண்ட இந்த தீவு ஒரு சொர்க்கபுரி போன்று இயற்கை எழிலுடன் காட்சியளிக்கிறது.

புராதன காலத்திலும் வரலாற்று காலத்திலும் இந்த தியூ தீவு பல மன்னர்கள் மற்றும் ராஜ வம்சங்களால் ஆளப்பட்டு வந்திருக்கிறது. பின்னர் போர்த்துகீசிய குடியிருப்புப்பகுதியாக மாறிய இந்த தீவு 1961ம் ஆண்டில் கோவாவுடன் சேர்த்து யூனியன் பிரதேசமாக இந்தியா குடியரசுடன் இணைக்கப்பட்டது.

1987ம் ஆண்டு கோவாவிலிருந்து பிரிக்கப்பட்டு தமன் மற்றும் தியூ யூனியன் பிரதேசம் என்ற புதிய யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டிருக்கிறது.

தியூ’வில் பார்த்து ரசிக்க வேண்டிய அம்சங்கள்

பரபரப்பில்லாத அமைதிச்சூழலையும், மணற்பரப்பு, சூரியன், கடலலைகள் என்று இயற்கை கவர்ச்சியையும் கொண்டிருக்கும் இந்த தியூ நகரம் இந்தியாவில் ஒரு முக்கியமான கடற்கரை சுற்றுலாஸ்தலமாக பிரபல்யமடைந்து வருகிறது.

மனித ஆக்கிரமிப்புகள் ஏதும் இல்லாததால் தூய்மையான இயற்கை அழகுடன் காட்சியளிக்கும் கடற்கரைகளை பெற்றிருக்கும் தியூ தீவுப்பகுதி இது போன்ற வித்தியாசமான எழிற்பிரதேசங்களை தேடுவோர்க்கு மிகவும் ஏற்றது.

நகோவா பீச் எனும் கடற்கரைப்பகுதி இங்கு பிரசித்தமான கடற்கரையாக உள்ளது. இது தியூ’விலிருந்து 20 நிமிடப்பயணத்தில் அமைந்துள்ளது. அரை வட்ட வடிவில் அமைந்திருக்கும் இந்த கடற்கரைப்பகுதி குதிரை லாடம் போன்று காட்சியளிக்கிறது.

நீச்சல் விளையாட்டுக்கு ஏற்ற இந்த கடற்கரையில் மிதவைச்சவாரி, படகுச்சவாரி, நீர்ச்சறுக்கு போன்ற இதர சாகசப்பொழுதுபோக்குகளிலும் ஈடுபடலாம்.

கோக்லா எனும் கிராமத்தில் அமைந்திருக்கும் கோக்லா பீச் கடற்கரை மிகப்பெரியதாகவும், அமைதியான சூழலுடனும், இயற்கை எழிலுடனும் காட்சியளிக்கிறது. நீச்சல், பாராசெயிலிங், சர்ஃபிங் மற்றும் இதர சாகச நீர் விளையாட்டுகளுக்கு இது மிகவும் ஏற்றது.

தியூ நகரத்திலிருந்து 1 கி.மீ தூரத்திலுள்ள ஜலந்தர் பீச் எனும் கடற்கரையும் மற்றொரு முக்கியமான கடற்கரையாக பிரசித்தி பெற்றுள்ளது. ஒரு புராணிக அசுரகணத்தின் பெயரால் அழைக்கப்படும் இந்த கடற்கரைப்பகுதியில் அந்த அசுரகணத்திற்கான கோயில் ஒன்றும் ஒரு மலைமீது அமைக்கப்பட்டிருக்கிறது.அழகு மற்றும் அமைதி ஆகிய அம்சங்களை கொண்டதாக இந்த கடற்கரைப்பகுதி காட்சியளிக்கிறது.

தியூ நகரத்தில் கோயில்கள் மற்றும் தேவாலயங்கள் போன்றனவும் நிரம்பியிருக்கின்றன. சிவனுக்காக அமைக்கப்பட்டிருக்கும் கங்கேஷ்வர் கோயில் இவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று.

இது தியூ நகரத்திலிருந்து 1 கி.மீ தூரத்திலுள்ள ஃபதும் எனும் கிராமத்தில் உள்ளது. செயிண்ட் பால் சர்ச் மற்றும் தியூ பகுதியிலேயே மிகப்பழமையான சர்ச் ஆஃப் செயிண்ட் ஃப்ரான்சிஸ் ஆஃப் அசிஸி ஆகியவை இங்குள்ள முக்கிய தேவாலயங்களாகும்.

1598ம் ஆண்டில் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட செயிண்ட் தாமஸ் சர்ச் எனும் மற்றொரு தேவாலயமும் பார்க்க வேண்டிய ஒன்று.

தியூ நகரத்தில் சுவாரசியமான அருங்காட்சியகங்களும் அமைந்திருக்கின்றன. இவற்றில் சீ ஷெல் மியூசியம் எனும் கடற்சிப்பி அருங்காட்சியகம் குறிப்பிடத்தக்க ஒன்று.

தியூ கோட்டை மற்றும் பனி கொத்தா கோட்டை போன்ற பழமையான கட்டிடச்சின்னங்களும் தியூ நகர விஜயத்தின்போது தவறவிடக்கூடாத வரலாற்றுச்சின்னங்களாகும்.

Please Wait while comments are loading...