தமன் - எழிற்கடற்கரைகளில் ஓர் கனவுப்பயணம்

தமன் என்றழைக்கப்படும் இந்த நகரம் 450 வருடங்களுக்கும் மேலாக கோவா மற்றும் தாத்ரா & நகர் ஹவேலி ஆகிய பிரதேசங்களுடன் சேர்ந்து ஒரு போர்த்துகீசிய ஆட்சிப்பகுதியாக இருந்து வந்தது. 1961ம் ஆண்டு டிசம்பர் 19ம் நாள் இந்த தமன் நகரம் அரபிக்கடலை ஒட்டிய இதர போர்த்துகீசிய பிரதேசங்களுடன் சேர்த்து இந்தியக்குடியரசுடன் இணைக்கப்பட்டது. இருப்பினும் போர்ச்சுகல் நாடு இந்த அதிகாரபூர்வ இணைப்பை 1974ம் ஆண்டுவரை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1987ம் ஆண்டில் கோவா தனி மாநில அந்தஸ்து பெறும் வரை கோவா, தமன் மற்றும் தியூ ஆகிய மூன்று பகுதிகளும் ஒரே யூனியன் பிரதேசமாக இருந்து வந்தன.

அதன் பிறகு தமன் மற்றும் தியூ பகுதிகள் தனி யூனியன் பிரதேசமாக இருந்து வருகின்றன. தமன் மற்றும் தியூ ஆகிய இரண்டு நகர்ப்பகுதிகளும் 10 கி.மீ இடைவெளியில் அமைந்திருக்கின்றன.

பலகாலமாகவே தமன் நகரம் பல்வேறு இனத்தார்கள் சேர்ந்து வாழும் ஒரு தனித்தன்மை வாய்ந்த கலாச்சார நகரமாக இருந்து வருகிறது. அமைதி நிலவும் ஒரு இயற்கை சொர்க்கமாக வீற்றிருக்கும் இந்த தமன் நகரம் அரபிக்கடலை ஒட்டி 12.5 கி.மீ நீளமுடைய கடற்கரையை பெற்றிருக்கிறது.

பரபரப்பு ஏதுமற்ற இயற்கை அமைதிச்சூழல் மற்றும் உபசரிப்பு குணம் கொண்ட உள்ளூர் மக்கள் போன்ற அம்சங்களால் இது சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்திழுக்கிறது. தமன்கங்கா ஆறு தமன் நகரத்தை மோதி தமன் (பெரிய தமன்) மற்றும் நனி தமன் (சிறிய தமன்) என்று இரு பகுதிகளாக பிரிக்கிறது.

தமன் நகரத்தின் சுற்றுலா சிறப்பம்சங்கள்

இயற்கை ரசிகர்களுக்கு இந்த தமன் நகரம் ஒரு சொர்க்கபுரியாகவே காட்சியளிக்கிறது. அரபிக்கடலை ஒட்டிய பிரம்மாண்டமான கடற்கரையை பெற்றிருப்பதால் கடற்கரையின் அமைதியை தேடுபவர்களுக்கு இது மிகவும் பிடித்தமான ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.

ரம்மியமான சவுக்கு தோப்புகளுடன் சந்தடி ஏதும் இல்லாமல் அமைந்திருக்கும் ஜம்போர் பீச் எனும் கடற்கரை அன்றாட வாழ்க்கையின் நெருக்கடிகளிலிருந்து சற்றே விலகி ஏகாந்தமாக விடுமுறைப்பொழுதைக் கழிக்க ஏற்ற இடமாகும்.

நனி தமன் பகுதியிலிருந்து 3 மைல் தொலைவிலுள்ள தேவிகா பீச் நீச்சலுக்கேற்ற கடற்கரைப்பகுதியாகும். அலைகள் குறைவாக இருக்கும்போது இந்த கடற்கரையில் சிப்பிகள் மற்றும் சங்குகள் போன்றவற்றை பொறுக்கலாம்.

தமன் நகரத்தில் சில வித்தியாசமான பொழுதுபோக்குப் பூங்காக்களும் அமைந்துள்ளன அவற்றில் ஒன்று தேவிகா பீச் கடற்கரையில் உள்ளது.

‘மீராசோல் ரிசார்ட் அன்ட் வாட்டர் பார்க்’ தமன் யூனியன் பிரதேசத்தில் கடையா எனும் கிராமத்திற்கு அருகில் உள்ளது. இந்த வளாகத்தில் ஒரு ரம்மியமான ஏரி மற்றும் ஒரு பாலத்தின் மூலம் இணைக்கப்பட்டு அமைந்துள்ள இரண்டு அழகிய தீவுகள் ஆகியவை அமைந்துள்ளன.

குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் விரும்பக்கூடிய அம்சங்கள் இங்கு நிறைந்துள்ளன. வைபவ் பார்க் எனப்படும் நீர் விளையாட்டு பொழுதுபோக்கு பூங்காவும் தமன் நகரத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் கண்ட வாப்பி சாலையில் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இந்த பூங்காவில் சிக்கூ, தென்னை மற்றும் மாந்தோப்புகள் போன்றவை இயற்கை வனப்புடன் காட்சியளிக்கின்றன. 36 வகையான நீர்விளையாட்டு சவாரி அமைப்புகளை இந்த பூங்கா கொண்டுள்ளது.

ஒரு காலத்தில் போர்த்துகீசிய காலனியாக விளங்கியதால் தமன் நகரத்தில் ஏராளமான கிறித்துவ தேவாலயங்கள் மற்றும் பழமையான கட்டிடங்கள் நிரம்பியுள்ளன. மோதி தமன் பகுதியில் உள்ள ‘சர்ச் ஆஃப் போம் ஜீஸச்’ எனும் தேவாலயம் இவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

போர்த்துகீசிய கட்டிடக்கலை அம்சங்கள் மற்றும் அக்காலத்திய கலைஞர்களின் கைவினைத்திறன் போன்றவற்றை இந்த தேவாலயம் பிரதிபலிக்கிறது. 17ம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட ‘அவர் லேடி ஆஃப் ரோசரி’ எனும் மற்றொரு தேவாலயம் தமன் நகரத்திலுள்ள மிகப்பழமையான மதச்சின்னமாக கருதப்படுகிறது.

எதிரிகளின் முற்றுகைகளை சமாளிப்பதற்காக போர்த்துகீசியர்கள் பல கோட்டைகளையும் கட்டியுள்ளனர். ஃபோர்ட் ஆஃப் செயிண்ட் ஜெரோம் மற்றும் ஃபோர்ட் ஆஃப் தமன் ஆகிய இரண்டும் அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

கம்பீரமான இந்த கோட்டைகள் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்கின்றன. ஒரு பழமையான கலங்கரை விளக்கமும் தமன் நகரத்தில் அமைந்துள்ளது.

Please Wait while comments are loading...