சில்வாஸா - இயற்கையின் மடியில் அமைதிப்பிரதேசம்!

தாத்ரா &  நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் தலைநகரமாக இந்த சில்வாஸா விளங்குகிறது. போர்த்துகீசிய ஆட்சிக்காலத்தில் இந்நகரம் ‘விலா டி பாகோ டி’ஆர்காஸ்’ என்ற பெயரால் அறியப்பட்டிருக்கிராது. சந்தடி நிறைந்த நகரங்களிலிருந்து விலகி அமைந்திருப்பதால் இந்த நகரம் இயற்கை ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. இந்நகரத்தின் போர்த்துகீசிய கலாச்சாரத்தை ரசிப்பதற்காகவும் பயணிகள் அதிகம் விஜயம் செய்கின்றனர்.

19ம் நூற்றாண்டு வரை இந்த சில்வாஸா நகரம் சாதாரண ஒரு கிராமமாகவே இருந்து வந்தது. 1885ம் ஆண்டில் போர்த்துகீசிய அரசாங்கம் தராரா எனும் இடத்திலிருந்து இந்த சில்வாஸாவிற்கு தலைநகரத்தை மாற்றியது.

அதன்பின்னர் அதிகாரபூர்வமாக இது ஒரு நகரமாக மாற்றப்பட்டு ‘விலா டி பாகோ டி’ஆர்காஸ்’ என்ற பெயராலும் அழைக்கப்பட ஆரம்பித்தது. தற்போது தாத்ரா &  நகர் ஹவேலி பிரதெசத்தில் சுற்றுலா மேற்கொள்ள உதவும் கேந்திரமாக அறியப்படுகிறது.

காட்டுயிர் அம்சங்கள் மற்றும் இயற்கை சுற்றுலா போன்றவற்றில் விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் அதற்கேற்ற இயற்கை சுற்றுலா ஸ்தலமாக சில்வாஸா பிரபல்யமடைந்து வருகிறது.

முக்கிய சுற்றுலா அம்சங்கள்

சில்வாஸாவில் பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் ஏராளமான அம்சங்கள் நிரம்பியுள்ளன. இவற்றில் பிரதானமானது இங்குள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயம் ஆகும். இது புராதன போர்த்துகீசிய கட்டிடக்கலை பாணியில் அமைந்திருக்கிறது.

தாத்ரா &  நகர் ஹவேலி பிரதேசம் பல்வேறு பூர்வகுடி இனத்தார் வசித்த இனம் என்பதால் அவர்களது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் பற்றி தெரிந்துகொள்ள இங்கு ‘டிரைபல் கல்ச்சுரல் மியூசியம்’ எனும் அருங்காட்சியகத்திற்கு விஜயம் செய்யலாம்.

காட்டுயிர் ரசிகர்கள் வசோனா லயன் சஃபாரி எனும் காட்டுச்சுற்றுலா வனப்பகுதிக்கு விஜயம் செய்து மகிழலாம். இது சில்வாசாவிலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த வனப்பகுதியில் குஜராத் கிர் சரணாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட சிங்கங்கள் வசிக்கின்றன.

மேலும், சில்வாசாவிலிருந்து சுமார் 40 கி.மீ தூரத்தில் தாமினி கங்கா ஆற்றில் கட்டப்பட்டுள்ள மதுபன் அணையும் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக அமைந்திருக்கிறது.

சில்வாசாவிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் தாத்ரா பார்க் எனும் அழகிய பூங்கா ஒன்றும் உள்ளது. இங்கு பல ஹிந்திப்படங்களின் பாடற்காட்சிகள் படம்பிடிக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வனகங்கா எனும் ஒரு அழகிய ஏரியும்  சில்வாசாவில் தவறவிடக்கூடாத அம்சமாகும். இந்த இடமும் சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் பிரசித்தமாக அறியப்படுகிறது.

தமன்கங்கா ஆற்றில் உருவாகியுள்ள ஒரு பெரிய நீர்த்தேக்க பகுதி துதினி எனும் இடத்தில் உள்ளது. இது ஒரு முக்கியமான நீர்விளையாட்டு கேந்திரமாகவும் பயன்படுகிறது.

இந்த நீர்த்தேக்க பகுதியை சுற்றிலும் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் அடிவார மலைகள் காணப்படுகின்றன. சில்வாசாவிலிருந்து சுமார் 14 கி.மீ தூரத்தில் உள்ள லுஹரி எனும் இயற்கை அமைதியும் எழிலும் நிரம்பிய இடம் இயற்கை ரசிகர்கள் மிகவும் விரும்பும் இடமாக அமைந்துள்ளது.

கான்வெல் எனும் மற்றொரு இடமும் முக்கியமான இயற்கை எழிற்பிரதேசமாக சில்வாசாவிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கு அற்புதமான மலை எழிற்காட்சிகள் காணக்கிடைக்கின்றன.

பசுமையான மலைச்சிகரங்கள், புல்வெளிப்பள்ளத்தாக்குகள், மலைச்சரிவு தோட்டப்பூங்காக்கள்  போன்றவை நிரம்பி வழியும் இப்பகுதியில் நவீன வசதிகளைக்கொண்ட ரிசார்ட் விடுதிகள் அமைந்துள்ளன. சகர்டோட் எனும் ஆறு இப்பகுதியின் அடர்ந்த காடுகள் வழியே புரண்டோடுகிறது.

சாத்மலியா டீர் பார்க் எனும் மான்கள் சரணாலயமும் சில்வாசாவில் ஒரு முக்கியமான இயற்கை சுற்றுலா அம்சமாக அமைந்திருக்கிறது. இங்கு பலவகை மான் இனங்கள் மற்ற இதர உயிரினங்கள் வசிக்கின்றன.

சில்வாசாவிற்கு தெற்கே சுமார் 40 கி.மீ தூரத்தில் கௌஞ்சா எனும் பழங்குடி கிராமம் ஒன்றும் உள்ளது. சிவபெருமானுக்காக அமைக்கப்பட்டிருக்கும் பிந்த்ராபின் கோயில் சில்வாசாவில் மற்றொரு முக்கியமான அம்சமாகும்.

Please Wait while comments are loading...