ஜலந்தர் பீச், தியூ

தியூ நகரத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் இந்த ஜலந்தர் பீச் அமைந்திருக்கிறது. புராணிக அசுரனின் பெயரால் இந்த கடற்கரை அழைக்கப்படுகிறது. இந்த அசுரனுக்கான கோயில் ஒன்றும் இந்த கடற்கரையை ஒட்டிய ஒரு குன்றின்மீது அமைந்துள்ளது.

புராணக்கதைகளின்படி விஷ்ணுக்கடவுளின் சுதர்சன சக்கரத்தால் இந்த அசுரன் வதம் செய்யப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த கடற்கரைக்கு அருகிலேயே சந்திரிகா தெய்வத்துக்கான கோயில் ஒன்றும் அமைந்திருக்கிறது.

அழகு, அமைதி மற்றும் சாந்தம் போன்ற அம்சங்கள் ஒன்று சேர்ந்து காட்சியளிக்கும் இந்த கடற்கரைப்பகுதி ஏகாந்தமாக விடுமுறையை கழிக்க விரும்பும் இயற்கை ரசிகர்களுக்கும் மிகவும் ஏற்றதாக உள்ளது.

கடற்கரையை ஒட்டி அணிவகுத்திருக்கும் தென்னை மரங்களின் நிழலில் ஓய்வெடுத்தபடி அமைதியான கடற்பரப்பை ரசிக்கும் அனுபவம் மனதிற்கு புத்துணர்வூட்டக்கூடிய ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை.

அதிக ஆழமான நீரோட்டங்கள் ஏதும் இல்லாமல் அமைதியோடு காட்சியளிக்கும் இந்த கடற்கரை நீர்ப்பரப்பில் பல நீர்விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்களிலும் பயணிகள் ஈடுபடலாம்.

நகர்ப்பகுதிக்கு அருகிலேயே அமைந்துள்ள இந்த கடற்கரைப்பகுதியில் பல்வேறு அழகுபடுத்தும் பணிகள் மற்றும் மின் விளக்கு அமைப்புகள் போன்றவை நிறைவேற்றப்பட்டிருப்பதால் சுற்றுலாப்பயணிகள் விரும்பும் தூய்மையான சூழலுடன் இந்த கடற்கரை காட்சியளிக்கிறது.

Please Wait while comments are loading...